இளஸ்... மனஸ்! (52)
அன்புமிக்க பிளாரன்ஸ்...வண்ணங்களை விரும்பும், 32 வயது குடும்ப தலைவி நான். சென்னை புறநகரில் வசிக்கிறோம். மூத்த மகன், இரண்டு வயதில், சாலை விபத்தில் இறந்தான். அடுத்து பிறந்த மகளுக்கு, 10 வயதாகிறது; 5ம் வகுப்பு படிக்கிறாள். பென்சில் மாதிரி ஒல்லியாக இருப்பாள். மிகவும் புத்திசாலி. என் பேச்சை மதித்து நடப்பாள். ஆனால் சில நடத்தைகள் மிக வினோதமாக இருக்கின்றன. உருளைக்கிழங்கு பிடிக்கிறது என்றால், அடுத்த ஆறுமாதத்திற்கு உருளைக்கிழங்கு சாம்பார், வறுவல், பொடிமாசு, மசாலா என, அதையே கட்டிப்பிடித்து திரிவாள். அதே போல, 30 வண்ணங்களில், உடைகள் இருந்தாலும், ஆரஞ்சு வண்ணம் பிடித்தது என்றால் அதையே, ஆறு மாதம் அணிந்து திரிவாள். நீலநிற பென்சில் பிடிக்கிறது என்றால், ஒரே பென்சிலை ஒரு வருடம் பயன்படுத்துவாள். பல் தேய்க்கும், 'டூத் பிரஷ்' கூட நைந்து பரிதாபமாக காட்சியளிக்கும். தலை வாரும் சீப்பு, சிக்கும் அழுக்கும் அப்பி தோற்றமளிக்கும். புதிய வண்ணங்களையும், வடிவங்களையும் ஏற்க மறுக்கிறாள். உருளைக்கிழங்குக்கு பதிலாக வேறு காய்கறியில் சமையல் பண்ணினால் சாப்பிடாமல் துாக்கியடிப்பாள். தனக்கு பிடித்த ஆரஞ்சு வண்ண உடை தவிர, மற்றவற்றை கசக்கி குப்பைக்கூடையில் போடுவாள். எவ்வளவு அறிவுரை கூறியும் திருந்த மறுக்கிறாள். என்ன செய்யலாம்... ஒரு நல்ல யோசனை சொல்லம்மா.மகள் நடத்தையால் மனம் புழுங்கி தவிக்கும் அம்மா...முதலில் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக கூறிவிடுகிறேன். நாம் அனைவருமே ஒருவகை பழக்கத்துக்கு அடிமைகள். எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஒரு பெரியவர் இருக்கிறார். இட்லி, தோசை, ஊத்தப்பம், சப்பாத்தி, உப்புமா என, எதை சாப்பிட்டாலும் தொட்டுக் கொள்ள தாளித்த சிவப்பு மிளகாயில் அரைத்த தேங்காய் சட்னி வேண்டும். தொட்டுக்கொள்ள வேறு எதை செய்தாலும் துாக்கியெறிந்து விடுவார். முப்பது வருடங்களாக புரோட்டா, சால்னா மட்டும் இரவு உணவாய் சாப்பிடும் மதுரை அன்பர் ஒருவரை அறிவேன்.உன் மகள் ஆரஞ்சு நிற உடை அணிந்து, பள்ளியில் பரிட்சை எழுதி, நுாற்றுக்கு, 98 மார்க் எடுத்திருப்பாள்; அல்லது அந்த உடை அணிந்த நாள் அவளுக்கு மகிழ்ச்சியாக நிறைய சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும்; ஆகையால், உன் மகள் ராசி பார்த்திருக்க கூடும்.பல பெண்கள், எதாவது ஒரு மங்கல நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அம்மாவின் பழைய பட்டு புடவையை கட்டிக் கொள்வர்.உன் மகள் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாள். அவளுக்கு, அதிர்ச்சி வைத்தியங்கள் தரலாம்.* உருளைக்கிழங்கை விட, பத்துமடங்கு சுவை தரக்கூடிய உணவை தயார் செய்து, 'இதை சாப்பிடும்மா. பிடிக்கலைன்னா துப்பிடு...' என கூறு. நீ ஊட்டிவிடும் உணவை சாப்பிட்டால், அபிப்பராயத்தைக் கேள். மறுநாள், இன்னொரு சுவையான பதார்த்தம் செய்து கொடு. சுவையில் மயங்கி சாப்பிடுவாள். ஒரே வாரத்தில் உருளைக்கிழங்கு கிறுக்கை போக்கி விடலாம்* ஆரஞ்சு நிற உடைக்கு பதில், புதிய வண்ண உடைகளை மகளிடம் கொடுக்கும் முன், சாமி படத்தின் முன் படைத்து, வேண்டுதல் செய். சாமி, புதிய உடையை ராசியானதாக்கி விடும் என, நம்பி அணிவாள்* மாதம் ஒரு முறை, ஏதாவது ஓட்டலுக்கு அழைத்து போய் ருசியான உணவை வாங்கிக் கொடு. ஒரே உணவை சாப்பிட்டால் எல்லா சத்துகளும் கிடைக்காது. எதையும் ஒதுக்காமல் சாப்பிட, 'நியூட்ரிஷியன்' மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்* ஒரே பிரஷை பயன்படுத்தி பல் துலக்கினால், சுகாதார பிரச்சனை வரும் என்பதை, மருத்துவர் மூலம் புத்தி சொல்ல ஏற்பாடு செய்.'சென்டிமென்ட்' என்பது தனக்குதானே கைவிலங்கு பூட்டி கொள்வதற்கு சமம். அதில் சிக்காதே என அன்பாய் வலியுறுத்து. முக்கியமாக, மகளுடன் நட்பாய் பழகி மனம் விட்டு பேசு. உரிய ஆலோசனைகளை வழங்கு. மாற்றங்களை காண்பாய்.- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.