இளஸ்... மனஸ்... (23)
அன்புள்ள மெடோஸ் ஆன்டி... நான், 12ம் வகுப்பு படிக்கும் மாணவன். 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' முதன்மை பாடமாக எடுத்துள்ளேன். கல்லுாரியில், எந்த வகை பாடப்பிரிவில் சேர வேண்டும் என்று தெரியவில்லை ஆன்டி. என் தந்தை மெக்கானிக் தொழில் செய்கிறார். அவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கல்லுாரியில் எந்த பாடப்பிரிவு படித்தால், நல்ல வேலையில் அமர முடியும். என் அப்பா, மிகவும் கஷ்டப்படுகிறார். அவரது கஷ்டத்தை போக்க, நன்கு சம்பாதிக்க விரும்புகிறேன். அதற்காக, எவ்வளவு சிரமத்தையும் ஏற்க தயாராக உள்ளேன். எனக்கு நல்ல வழி காட்டுங்க ஆன்டி. லட்சியத்துடன் பயணிக்கும் அன்பு மகனே... எதிர்காலத்தில் நல்ல பணி வாய்ப்பிற்கு, கல்லுாரியில் எந்த பாடபிரிவை தேர்வு செய்ய வேண்டும் என, கேட்டிருக்கிறாய். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் நீ, பிளஸ்- 1ல், நல்ல மதிப்பெண் எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறாய். மகிழ்ச்சியாக உள்ளது. இயல்பாகவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் உனக்கு ஆர்வம் உள்ளதையே இது காட்டுகிறது. கல்லுாரியிலும், இதே துறை சார்ந்த படிப்புகளில் சேர்ந்தால், சிறப்பான எதிர்காலம் உண்டு. கல்லுாரியில், ஐ.டி., என்ற இன்பர்மேஷன் டெக்னாலஜி, இ.சி., என்ற எலெக்டரானிக் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம்; அவற்றை சிறப்பாக படித்து முடித்தால், நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும். கணினி மற்றும் சாப்ட்வேர் என்ற மென்பொருள் தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறையை நோக்கி, வேகமாக நகர்கின்றன; அதனால், சுலபமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது, கணினி துறையில், 'ஏ.ஐ., மிஷின் லேர்னிங், பிக் டேட்டா' போன்ற, புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. அவை பிரமிக்க வைப்பதாக உள்ளன. துவக்க நிலையிலேயே, இத்தகைய வளர்ச்சி என்றால், நீ படித்து முடிக்கும் போது அபார வாய்ப்புகள் பெருகும். அந்த பிரிவுகளில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம். படித்து முடிக்கும் போது, நல்ல வாய்ப்பு தேடி வரும். உலகமே, தற்போது, 'டேட்டா' எனப்படும் தரவுகளின் ஆதிக்கத்தில் உள்ளது. வருங்காலத்தில், யாரிடம் தரவுகள் அதிகம் உள்ளதோ, அவரே உலகை இயக்கும் சூத்திரதாரியாக விளங்குவார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடான ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகள், இதை புரிந்து, அந்த துறை சார் வளர்ச்சிக்கு, ஏற்கெனவே முயற்சி எடுத்து விட்டன. நம் நாட்டில், தற்போது தான், அத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரத் துவங்கியுள்ளன. கணினி துறையில் உனக்கிருக்கும் ஆற்றலுக்கு, அது சார்ந்த புதிய தொழில்நுட்ப கல்வியை கற்றுக் கொள்வது தான் சிறப்பு தரும். உன் தந்தை மெக்கானிக் என்பதற்காக, அவருக்கு உதவும் வகையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும் படிக்கலாம்; அதில், கணினி துறையை விட, வேலைவாய்ப்புகள் குறைவு என்பதை மனதில் கொள்!ஐ.டி., வல்லுனர்களுக்கு, அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன; அதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை தேர்வு செய்வது தான் சரி.மகனே... இலக்கை நோக்கி முன்னேற வாழ்த்துகள்!-- அன்புடன், மெடோஸ்