உள்ளூர் செய்திகள்

அவன் பெயர் அனிருத்! (26)

சென்றவாரம்: அனிருத் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் நடந்துகொண்டிருந்தது. 'கிறிஸ்டோபருடன் தான் போவேன்' என்று பிடிவாதமாக சொன்னான் அனிருத். இந்நிலையில் ஜோதிலட்சுமியும், அனிருத்தும் தனியறையில், இரண்டு மணி நேரம் பேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி -தனியறையில்-அனிருத்தை வாரி, அணைத்து கன்னங்களிலும், நெற்றியிலும் முத்தமிட்டாள் ஜோதிலட்சுமி. தாயின் உமிழ்நீர் பரவச மூட்டியது. தலையைக் கோதி விட்டாள்; நெஞ்சோடு சேர்த்து, தட்டா மாலை சுற்றினாள்; உப்பு மூட்டை துாக்கியபடி, அறையை, நான்கு முறை சுற்றினாள்.அம்மாவின் வாசனை, அனிருத்தின் நாசிகளில் சுழன்றடித்தது.கை விரல்களை நீவி, சொடுக்கு எடுத்தாள். அவனுக்காக செய்து வந்த தேங்காய் பர்பியை ஊட்டினாள்.நினைவு, காட்டாற்று வெள்ளமாய் பெருக்கெடுத்தது.பிரசவ வார்டில் அலறி துடித்தாள், ஜோதிலட்சுமி.பிரசவம் பார்க்கும் மகப்பேறு மருத்துவர், குழந்தையை வெளியே இழுத்தார்; சுத்தம் செய்து, தொப்புள் கொடியை கத்தரித்தார்.ஜோதிலட்சுமி முகத்துக்கு நேராக, குழந்தையின் முகத்தைக் காட்டினார்.'டைட் குளோசப்'பில், 'இஹ்...' என, முறுவலித்தது குழந்தை.ஜோதிலட்சுமி, தாய்பால் தந்தாள்; அது ரத்தமும், பாசமும் கலந்தது.பால் குடித்து, எதுக்கலித்த குழந்தையை, தோளில் சாத்தி, தட்டி கொடுத்தாள்; பொம்மைகள் தொங்கும், தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடினாள்.அது ஒரு தேவகானம்; அம்மாவின் பாட்டுக்கு, மதி மயங்காத குழந்தை உண்டோ... பி.சுசீலா, சின்னக்குயில் சித்ரா, வாணி ஜெயராம், சின்மயி குரல்களை தோற்கடிக்கும் குரல்வளம்.பெயர் சூட்டு விழா நடந்தது.உற்றார், உறவினர், நண்பர்கள் குழுமியிருந்தனர்.ஆயிரம் பெயர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாய் குழந்தையை நோக்கி உச்சரித்தாள், ஜோதிலட்சுமி.'அனிருத்...' பெயரை நிறுத்தி, உச்சரித்தாள். கூடியிருந்தவர்கள் ஆமோதித்து, கைத் தட்டினர். அந்த பெயரை மும்முறை, குழந்தை காதுகளில் கிசுகிசுத்தாள். உலகின் உயரிய விருதை, வழங்கியது போல் உணர்ந்தான், அனிருத்.குழந்தையை ஜோதிலட்சுமி குளிக்க வைக்கும் காட்சியை காண, கண்கோடி தேவை. நீட்டிய கால்களில் குப்புறப் போட்டு வெது வெதுப்பான நீரில், குளிக்க வைப்பாள். பேபி சோப்பை, உடல் முழுக்க பூசுவாள்; தலையில், பேபி ஷாம்பு போடுவாள்; வாயில் தண்ணீர் புகா வண்ணம், லாவகமாக நீரை ஊற்றுவாள்; குளியல் முடிந்ததும், பூ துவாலையால் ஒத்துவாள்; காதுகளில் நீர் புகா வண்ணம் ஊதி விடுவாள்; தலைகேசத்துக்கு சாம்பிராணி புகைக் காட்டுவாள். பின், சொட்டு மருந்து புகட்டுவாள்.குழந்தையுடன் மழலை பேசி கொஞ்சுவாள்.'அச்சுக்குட்டி... ங்கா சாப்டுறியா...மியாவ்... மியாவ்... உச்சா போறியா...' அனிருத்தின் மலத்தையும், சிறுநீரையும் பக்தை போல பூசுவாள்.மருத்துவரின் அறிவுரைப்படி, தடுப்பூசிகளை, வேண்டிய நேரத்தில் போட்டாள்; தடுப்பூசி போட்ட புட்டத்திற்கு, ஒத்தடம் கொடுத்தாள்.அனிருத் தவழும் அழகை ரசித்தாள்; அமர்ந்திருக்கும் அழகை ஆராதித்தாள்; 1000 பட்டப்பெயர்கள் சூட்டினாள்.முழங்காலிட்டு, இருகை நீட்டி அழைப்பாள்; கைகளை நீட்டி, 'ஆம்ஸ்ட் ராங்' நடை நடந்து, அம்மா நெஞ்சில் போய் ஒட்டுவான் அனிருத்.ஒண்ணே கால் வயதில், ஜொள்ளு வடியும் வாயால், 'ம்மா...' என அழைத்தான்; காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து, கரையும் காகத்தை தனி பாஷை வைத்து அழைத்த அனிருத்தை, வெளியே புறப்படும் போது, துாக்கி சென்று, வேடிக்கை காட்டினார் அப்பா; யானையாகி நாலு கால் அமைத்து, அம்பாரியில் அமர வைத்து, உலா வருவார்.இரண்டு வயது அனிருத், ரெட்டைவால் ரெங்குடுவாய் செயல்படுவான்; வீட்டுக்குள் ஓடி, பொருட்களை உடைப்பான்; பக்கத்து வீட்டு குழந்தையை, கிள்ளி விட்டு வருவான்.அவன் பேச்சு, ஜோதிலட்சுமிக்கு நன்கு புரியும். தமிழை, தமிழில் மொழி பெயர்ப்பாள்.இரண்டரை வயதில் -மூன்று வயதில் -மூன்றரை வயதில் -காணாமல் போன தினத்துக்கு முந்தின நாள் வரை -தாய் பாசத்தை நடப்பு நொடியில் அனுபவித்தான், அனிருத். அதில் சுயநலம் இல்லை.'என் வாழ்க்கையின் அர்த்தமே நீ தானடா' என்ற எண்ணமே தொனித்தது. பேய் மழை, பெருமழை கொட்டி தீர்ப்பது போல, பாசத்தை கொட்டி தீர்ப்பாள் அம்மா. கடவுள் சூரியன் என்றால், அம்மா நிலா; சூரியனின் அருளை பெற்று, மகன் மீது பரிபூர்ணமாக பிரதிபலித்தாள் அம்மா நிலா.பழைய நினைவுகளில் தத்தளித்தான், அனிருத்.மறந்து போன தாய்மொழி தமிழ் மீண்டும் எழுந்தது.நான்கடி உயர பாஸ்பரஸ் துண்டாய் மிளிர்ந்தான்.கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது; இதயம் தாறுமாறாய் துடித்தது.''அம்மா...'' என, ஜோதிலட்சுமியை அழைத்தான்; ஓடிப்போய் இறுக கட்டிக் கொண்டான்; கன்னங்களில் முத்தமிட்டான்.''என்னை மன்னிச்சிடும்மா... உன் அருமை, பெருமை மறந்து, நன்றி கெட்டவனாய் நடந்து கொண்டேன்; ரோஜா செடியில், ரோஜா தானே பூக்கும்; பூக்க வேண்டும். நீ, நான் முளைத்த ரோஜா செடி; கோடி கோடி பணத்தை விட, காரை விட, பங்களாவை விட நீதான்ம்மா எனக்கு முக்கியம்... ''இந்த எட்டு ஆண்டுகளில், நான், 'மிஸ்' பண்ணிய தாய் பாசத்தை, இனிமேல், உடனிருந்து அள்ளி பருகுவேன்; 'ஐ லவ் யூ' அம்மா... நீ தேவதைகளின் தேவதை, உலக தாய்களின் மகாராணி. உங்களை பெற்றோராக பெற, நான் முன்னேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...''எட்டு ஆண்டு பிரிவு துயரை கரைத்தான், அனிருத்.நேரம் முடிந்தது. நீதிமன்ற அலுவலகர்கள் கதவைத் திறந்தனர். நீதிபதி முன், அனிருத் நின்றான்.''என்ன முடிவெடுத்தாய் சிறுவனே...'' ஆங்கிலத்தில், வினவினார்.''ஒலிவேரா கிறிஸ்டோபர் அன்னியர்; எனக்கும், அவருக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் தாய் ஜோதிலட்சுமி; தந்தை ஈஸ்வர்; என் பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன்...''''முடிவில் மாற்றமில்லையே...''''இனி வாழ்நாள் முழுவதும், என் பெற்றோருடன் தான் இருப்பேன்; இது சத்தியம்...''தீர்ப்பை வாசித்தார் நீதிபதி.''சிறுவன் அனிருத், ஈஸ்வர் - ஜோதிலட்சுமியின் மகன் என்பது, டி.என்.ஏ., டெஸ்ட் மூலம், நிரூபிக்கப் பட்டுள்ளதால், பெற்றோருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுகிறேன். ஒலிவேரா கிறிஸ்டோபர் மீதான கடத்தல், கொலை வழக்குகளை தனியாக பதிந்து, நடவடிக்கை தொடர பரிந்துரைக்கிறேன். ''இளவேனிலும், சாகித்யாவும் துப்பறிந்து, உண்மையை வெளிக்கொணர உதவியதற்கு, நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது; உலகின் வெல்ல முடியாத சக்தி தாய்மை என்பதை, இவ்வழக்கு உறுதிபடுத்தி இருக்கிறது...''ஒலிவேரா கிறிஸ்டோபர் தனியே, 'குலுங்கி குலுங்கி' அழுது கொண்டிருந்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு பின், டிச., 26, 2017ல், அனிருத், 17 வயது இளைஞனாக, பிளஸ் 2 படிக்கிறான்.பெற்றோருடன், அக்கரைப்பேட்டைக்கு சென்றான். கூடை நிறைய இருந்த ரோஜா இதழ்களை, கடற்கரையில் துாவினான்.'சுனாமியில் பலியான அனைவருக்கும், இதய அஞ்சலி; அந்த ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்...' அனிருத்தின் பிரார்த்தனையை, குற்ற உணர்வுடன் கடல் அலைகள் ஆமோதித்தன.- முற்றும்.- ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !