உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (110)

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு வணக்கம். மதுரையில், பிளஸ் 1 படிக்கிறேன். படிப்பில் சுட்டி; விளையாட்டில் ஆர்வமில்லை; ஆனால், உடல் ஆரோக்கியதை பேண தவற மாட்டேன். எட்டு ஆண்டுகளாய், சிறுவர்மலர் வாசகன். 'இளஸ்... மனஸ்...' பகுதியை தவறாமல் படிப்பேன். நீங்கள் கூறும் அறிவுரை அனைத்தையும் பின்பற்றுவேன். உங்கள் மீது கொண்ட நம்பிக்கையால், என் பிரச்னையைக் கூறுகிறேன்.சிறு வயதில், விவசாயி ஆக ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது என் மனம் இசையின் பக்கம் திரும்பியுள்ளது. விவசாயமா... இசையா... என்ற கேள்விக்கு, என் ஆசிரியர், 'விவசாயம் படித்து, வேலைக்குச் சென்றபடியே, இசையும் கற்றுக்கொள்...' என்றார்.இசையின் துவக்கமே அறியாதவன் நான். துவக்கம் தொட்டு, இசையைப் பயில, எந்த கல்லுாரியில் சேர வேண்டும்; எந்த கோர்ஸ் எடுக்க வேண்டும்; இசையமைப்பாளராக, எத்தனை காலம் ஆகும் என்று சொல்லுங்க ஆன்டி ப்ளீஸ்...அன்பு மகனுக்கு வணக்கம்! உன்னுடைய ஆசைகளை எழுதியிருந்தாய்... எல்லாருமே, டாக்டர், இன்ஜினியர் ஆகணும் என்று சொல்லும் போது, நீ, 'விவசாயி ஆவேன்!' என்று சொன்னதை கேட்க, மிகவும் இன்பமாக இருந்தது; இசையமைப்பாளர் ஆகணும் என்ற ஆசையும் உள்ளது என்று சொல்லியிருந்தது, நீ இன்னும் குழந்தையாகவே இருக்கிறாய் என்பதை காட்டுகிறது.விவசாயத்துறை எடுத்து படித்து, ஆராய்ச்சிகள் செய்து, புதுவிதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்து; விவசாயத்தில் ஆர்வம் உள்ள உன்னை போன்ற மாணவர்கள் நம் நாட்டுக்குத் தேவை.இல்ல... இசை துறையில் கலக்க வேண்டும்...பெரிய அளவில் வர வேண்டும் என்று நினைத்தால், மதுரையில் உள்ள இசைக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெறு. உனக்கு எந்த இசையில் நாட்டம் உள்ளது, கர்நாடக சங்கீதமா, வெஸ்ட்டன் மியூசிக்கா, இந்துஸ்தானியா... என்று, எதுவும் கடிதத்தில் குறிப்பிடவில்லை; இசை என்பது ஒரு கடல்; அத்துடன், எந்த இசைக்கருவி மீது நாட்டம் என்றும் குறிப்பிடவில்லை.எதுவாக இருந்தாலும், இரண்டு வண்டியில் பயணம் செய்ய முடியாது. எந்த வண்டியில் பயணம் செய்யப் போகிறாய் என்பதை உறுதி படுத்திக் கொள். அதாவது விவசாயமா... இசையா... என்பதை உறுதி செய்த பின், களத்தில் இறங்கு.மதுரையில், அரசு இசைக்கல்லுாரியில், பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், நாதஸ்வரம், பரத நாட்டியம் இவற்றிற்கு, மூன்று ஆண்டு வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகளில், 13 முதல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம்.ஒரு ஆண்டு இசை ஆசிரியர் பட்டப் படிப்பும் உள்ளது. இதற்கு, பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். வாய்பாட்டு, வீணை, வயலினில், பி.ஏ., மியூசிக் படித்து, 'இசை கலைமணி' பட்டம் பெறலாம். மிருதங்கம், புல்லாங்குழல், நாதஸ்வரத்தில் டிகிரி முடித்து, 'வாத்திய கலைமணி' பட்டமும் பெறலாம்.மாலை நேர இசை வகுப்புக்களும், மதுரா கல்லூரி ஹையர் சக்கேண்டரி பள்ளியில் நடைபெறுகிறது. இதில், இரண்டு ஆண்டிற்கான சர்டிபிகேட் கோர்ஸ்சும் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம்.இதற்கான விண்ணப்ப படிவங்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் கிடைக்கும். மேலும், தகவல் அறிய, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0452 - 2370861இனி, நீ எந்த துறையை தேர்ந்தெடுக்கிறாய் என்பது, உன் கையில் தான் உள்ளது மகனே...எதுவாக இருந்தாலும், அதில் நீ சிறந்து விளங்க வாழ்த்துகள்!- அன்புடன், ஜெனிபர் பிரேம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !