உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (115)

அன்புள்ள ஜெனி ஆன்டி... பிளஸ் 1 படிக்கும் மாணவி எழுதுவது... என் முகம் முழுவதும் பருக்கள்; தெரியாத்தனமாக, கிள்ளி விட்டு, இரண்டு கன்னத்திலும், தழும்பு ஏற்பட்டு விட்டது. நான் போடாத, 'க்ரீம்' இல்லை ஆன்டி; ஆனால், பருக்களும், தழும்புகளும் போன பாடில்லை.இதனால், நான் பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதா சொல்வர். யாரிடமும், என் முகத்தை காட்ட மாட்டேன். இதனால், என் முகத்தை, தினமும் கண்ணாடியில் பார்த்து அழுவேன் ஆன்டி. கண்ணுக்கு கீழே, கருவளையம் வேறு உள்ளது. என்னை பார்த்தால், முகத்தை சுளிக்கின்றனர். இந்த அசிங்க முகத்துடன், உலகில் வாழவே பிடிக்கல; சாக நினைத்த என்னை தடுத்தாள் தோழி ஒருத்தி; 'இளஸ்... மனஸ்... பகுதிக்கு, கடிதம் எழுதி போடு... உன் பிரச்னை தீரும்...' என்றாள். என் வாழ்க்கையை, பிரகாசமாக எரிய வைப்பீங்கன்னு நம்புறேன்; என் கடைசி நம்பிக்கை நீங்க தான்; முகப்பருவும், தழும்புகளும் நீங்க, வழி சொல்லுங்க ஆன்டி.அன்பு மகளுக்கு... இளம் வயதில், பரு வருவது இயற்கை! இதற்கு, ஹார்மோன் சுரத்தலும், இன்பெக் ஷனும் காரணம். இதற்கு, நாமே ட்ரீட்மென்ட் எடுப்பதை விட, மருத்துவரிடம் முறையான சிகிச்சை எடுப்பதே நலம். பருவை கிள்ளினால், பத்து பருக்கள் வரும் என்பது தெரியாதா... அதிலும், தழும்பாக்கி வைத்துள்ளாய். இது, சாதாரண சமையலறை வைத்தியத்தால் போகாது; 'டெர்மெட்டாலஜிஸ்ட்' இடம் சென்று, சிகிச்சை பெறுவதே நல்லது.தெர்மா ரோலர், கெமிக்கல் பீல் ட்ரீட்மென்ட், லேசர் ட்ரீட்மென்ட் என, எத்தனையோ உள்ளது. இதற்கு, நிறைய செலவாகும். அத்துடன், பொறுமை அவசியம். உன் முகத்தில் உள்ள தழும்புகளை பொருத்தே, எத்தனை மாதங்கள் செல்லும் என்பதை மருத்துவர்கள் தான் சொல்ல முடியும். கண்ணுக்கு கீழ் கருவளையம் எல்லாம், போதுமான துாக்கம் இல்லை என்றால் வரும்.முதலில், நாம் அழகாக இல்லை என்ற எண்ணத்தை விடு; இருக்கும் முகத்தை வைத்து, பராமரித்தாலே போதும். அழகு, இறைவன் கொடுப்பது. அழகான பெண்கள், எத்தனையோ பேரின் வாழ்க்கை, ஆசிட் வீச்சால் சிதைந்து போய், அவர்களும், இன்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.இந்த அழகான முகத்தின், இன்றைய நிலையைப் பார்; இதை விடவா, உன் முகம் கோரமா இருக்கு. இவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, கல்லுாரி மாணவி, 'சோனாலி முகர்ஜியை' கல்லுாரி மாணவர்கள் சிலர், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியதற்கு உடன்படாததால், வீடு புகுந்து, முகத்தில், 'ஆசிட்' ஊற்றினர். இதனால், இரண்டு கண் பார்வையையும் இழந்து, ஒரு காது கேட்கவில்லை; இன்றைய இவரது முகம் இது தான். இந்த பெண் சோர்ந்து போகவில்லை; அமித்தாப் பச்சன் நடத்தும், 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் கலந்து, 25 லட்ச ரூபாய் வென்று, 'இந்த பணத்தை வைத்து, என் முகத்தை ஓரளவு சரி செய்து கொள்வேன்; என்ன செய்வது, நான், இந்த உலகத்தில் வாழ்ந்தாக வேண்டும்...' என்கிறாள். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய கொடூரர்கள், இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருந்து, வெளியே வந்து விட்டனர்.அதனால், அழகாக பிறக்காததை நினைத்து கவலைப்படாதே. தற்கொலை எண்ணத்தை கை விட்டு, தன்னம்பிக்கையோடு, திறமைகளை வளர்த்துக் கொள்; 'லேசர் ட்ரீட்மென்ட்'டுக்கு பணம் செலவழிக்க வழி இல்லையென்றால், இதை செய்து பார். ஒரு கை பிடி கறிவேப்பிலை, இரண்டு தேக்கரண்டி கசகசா, இரண்டு தேக்கரண்டி கஸ்துாரி மஞ்சள், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன், சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்சியில், 'பேஸ்ட்' போல் அரைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் பூசி, 20 நிமிடத்திற்குப் பின் கழுவி வா; மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வர, முகம் அழகாக மாறும். ஓ.கே., இனி அழக் கூடாது; பீ ஹேப்பி!- பாசத்துடன், ஜெனிபர் பிரேம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !