உள்ளூர் செய்திகள்

இளஸ்.. மனஸ்... (77)

அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...என் வயது, 18; பிளஸ் 2 வகுப்பில், 65 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவன். சுமாராக படிப்பேன்; எதிர்காலத்தில், இசைத்துறையில் சாதிக்க விரும்புகிறேன். இணையதள, 'யு - டியூப்' சானல் ஒன்றில், 'கீ போர்ட்' கற்றுள்ளேன்; இசை பற்றிய அடிப்படை ஞானம் உள்ளது. பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மிளிர விரும்புகிறேன். சுயமாக சில மெட்டுகளையும் அமைத்துள்ளேன்.பிரச்னை என்னவெனில், என் குடும்பத்தார் இதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கின்றனர்.சிறு வயதிலேயே, இசை வகுப்பில் சேர்க்க கூறியும் மறுத்து விட்டனர். இசை துறையில் சிறந்து விளங்குவோரின் வாரிசுகளால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கின்றனர். அத்துறையில், 'உன்னால் வெற்றி பெற முடியாது...' என்று கூறுகின்றனர்.இசைக் கல்லுாரியில் சேரும் என் விருப்பத்தை மறுத்து, பொறியியல் கல்லுாரியில் சேர்த்துள்ளனர். பாடல் பாடினாலோ, இசை நிகழ்ச்சிகளை, 'டிவி'யில் பார்த்தாலோ, எரிந்து விழுகின்றனர். இசைத்துறையில் வெற்றி பெறும் உறுதி என் மனதில் உள்ளது. ஆனால், அதை பாழும் கிணறாக நினைக்கின்றனர் பெற்றோர்; இதற்கு நல்ல தீர்வு கூறுங்க ஆன்டி!அன்பு மகனே...மணி மணியான கையெழுத்துடன் கூடிய, உன் கடிதம் கண்டேன்; இலக்கணப் பிழைகள் இல்லாமல் சொல்ல வேண்டிய கருத்தை, கச்சிதமாக கூறியிருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி!இசைக்கல்லுாரியில், இரண்டு விதமான படிப்புகள் உள்ளன. பள்ளியில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், புல்லாங்குழல், வீணை, நட்டுவாங்கம், வாய்ப்பாடு போன்ற ஒன்பது பிரிவுகளில் சேரலாம். படித்து, டிப்ளமோ பட்டம் பெறலாம்.பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால், பி.எப்.ஏ., என்ற நுண்கலை பட்டப்படிப்பு படிக்கலாம்; கட்டணம், ஆண்டிற்கு, 2,500 ரூபாய் தான்.இசைக்கல்லுாரியில் படிக்கும் போதே, கச்சேரி செய்து சம்பாதிக்கும் மாணவர்களை அறிவேன். தவில், நாதஸ்வரம், வயலின், மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டோர் மிகக்குறைவு; இவற்றை கற்றும் கச்சேரிகள் செய்யலாம்.இசைக்கல்லுாரியில் படித்த யாரும் வீணாக போனதாக சரித்திரம் இல்லை; உலகின் கடைசி திருமணம் நடக்கும் வரை கச்சேரிக்கு வாய்ப்புகள் இருக்கும்.மகனே... 'யு - டியூப்' சேனல் மட்டும் பார்த்து இசைக் கற்றுக் கொண்டால் போதாது; ஒரு குருவை நாடிச்செல். குரலிசையும், ஹார்மோனியம் இசைக்கவும் கற்றுக்கொள்; மேற்கத்திய இசைக்கு ஒரு குருவை வைத்து கற்றுக்கொள்.உன் பெற்றோரின் பயம் நியாயமானது. எட்டு கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில், எத்தனை பேரால் வெற்றிகரமான பாடகராக, இசையமைப்பாளராக வர முடிகிறது. பிரபல பாடகர்களின், வாரிசுகளை இசைக் காப்பாற்றவில்லை; மருத்துவத் தொழில் தான் காப்பாற்றுகிறது.உன்னிடம் பிரமாதமான குரல் வளமும், தனித்துவமான இசையமைப்பு ஞானமும் இருக்கிறதா... அதை முழுமையாக நம்புகிறாயா... கடின உழைப்பாலும், பிறரின் ஆதரவாலும், போதுமான அதிர்ஷ்டத்தாலும் இசையமைப்பாளாராகி விடலாம் என இரு கைகளையும் உயர்த்துகிறாயா... பொறியியல் படித்தபடியே, இசைத்துறையில் முயற்சிகளை தொடர்... பகுதி நேரமாக இசைக் கற்றுக் கொள். முதலில் குறும்படங்களுக்கு இசை அமை!தனி ஆல்பங்கள் போட்டு, 'யு - டியூப்'பில் பதிவேற்று; விளம்பரங்களுக்கு இசையமைக்க முயற்சி செய். பின், சிறு பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கலாம்!பொறியியல் படிப்பை முடிப்பதிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் இசைத்துறையில் வெற்றி பெற முயற்சி செய். கிடைக்கவில்லை என்றால், பொறியியல் சார்ந்த பணிக்குச் செல்.இசைக்கல்லுாரியில், டிப்ளமோ பட்டம் கற்று, கச்சேரிகள் செய்து, சிறிய வட்டத்திற்குள் வாழ்க்கையை நடத்துவது வேறு; இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல் வெற்றி பெற கனவு காண்பது வேறு. இன்னொரு ஏ.ஆர்.ரஹ்மானாவது கோடியில் ஒருவருக்கு தான் சாத்தியம்.உன் இசைத்திறமை பற்றி, நட்பு உறவு வட்டத்தில், ஒரு சர்வே எடு. சர்வேயில், 90 சதவீத பேர் உனக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், தைரியமாக இசைத்துறையில் ஈடுபடு; 50 சதவீத பேர் உனக்கு ஆதரவு தெரிவித்திருந்தால், முடிவை மறுபரிசீலனை செய். கனவு காண்; கனவு வெற்றி பெறும் சாத்தியத்தை உறுதி செய்து, கனவு காண் மகனே!- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !