ஆடு திருடன்!
கொள்ளக்குடி என்னும் கிராமத்தில், முத்து என்ற ஒரு ஆடு மேய்ப்பவன் இருந்தான். அவன் மிகவும் பேராசைக்காரனாக இருந்தான். காசு பணம் செலவில்லாமல் தன்னுடைய ஆட்டு மந்தையைப் பெருக்குவதற்கு ஒரு யோசனை செய்தான்.ஒருநாள்-காட்டுக்கு சென்று, ஒரு ஓநாய் குட்டியை எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தான் முத்து.ஓநாய்க்குட்டி வளர்ந்ததும், மற்ற ஆட்டு மந்தைகளில் புகுந்து, ஆடுகளைத் திருடி வருவதற்கு ஓநாய்க்கு பயிற்சியளித்தான்.ஓநாய், இரவு நேரத்தில் அண்டை அயலிலிருக்கும், ஆட்டு மந்தைகளின் உள்ளே புகுந்து, சில ஆடுகளைத் திருடி வரும்.ஒரு ஆட்டை ஓநாய்க்கு உணவாகக் கொடுத்து விட்டு, மற்ற ஆடுகளை தனது மந்தையோடு சேர்த்துக் கொள்வான் முத்து.தங்கள் மந்தையில் ஆடுகள் திருடு போவதை கண்டவர்கள், மந்தைகளுக்கு அதிக அளவு கட்டுக் காவல்களை நியமித்தனர்.அதனால் ஓநாயால் ஆடுகளைத் திருடி வர முடியவில்லை.ஓநாய் ஆடுகளைத் திருடி வராததால், அவன் அதற்குச் சரியான உணவு கொடுப்பதில்லை.இரண்டொரு நாட்கள் பசியும், பட்டினியுமாகக் கிடந்த ஓநாய், முத்துவின் மந்தையில் உள்ள ஆடுகளை ஒவ்வொன்றாக அடித்து தின்னத் துவங்கியது.தன் மந்தையின் ஆடுகள் குறைவதை கண்டு திடுக்கிட்டான் முத்து.ஒருநாள்-ஓநாய், தன் ஆடுகளில் ஒன்றை அடித்துத் தின்பதை பார்த்து விட்டான்.“நன்றி கெட்ட ஓநாயே! என் மந்தையிலேயே உன்னுடைய திருட்டு வேலையை ஆரம்பித்து விட்டாயா?” என்று கோபத்தோடு கேட்டான் முத்து.ஓநாய் சிரித்தபடியே, “திருட்டு தொழிலை, நீர்தானே எனக்கு கற்றுக் கொடுத்தீர்... நீர் கற்றுக் கொடுத்த தொழிலை செய்யாமல், சோம்பலாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்க முற்பட்டேன்!” என்று கூறிவிட்டு, ஓடிப்போய் விட்டது.அன்றிலிருந்து, முத்துவின் மந்தையிலிருந்து தொடர்ந்து ஆடுகள் திருடு போகத் துவங்கின.தன்னால் வளர்க்கப்பட்டு, திருடக் கற்றுக் கொடுக்கப்பட்ட ஓநாய் தான், தன் ஆடுகள் காணாமல் போவதற்கு காரணம் என்பது முத்துவுக்கு நன்றாக தெரிந்தது.வினை விதைத்தவன் வினையைத்தானே அறுவடை செய்ய முடியும்... அவனுடைய பேராசைப் புத்தியே அவனுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.தன்வினை தன்னைச் சுடும் என்பது பழமொழி. ஒருவன் நல்லதைச் செய்து வந்தால், அவனுக்கு நன்மைகள் விளையும்.தீய செயல்களில் ஈடுபட்டால், அதே தீமை அவன் வாழ்க்கையிலும் வரும். அதற்குதான் எப்போதும் நல்லதையே நினைங்க; நல்லதையே செய்ங்க குட்டீஸ்.