உள்ளூர் செய்திகள்

நீதிக்கு இலக்கணம்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், சத்திரம் புளியங்குளம் நடுநிலைப் பள்ளியில், 1957ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...ஏழை குடும்பத்தை சேர்ந்த நான், வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தேன். இதை பொறுக்காத ஒருவன், என் கால்சட்டையின் பின்புறமிருந்த சிறு கிழிசலை பெரிதாக்கி விட்டான். மறு நாள், அந்த கிழிசலை சுட்டிக்காட்டி, 'தபால்பெட்டி வருதுடா...' என, கிண்டல் செய்ய, சக மாணவர்கள் சிரித்தனர். மிகவும் அவமானமாக உணர்ந்தேன். தலைமை ஆசிரியை பாலாமணியின் நெருங்கிய உறவினரான அந்த மாணவன் மீது புகார் கூறவில்லை. ஆனால் மனம் வெறுத்து பள்ளி செல்வதை தவிர்த்தேன்.இரண்டு நாட்களுக்கு பின், ஓர் ஆளை அனுப்பினார் தலைமை ஆசிரியை. வந்தவரிடம் என் மனக்குறையை தெரிவித்தேன். உடனே அந்த மாணவனை வேறு பள்ளிக்கு மாற்றியதுடன், என்னை தேடி வந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரது அறிவுறுத்தல்படி படித்து, சொந்தமாக தொழில் செய்கிறேன்.அந்த தலைமை ஆசிரியையின் பரிவு, நீதிக்கு இலக்கணமாக திகழ்ந்தது. இடுக்கண் வரும்போதெல்லாம் அவரை மனதில் நிறுத்தி முன்னேறுகிறேன்.- க.சோணையா, மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !