கடவுள் துணை!
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, பணகுடி வடக்கு இந்து நடுநிலைப் பள்ளியில், 1988ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!கணித ஆசிரியர் ஆனந்தராஜ், ஒவ்வொரு வாரமும், மாதிரி தேர்வு நடத்துவார். அன்று வழக்கம் போல், விடைத் தாள்களை திருத்தி எடுத்து வந்திருந்தார்.உடன் படித்த சங்கர், தேர்வு தாளின் முதல் பக்க முகப்பு பகுதியில், மூன்று கடவுள் பெயர்களை குறிப்பிட்டு, 'துணை' என்று எழுதியிருந்தார். அவருக்கு நுாற்றுக்கு, ஆறு மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்தது.இதை குறிப்பிட்டு, 'எந்த கடவுளையும் வணங்கலாம். அது தவறல்ல; நல்ல பழக்கம் தான். ஆனால், விடைத் தாளில் அதை குறிப்பிட வேண்டாம். தேர்வில் தகுந்த விடையை நீங்கள் தான் எழுதியாக வேண்டும்; கடவுள் வந்து எழுத மாட்டார். எனவே, பாடங்களை நன்றாக படிப்பது அவசியம்...' என அறிவுரைத்தார் ஆசிரியர். வருத்தம் தெரிவித்து, 'இனி அந்த தவறை செய்யமாட்டேன்...' என உறுதி கூறி, விடைத்தாளை பெற்று கொண்டார் அந்த மாணவர்.தற்போது, எனக்கு, 44 வயதாகிறது; பள்ளி நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம் அந்த சம்பவத்தை நினைவூட்டி சிரித்து மகிழ்கிறோம். - எம்.வேலாயுதம், திருநெல்வேலி.தொடர்புக்கு: 94884 26961