இளஸ்... மனஸ்... (185)
அன்புள்ள ஆன்டி...என் வயது, 16; பிரபல பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவி. தந்தை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் பிறந்த ஊர் பழனி. ஐதராபாத்தில், வாடகை வீட்டில் இருந்தாலும், பழனியில் சொந்த வீடு கட்டி, வாடகைக்கு விட்டிருக்கிறார்.பணி ஓய்வு பெற்றதும், பிறந்த ஊரில் செட்டிலாக போவதாக கூறுகிறார். அவர் இறந்தால், பிறந்த ஊரில் தான் புதைக்க வேண்டுமாம். இப்படி சென்டிமென்ட்டாக வாழ்பவரை என்ன செய்யலாம். எனக்கு ஒரு ஆலோசனை கூறுங்கள் ஆன்டி...இப்படிக்கு,என்.ஊர்மிளா.அன்பு மகளுக்கு...ஒரு மனிதனுக்கும், ஒரு இடத்துக்கும் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வ பந்தமே பிறந்த ஊர் காதல். எண்ணங்களை, உணர்வுகளை, நினைவுகளை, விளக்கங்களை எந்த ஊர் பீரிட்டெழ வைக்கிறதோ, அந்த ஊரே ஒரு மனிதனுக்கு, உலகின் சிறந்த ஊர் என மனோதத்துவம் கூறுகிறது.பிறந்த ஊர் சென்டிமென்ட் பல வகைகள் உடையது. நடத்தைக்கும், அனுபவங்களுக்கும் இடையே பரஸ்பர உறவு, பிறந்த ஊர் மீதான விருப்பத்தை அதிகப்படுத்துகிறது.பிறந்த ஊர், ஒரு ஆண் அல்லது பெண்ணின் இரண்டாவது கர்ப்பப்பை. பிறந்த ஊரில், சொந்த வீடோ, சொந்த நிலமோ இருந்தால் விருப்பம் பொங்கி வழியும்.சுற்றுலா முக்கியத்துவம், பாரம்பரியம், உறவினர் கூட்டம், வசிப்பு, ஏராளமான பொழுது போக்குகள், சிறப்பான மருத்துவம், ஆன்மிக முக்கியத்துவம், பொருளாதார ரீதியாய், தன்னிறைவு, கற்று கொள்ள வாய்ப்புகளுடன் இருப்பதே ஒளிமயமான எதிர்காலம். மேற்கூறியவற்றில், சில பல பிறந்த ஊரில் இருந்தால், அது பூலோக சொர்க்கம்.மகளே... உன்னை ஒரு மரமாக பாவித்துக் கொள். பிழைப்புக்காக, பல ஊர்களில் கிளை விரித்திருப்பாய். ஆனால், ஆணிவேர் பிறந்த ஊர் தானே...நீ, அம்மாவின் ஊரில் பிறந்திருப்பாய். நேர்மறையான அனுபவங்களும், திருப்திகரமான உறவுகளும், பிறந்த ஊரில் இருந்தால் கசக்காது. உன் தந்தையை போன்றே கோடிக்கணக்கான ஆண்களும், பெண்களும், பிறந்த ஊர் காதலில் திளைக்கின்றனர்.நீயும் வயோதிகம் அடையும் போது, சென்டிமென்ட் தேவதையாய் பதவி உயர்வு பெறுவாய்.மூன்று தலைமுறைகளுக்கு முன், வெளிநாடு சென்று, செட்டிலானவர்கள் கூட, தங்களின் மூதாதையர்கள் பிறந்த ஊரை தரிசிக்க இந்தியா வருகின்றனர்.பிறந்த ஊரின் மண், நீர், காற்று, உப்பு ஒரு ஆணின் அல்லது பெண்ணின் மரபணுவில் ஊடுருவியுள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது, தந்தையுடன், தந்தையின் பிறந்த ஊருக்கு சென்று, அவரது இளமைக்கால நினைவுகளை சேர்ந்து அசை போடு.தந்தையின் பழங்கால நாட்டம், உன் உயிரின் வேர்க்கால் வரை சென்று கொம்புத்தேனாய் தித்திக்கும். உன் தந்தையின் பிறந்த ஊர் காதலுக்கு, என் ராயல் சல்யூட்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.