உள்ளூர் செய்திகள்

ரத்த வியர்வை!

மருத்துவ அறிவியல் மற்றும் சுகாதார தொடர்பான துறையில், மருத்துவர்களுக்கு, உலக தரம் வாய்ந்த, மருத்துவ அறிவியல் தகவல்கள் அடங்கிய, மருத்துவ நூல்களை வெளியிடுகிறது, எஸ்.ஆர்.எல்., பப்ளிஷிங் நிறுவனம்.இந்த பதிப்பகத்தின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின், மிடில் டவுனில் அமைந்துள்ளது. மாணவர், ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு, சிறந்த மருத்துவ தகவல்களை அளிக்க வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள்.அனஸ்தீசியா, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய், சர்க்கரை நோய் சம்பந்தப் பட்ட தகவல்கள் மட்டு மல்லாது, அனைத்து விதமான நோய்கள் பற்றிய விசேஷ கட்டுரைகளை, அந்தந்த பிரிவில் ஸ்பெஷலிஸ்ட்களாக உள்ள மருத்துவர்களை, ஆசிரியர்களாக கொண்டு வெளிவருகிறது இந்த மருத்துவ இதழ்.நீரிழிவு நோயின் சமீபத்திய ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில், நீரிழிவு நோய்க்கான பதிப்புகளுக்கு ஆசிரியராக இருப்பதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து, அனைத்து ஆராய்ச்சி வல்லுநர்களும் விண்ணப்பித்தனர். அதில், இந்தியாவிலிருந்து, டாக்டர் எஸ்.எம்.ராஜேந்திரன் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது இந்தியர்களாகிய நம் எல்லாருக்கும் மிகவும் பெருமை சேர்க்கிறது. இவரது சாதனைகளில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.ஒருமுறை, இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, 'ரத்த வியர்வை' வியர்க்கும். அவ்வப்போது, உடல் முழுவதும் ரத்தமாக வியர்த்து கொட்டும். இதற்கு, இலங்கையில் உள்ள எந்த டாக்டர்களாலும், 'ட்ரீட்மென்ட்' கொடுக்க முடியவில்லை. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவர்களிடம் காண்பித்தும் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை என்னவிதமான நோய் என்பதையும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.கடைசியாக, இந்தியாவிற்கு வந்தனர். இங்கும் எத்தனையோ மருத்துவர்கள் போராடியும், இந்த ரத்த வியர்வை வியர்ப்பதற் கான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நபரை நம் டாக்டரிடம் அனுப்பினர். முழு மூச்சுடன் அந்த இளைஞரை சோதித்து பல ஆராய்ச்சிகளை இரவும் பகலும் மேற்கொண்டார். பின், அவரது வாழ்க்கையை பற்றி விசாரித்த போது தான், அந்த உண்மை தெரிந்தது.அந்த இளைஞரின் கண் முன்பாகவே, அவனது தாயாரும், சகோதரியும் வன்கொடுமை செய்யப்பட்டு, இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமான காட்சியின் வேதனை, மனதை அழுத்தும் போது, அதை பற்றி, நினைக்க ஆரம்பித்த உடனேயே, ரத்த வியர்வை வியர்க்க ஆரம்பித்தது. பிறகு ஆறுதல் வார்த்தைகள் கூறி, 'கவுன்சிலிங்' கொடுத்து, மனதை சாந்தப் படுத்திய பின், இப்படிப்பட்ட ரத்த வியர்வை, அந்த இளைஞருக்கு வரவே இல்லை. மருந்து இல்லாமல், 'கவுன்சிலிங்' மூலமே நோயாளியை குணப்படுத்திய இந்த கண்டுபிடிப்பு, மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.தற்போது, குழந்தைகளுக்கான சர்க்கரை நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் டாக்டர் ராஜேந்திரன். அவரது பணியில் சிகரங்களை தொட்டு, நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க சிறுவர்மலர் சார்பாக வாழ்த்துக்கள்!இவரை வாழ்த்த விரும்புவோர் இந்த எண்ணில் வாழ்த்தலாம். தொ.பே.எண்: 98941 18899- பி.கே.டி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !