சண்டை போடப்போறேன்!
ஒரு மரத்தின் கிளையில், காக்கா கூடு கட்டியிருந்தது. அந்த கூட்டில் இரு முட்டைகள் இட்டிருந்தன. அடைகாத்தால் குஞ்சு பொரிந்து விடும். இரு குஞ்சுகளையும் கொஞ்சிக் குலாவலாம், பேணி வளர்க்கலாம் என்று ஆசையுடன் இருந்தது காக்கா.அன்று திடீரென்று பலத்த காற்று வீசியது. ஆடிக் காற்றில், அம்மியும் பறக்கும் என்பார்களே... அது மாதிரியான காற்று. பல மரங்களை வேரோடு பிடிங்கி எறிந்து விட்டது. காக்கையின் கூடும், காற்றோடு கற்றாகப் பறந்து போய்விட்டது.காக்கைக்குக் காற்றின் மீது கோபம் கோபமாக வந்தது. ''அந்தக் காற்றைச் சும்மா விடக்கூடாது. இதோ இந்த அலகால் காற்றைக் குத்திக் கிழிக்கப் போகிறேன்,'' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டது.காற்றை எப்படிப் பழிவாங்கலாம் என்று காக்கை சிந்திக்க ஆரம்பித்தது. ஒரு மாமரத்தின் கிளையில் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தது. எதற்கும் தன் அலகைக் கூராகத் தீட்டிக் கொள்ளலாம் என்று மாமரத்தில் தன் அலகைத் தீட்டிக் கொண்டது.''ஏ காக்கையே! ஏன் என் மரத்தில் உன் அலகைத் தீட்டிக் கொள்கிறாய்? உன் அலகு பட்டு, எனக்கு வலிக்கிறது?''''மன்னித்துக் கொள் மாமரமே! ஆத்திரத்தில் நிதானம் இழந்துவிட்டேன்!''''அப்படி என்ன ஆத்திரம்? யார் மீது ஆத்திரம்?'' மாமரம் காக்கையைக் கேட்டது.''காற்றின் மீதுதான் ஆத்திரம். அது என் கூட்டைக் கலைத்துவிட்டது. அதனால் என் இருவாரிசுகளும் பிறக்கும் முன்பே அழிந்து போய்விட்டன,'' என்றது.''காற்றை குறை கூறி என்ன பயன்? உன் கூட்டை இன்னும் பாதுகாப்பான இடத்தில் கட்டியிருக்க வேண்டும்,'' என்றது மரம்.''பாதுகாப்பான இடத்திற்கு எங்கு போவது? மரக்கிளை உச்சித்தான் பசங்கள் ஏற முடியாத பாதுகாப்பான இடம். உன் மரப்பொந்துகளில் முட்டையிட்டால், பாம்பு வந்து இரவோடு இரவாக முட்டையை விழுங்கிவிடும். உச்சிக்கிளைதான் பாம்பால், மனிதர்களால் ஏற முடியாத பாதுகாப்பான இடம்!'' என்றது.''உன் கூட்டைப் பற்றி சொல்லுகிறாய்? நான் இன்று பெரிய மரமாக வளர்ந்து, பெருங்காற்றையும் சமாளித்து நிற்கிறேன். ஆனால், என் இளமைப் பருவத்தில் காற்றிடம் நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.''என்னை வேரோடு பிடுங்கி எறிந்து விடுகிறேன் என்று, ஆக்ரோஷமாக காற்று வீசும். நான் தலைகுனிந்து, வளைந்து, பணிந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள கற்றுக் கொண்டேன்.''மாடுகள் மேய்ந்துவிடும். மீண்டும் துளிர்ப்பேன். சிறுவர்கள் காரணமில்லாமலே பிடுங்கி எறியப் பார்ப்பர். சற்று வளர்ந்த பிறகும் வீட்டு விசேஷங்களுக்கு என்று இலையைப் பறிப்பதற்காக கிளைகளை ஒடித்துச் செல்வர். நான் என்ன செய்ய முடியும் பொறுமையாக சகித்துக் கொண்டேன். இவ்வளவு தடைகளையும் தாண்டித்தான் இன்று வளர்ந்து நிற்கிறேன். இன்றும் கூட எனக்கு தொந்தரவு, கஷ்டங்கள் தீரவில்லை. காய்க்கும்போது சிறுவர்களிடம் எவ்வளவு கல்லடிபடுகிறேன் தெரியுமா?''உங்களுக்குத்தான் எந்தத் தொந்தரவும் இல்லை. உங்களுக்கு எப்போதும் ராஜ உபசாரம்தான். சாப்பாட்டை வைத்து அழைத்து, முதல் மரியாதை செலுத்துகின்றனர். உங்களை யாரும் வேட்டையாடுவதில்லை. அதனால்தான் ஊரெங்கும் பெருகியிருக்கிறீர்கள். வீடு கட்ட, ரோடு போட இடைஞ்சலாக இருந்தால் என் கிளைகளையோ அல்லது மரங்களையோ வேரோடு வெட்டிச் சாய்த்து விடுகின்றனர்,'' என்று மாமரம் தன் சோகக் கதையைச் சொன்னது.காக்கை தான் மட்டும் கஷ்டம் அனுபவிப்பதாக நினைத்து வருந்தியது. மாமரத்தின் கஷ்டங்களைக் கேட்டதும் தன் பாடு எவ்வளவோ தேவலை என்று தோன்றியது. தனக்கு முட்டைகள்தான் போயின. போனதை நினைத்து வருந்தி என்ன பயன்? அடுத்த முறை பாதுகாப்பான இடத்தில் முட்டையிட்டுக் கொள்வோம். அதை விட்டு விட்டு காற்றுடன் சண்டை போடப் போகிறேன் என்று புறப்பட்டது பைத்தியக்காரத்தனம் என்பதை காகம் உணர்ந்து கொண்டது.***