இளஸ்... மனஸ்... (117)
அன்புள்ள ஜெனி ஆன்டி... இரண்டு ஆண்டுகளாய், சிறுவர்மலர் வாசகி. 'இளஸ்... மனஸ்...' பகுதியை, தவறாமல் படிப்பேன். இதில் கூறப்படும் பெரும்பாலான அறிவுரைகள், எனக்கு பொருந்தும். தற்போது, நடந்த, பத்தாம் வகுப்பு தேர்வில், 401 மதிப்பெண் பெற்றுள்ளேன். என் பெற்றோர், என்னை, 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தினர்.எங்கள் உறவினரின் மகள், கடந்த ஆண்டு, 460 மதிப்பெண் பெற்றார். எனவே, என்னை, 450க்கு மேலயாவது எடுக்கச் சொன்னார்கள்.வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால், 450 மதிப்பெண் எடுக்க முடியவில்லை. என்னிடம் பேச மாட்றாங்க ஆன்டி... எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு... நான் எதற்கு உயிர் வாழணும்ன்னு தோணுது. 'ரிசல்ட்' வரும் வரையில், நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல ஆன்டி. அடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள நெனச்சா, ரொம்ப பயமா இருக்கு. என்னால், பெற்றோரின் எதிர்பார்ப்பை, பூர்த்தி செய்ய முடியாது ஆன்டி... இன்னொரு டென்ஷனை சந்திக்க, நான் தயாரா இல்ல ஆன்டி... தயவுசெய்து, என் பெற்றோருக்கு, 'அட்வைஸ்' பண்ணுங்க...அன்பு மகளே... வாழ்த்துகள்! இந்த மதிப்பெண்கள் பெற, நீ எத்தனை கடினமாக உழைத்திருப்பாய் என, எனக்கு தெரியும். உன் வழியில் முன்னேறிச் செல்... நான், அவர்களுக்கு, 'அட்வைஸ்' கொடுக்கிறேன். இந்த, 'அட்வைஸ்' உன் பெற்றோருக்கு... அன்பு பெற்றோரே... வணக்கம்! உங்களது ஒரே மகளுக்கு எல்லாம் செய்கிறீர்கள்... அவளுக்காகவே வாழ்கிறீர்கள்... எதற்காக, மற்றவர்களோடு, மகளை, 'கம்பேர்' செய்து, 'டார்ச்சர்' கொடுக்குறீங்க... இது, அவள் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கு பாருங்க... இவ்வளவு, 'மார்க்' வாங்கியதை நினைத்து சந்தோஷப்பட்டு, அவளை உற்சாகப் படுத்துவதை விட்டு விட்டு, இப்படி திட்டுவது, எந்த விதத்தில் நியாயம். நீங்க ரெண்டு பேரும், பத்தாம் வகுப்பில் இவ்ளோ மதிப்பெண்ணா வாங்கினீர்கள் என்பதை, சற்று யோசித்துப் பாருங்க.இந்த வயதில், அவர்கள் மனம் பூ போன்றது. 'பெற்றோரை, நம்மால் திருப்திபடுத்த முடியலையே...' என நினைத்து, தாங்க முடியாமல், ஏதாவது செய்து கொண்டால், அதன் பின், என்ன செய்வீர்கள்... உங்களுடைய கவுரவ பெருமைக்காக, உங்கள் செல்ல மகளை இழக்கவும் தயாரா... உங்க மகளுக்கு எது கிடைக்க வேண்டும் என்று உள்ளதோ, அது நிச்சயமாகவே கிடைக்கும். மற்றவர்கள் வாழ்க்கையை பார்த்து பார்த்து பொறாமைப்பட்டு, அதை விட சிறப்பா வேணும் என்று நினைத்து, உங்களுக்கு கிடைக்க வேண்டியதையும் இழந்து போகாதீங்க... பொறாமை என்பது எலும்புருக்கி நோய் போன்றது... அது, உங்க மனச அரிச்சுடும்; இந்த கெட்ட குணத்தை அவளுக்கு சொல்லிக் கொடுக்காதீங்க...உங்க மகளுக்கு என்னென்ன கிடைக்குதோ, அதில் சந்தோஷமா இருக்க கத்துக்கோங்க... இல்லன்னா, எத்தனை தான், 'பெஸ்ட்' ஆனது உங்களுக்கு கிடைத்தாலும், அதில் திருப்தியடையாமல், 'அவங்க அப்படி இருக்காங்களே... இவங்களோடது நமக்கு கிடைக்கலியே'ன்னு நினைத்து ஏங்கி ஏங்கி, சந்தோஷம் இல்லாத ஒரு வாழ்க்கையை கடைசி வரை வாழ்வீங்க; இது தேவையா...மகளை கட்டி பிடித்து, ஒரு உம்மா கொடுங்க... அவள் வாங்கின, மதிப்பெண்ணிற்காக பரிசு வாங்கி கொடுத்து, உற்சாகப்படுத்துங்க... பிஞ்சு மனங்களை புரிந்துக் கொள்ள கற்றுக்கோங்க... அவளோட எதிர்காலம் சிறப்பாக அமையும்!- அன்புடன், ஜெனிபர் பிரேம்!