உள்ளூர் செய்திகள்

வீராங்கனைகள்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் அது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த பிரதேசங்களில் ஒன்று டகோமே. அதை இன்று, 'பெனின்' என்ற பெயரால் அழைக்கின்றனர்.இந்த டகோமேயை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் கெஷோ. அவர் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்.இத்தனை நூற்றாண்டுகளாக ராணுவம் ஆண்களை வைத்தே திறம்பட நடத்தப்பட்டு வருகிறது. ஏன் பெண்கள் ராணுவம் என்ற அமைப்பு ஒன்று இல்லை என்று யோசித்தார்.'நம் காலத்தில் நாமாவது பெண்கள் ராணுவத்தை ஏற்படுத்திக் காட்ட வேண்டும். ஆணுக்குப் பெண் ராணுவத்திலும் சளைக்க மாட்டார்கள் என்ற உண்மையை உலகுக்கு நிரூபிக்க வேண்டும்' என்று உறுதி ஏற்படுத்திக் கொண்டார்.அதன் விளைவாகத் தோன்றியதுதான் பெண்கள் ராணுவம். இதற்குரிய தகுதிகள் பதினெட்டு வயது. அத்துடன் கட்டுக்கோப்பான உடல்வாகு. ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற தீவிர ஆவல். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறிகொண்ட பெண்களை இந்த ராணுவத்துக்குத் தேர்ந்தெடுத்தனர். ஆண்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை விடக் கடுமையான பயிற்சி இந்தப் பெண்களுக்கு வழங்கப்பட்டது.அவர்களின் பயிற்சிகள் மிகவும் கடினமாகவும், கொடூரமானவையாகவும் இருந்தன. பதினைந்தடி நீளமுள்ள முட்கள் பதிக்கப்பட்ட சுவரில் ஏறுவதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. நிலக்கரியைப் பற்ற வைத்து அதன் கொடுமையான தீச்சுவாலைகளின் நடுவே சர்வ அலட்சியமாக நடந்து செல்வதற்குப் பயிற்சி தரப்பட்டது.இப்படி உலகில் எதைச் செய்ய முடியாது என்று மற்றவர்கள் நம்பினார்களோ, அதை எல்லாம் செய்வித்து அவர்கள் பயிற்சி பெற்றனர். இதன் காரணமாக ஆண்களின் ராணுவம் வலிமை இழந்துவிட்டது போலத் தோன்றியது.மன்னரான கெஷோ தன் நாட்டு ஆண்கள் ராணுவத்தை விடப் பெண்கள் ராணுவமே மிகமிக வலிமை வாய்ந்தது என்று பெரிதும் நம்பினார் . மற்றவர்களிடம் பெருமை பொங்கச் சொல்லியும் வந்தார்.டகோமே நாட்டுக்கு அப்போது எதிரிகளாக விளங்கியவர்கள் எக்பா என்னும் பழங்குடியினர். அவர்கள் மேல் தாக்குதல் நடத்தி அவர்களைப் பணிய வைக்கத் திட்டம் தீட்டினார் கெஷோ.இந்தத் தாக்குதலுக்கு அவர் ஆண் ராணுவத்தை நம்பவில்லை. தமக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்கப்போவது பெண் ராணுவமே என்று நம்பிய அவர் எக்பா மேல் போர் தொடுக்கப் பெண் ராணுவத்தையே ஏவினார்.அது கி.பி.1851ம் ஆண்டு. அப்போது தான் இந்த தாக்குதல் ஆரம்பித்தது. பழங்குடியினரான எக்பாவும் ஏப்பை சாப்பையில்லை. வீரர்களின் மறு உருவம் அவர்கள் தான் என்று உலக அளவில் பெயர் பெற்றிருந்தனர்.எக்பா குடியினருடன் சண்டையிடுவது எமனிடம் போய் வலுச்சண்டை செய்வதற்கு ஒப்பானது என்பதுதான் எல்லாருடைய அபிப்ராயமும். என்றாலும், பெண்கள் ராணுவப்படை இதைக் கேட்டு மிரண்டு போய் விடவில்லை. வெற்றி அல்லது வீர மரணம் என்ற மனத்திடத்துடன் ஆவேசமாக எக்பா பழங்குடியினரை அவர்கள் எதிர்த்தனர்.கடும் சண்டை நடைபெற்றது. எக்பா படை எவ்வளவு வலிமை பெற்றதோ. அதற்குத் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் கிடையாது என்ற ரீதியில் அவர்களின் மோதல் நடைபெற்றது.எக்பா படையில் மூவாயிரம் பேர் இருந்தனர். ஆனால், கெஷோவின் பெண்கள் ராணுவத்தில் இருநூறு, முன்னூறு பேர்கள்தான் இருந்தனர். அவர்களை எக்பா சுற்றி வளைத்தபோது அவர்கள் பலப்பல யுக்திகளைக் கையாண்டு, அதிரடித் தாக்குதல் நடத்தி எக்பா படை முழுவதையும் நாசமாக்கினர்.இன்னொரு பக்கத்தில் பதினைந்து பேர் கொண்ட ஒரு சின்ன அணி பெண்கள் ராணுவத்தை நூற்றுக்கணக்கான எக்பாக்கள் வலிமையான ஆயுதத்துடன் சுற்றி வளைத்துக் கொண்டனர்.பெண்களின் ஆவேசம் கட்டுக்கடங்காததாயிற்று. அவர்கள் பதினைந்து பேரும் அத்தனை எக்பா வீரர்களையும் கொன்று குவித்தனர். இந்தக் கடுமையான போரில் இறுதி வெற்றியைக் கெஷோவின் பெண்கள் ராணுவமே பெற்றது.இந்தப் படை எக்பா ராணுவம் முழுவதையும் சீர் குலைத்துவிட்டது. என்றாலும், பெண்கள் படையிலும் ஏராளமான பெண்கள் வீர மரணம் அடைந்தனர்.போரின் வெற்றிக்குப் பிறகு பெண்கள் ராணுவத்தில் புதிதாகச் சேர வேறு யாரும் முன் வரவில்லை. பழைய ராணுவப் பெண்கள் தங்கள் உற்சாகத்தை இழந்திருந்தனர்.பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கெஷோ கடைசியில் பெண்கள் ராணுவத்தைக் கலைத்துவிட்டார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !