உள்ளூர் செய்திகள்

தங்க நாணயம்!

சோலைமலை நாட்டின், தலைநகரத்துக்கு வந்தார் முனிவர். வழியில் தங்க நாணயம் ஒன்று கிடந்தது.அதைக் கண்டதும், 'எளிமையாக வாழும் எனக்கு தங்க நாணயம் தேவையில்லை; தேவையுள்ள ஏழை, எளிய மக்களில் யாருக்காவது தரலாம்' என எண்ணியபடி எடுத்து வைத்துக்கொண்டார். நாட்டை சுற்றி வந்தவர், மகிழ்ச்சி, திருப்தியுடன் மக்கள் வாழ்வதை கண்டார். தங்க நாணயத்தை யாரிடம் தருவது என யோசித்தவாறு சத்திரத்தில் தங்கினார்.மறுநாள் காலை -தியானம் செய்தபோது, வீதியில் பலத்த சத்தம் கேட்டது. வெளியே வந்தார் முனிவர். மன்னர் மார்த்தாண்டன், படை வீரர்களுடன் செல்வதை கண்டார்.முனிவரை கண்டதும் வணங்கியபடி, 'நாட்டின், எல்லையை விரிவுப்படுத்துவதற்காக மாவேலிக்கரை நாட்டை பிடிக்க போகிறேன்... என்னை ஆசிர்வதியுங்கள்...' என்றார் மன்னர்.சற்று நிற்க கூறி, சத்திரத்தின் உள்ளே சென்றார் முனிவர். வழியில் கிடைத்த தங்க நாணயத்தை எடுத்து வந்து மன்னரிடம் தந்தார்.'எதற்காக, இந்த தங்க நாணயத்தை தருகிறீர்கள் ஐயா...' என கேட்டார் மன்னர்.'இதை வழியில் கண்டு எடுத்தேன்; இந்த நாட்டில் பலரிடம், கொடுக்க முயற்சித்தேன். யாரும் வாங்க முன்வரவில்லை; இருப்பதை வைத்து மகிழ்வுடன் வாழ்வதாக கூறினர்... 'இவ்வளவு பெரிய நாடு இருந்தும், திருப்தி அடையாமல் பக்கத்து நாட்டை யுத்தம் செய்து கைப்பற்ற நினைக்கிறீர்கள் அல்லவா... உங்களுக்கு திருப்தியில்லாத மன நிலை உள்ளதையே இது காட்டுகிறது. அதனால், தங்க நாணயத்தை பெறும் தகுதி உங்களுக்கு தான் உள்ளதாக எண்ணுகிறேன்; மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள்...' என்றார் முனிவர்.எதுவும் பேச முடியாமல் தலைக்குனிந்தார், மன்னர். தவறை உணர்ந்து, படை எடுப்பை கைவிட்டு அரண்மனைக்கு திரும்பினார்.குழந்தைகளே.. போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து என்பதை புரிந்து கொள்ளுங்கள்.அருவிக்கரை அபிநந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !