நம்பிக்கை!
திருநெல்வேலி, நாரணம்மாள்புரம், புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்தேன். ஆண்டு இறுதி தேர்வில், அந்த வட்டாரத்திலிருந்த, 140 பள்ளிகளில், முதல் மாணவனாக வந்தேன். அதற்காக பள்ளி ஆண்டு விழாவில், தினமலர் நாளிதழ் நிறுவனர், டி.வி.ராமசுப்பையர் கரங்களால், 'ஸ்டீல் டிரங்குபெட்டி' பரிசும், பாராட்டும் பெற்றேன். பின், பாளையங்கோட்டை, புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பில் சேர முயன்றேன். நுழைவுத்தேர்வு முடிந்து விட்டதால், சேர்க்க மறுத்து விட்டனர். ஏற்கெனவே படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து சொன்னேன். அந்த பள்ளி தலைமை ஆசிரியர் லுார்துராஜிடம், 'இவனை சேர்க்காமல் விட்டால், சிறந்த மாணவன் ஒருவனை, உங்கள் பள்ளி இழக்கும்...' என, அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்தார். உடனே, சேர்க்கை கிடைத்தது. நன்கு படித்து, முதல் மாணவனாக திகழ்ந்தேன். பள்ளி இறுதி வகுப்பை முடித்த போது, 'உனக்கு உடன் பிறந்தோர் இருந்தால், இதே பள்ளியிலே சேர்த்து விடு...' என நெகிழ வைத்தார், தலைமையாசிரியர். இப்போது என் வயது, 66; வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். உயர்நிலை பள்ளியில் சேர்ந்தபோது நடந்த சம்பவத்தை நினைத்தவுடன், கண்களில் நீர் பெருகுகிறது. என் மீது பூரண நம்பிக்கை கொண்டிருந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.- என்.சம்பத், சென்னை.தொடர்புக்கு: 94431 17808