உள்ளூர் செய்திகள்

வழிகாட்டி!

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, கரிசூழ்ந்தமங்கலம் அரசு பள்ளியில், 1961ல், 5ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!அன்று கடும் வெயிலாக இருந்தது. முற்பகல் வகுப்பு முடிந்ததும், 1 ரூபாய் நாணயத்தை தந்து, 10 தபால் அட்டைகள் வாங்கி வர கூறினார் வகுப்பாசிரியர் சுவாமிநாதன். செருப்பு வாங்கி அணிய வசதி இல்லாத குடும்பத்தை சேர்ந்தவள் நான். வெறுங்காலுடன் தபால் நிலையத்திற்கு புறப்பட்டேன். சுட்டெரிக்கும் வெயிலில் சூடான மணலில் ஓடிச்சென்று வாங்கி வந்தேன். உடனடியாக சரி பார்த்த ஆசிரியர், கூடுதலாக ஒன்று இருந்ததை கண்டார். அதை திரும்ப கொடுத்து விடுமாறு கூறினார். சிறிதும் தாமதிக்காமல் கொளுத்தும் வெயிலில், அனல் பறந்த மணலில் மறுபடியும் ஓடினேன். தபால் அலுவலக மாஸ்டரிடம் திரும்ப கொடுத்தபோது, சின்னதாக புன்னகை புரிந்து, முதுகில் தட்டி கொடுத்தார். அது நெகிழ்வாக இருந்தது.தற்போது, என் வயது, 73; உத்தரபிரதேசம், வாரணாசி பல்கலைக்கழகத்தில் நுாலகராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் கற்பித்த நேர்மையை வாழ்க்கையில் கடைபிடித்து, பணித்தளத்தில் நற்பெயர் பெற்றேன். என் குழந்தைகளும் பின்பற்றும் விதமாக வழிகாட்டினேன். அவர்களும் அதை போற்றி வாழ்வது பெருமிதம் தருகிறது.- காஞ்சனா, சென்னை.தொடர்புக்கு: 93636 73460


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !