இளஸ்... மனஸ்...
ஹாய் ஜெனி ஆன்டி, என் பெயர் ரவி; +1 படிக்கிறேன். எனக்கு ஒரு தங்கை உண்டு. எனக்கு ரொம்ப கோபம் வருது ஆன்டி. ஒரு சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப கோபப்படுறேன். எனக்கே இது தப்புன்னு தெரியுது. மம்மி, டாடி என்னை கண்டிச்சாவே அவ்ளோ கோபம் வருது. அது மட்டுமல்ல, நண்பர்கள், தங்கச்சிகிட்டேயும் ரொம்ப கோபப்படுறேன் ஆன்டி.அப்புறமா ஏண்டா இப்படி கோபப்பட்டோம்னு நெனைச்சி வருத்தப்படுறேன். எங்கப்பா, தாத்தா எல்லாரும் பயங்கரமா கோபப்படுவாங்க. எங்கப்பா, சாப்பாட்டுல உப்பு கம்மியா இருந்தா கூட குழம்பை தூக்கி எங்கம்மா மூஞ்சில அடிப்பாரு... ரொம்ப கோபக்காரர். எங்ககிட்டேயும் எரிஞ்சி விழுவாரு. இதனால், அப்பா மேலே எனக்கு பாசமே இல்ல... எங்கம்மாவை ரொம்ப கொடுமைப்படுத்துவாரு. எங்கம்மாவும், எங்களுக்காகத்தான் வாழ்றாங்களே தவிர அப்பா மீது அவங்களுக்கு சிறிதும் அன்பு இல்லை.நான் எங்க அப்பா மாதிரி இருக்க விரும்பவில்லை. இந்த கோபத்தை விட்டுவிட எனக்கு வழி சொல்லுங்க ஆன்டி. நீங்க சொன்னா நான் நிச்சயமா கேட்டுக்குவேன். நான் இந்த கோபத்தை விட்டுத் திருந்தணும் ஆன்டி!டேய் கண்ணா... கோபத்தை விடணும்னு நினைக்கிறியே அதுவே ஒரு பெரிய விஷயம். 'டீன் ஏஜ்'ல் உடம்பில் உள்ள ஹார்மோன்ஸ் எல்லாமே மாற்றம் பெற்று அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.அப்போது கோபம் போன்ற உணர்ச்சிகள் எல்லாமே அதிகமாக ஏற்படும். அதோடு அப்பா, தாத்தாவின் முன்கோபம் எல்லாம் சேர்ந்து உன்னையும் கோபக்காரனாக்கியுள்ளது.இதை இப்போதே விட்டுவிடப் பழகணும். இல்லையென்றால், இது உன் வாழ்க்கையையே அழித்து விடும். கோபம் என்கிற குணம் மிக மிகப் பொல்லாதது.உங்கம்மா, 'அட்ஜஸ்ட்' பண்ணி வாழ்வது போல உனக்கு வருபவளும் அப்படியே இருப்பாள் என எதிர்பார்க்க முடியாது. அத்தோடு உன்னை எல்லாரும் வெறுக்கும் ஒரு வாழ்க்கை தேவைதானா என்பதை சற்று யோசித்துப் பார். எதிர்காலத்தில், நீ பெற்ற பிள்ளை, மனைவியும் உன்னை வெறுத்தால் நீ இந்த உலகில் வாழ்வதில் எந்த பயனும் இல்லை.முதலில் நீ செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்போம். சரியா?கோபம் வந்தவுடனே உன்னால் முடிந்தவரை நிறைய தண்ணீர் குடி; சூடு தணியும்.கொஞ்ச நேரத்தில், 'நார்மல்' ஆகிவிடுவாய். இன்னொன்று பக்கத்தில் தண்ணீர் இல்லையென்றால், 1 லிருந்து 100 வரை மனதிற்குள் எண்ணு. அதுவரை வாயை திறந்து ஒரு வார்த்தையும் பேசாதே. மீண்டும், 100 லிருந்து ஒன்றுவரை, தலைகீழாக மனதிற்குள் எண்ணு.சிறிது நேரத்தில் அப்படியே கோபம் தணியும். அதுவும் முடியலைன்னா உன் அழகான முகத்தை கண்ணாடியில் போய் பாரு... அது பயங்கரமான வில்லன் முகம்போல் மாறியுள்ளது என்று உனக்கே தெரிந்துவிடும்.அதன்பிறகு இந்த அழகான முகத்தை நாம் ஏன் அசிங்கமாக்க வேண்டும் என நினைத்துப்பார். நான், என் தாய்க்கு ஒரு நல்ல மகனாய், என் தங்கைக்கு நல்ல அண்ணனாய் இருக்க ஆசைப்படுகிறேன். அப்படி இருக்க இந்த வில்லன் முகம் எதற்கு? நான் எப்பவுமே, 'ஹீரோவாச்சே' என்று உனக்குள் ஒருமுறை சொல்லிப்பாரு... நேரம் ஆக ஆக, அந்த உக்கிரம் தணிந்துவிடும்.அப்புறம் என்ன... கோபம் போயே போயிந்தே தான்...முடிந்தவரை தியானம் செய்... கோபம் உன்னை விட்டு, ஓடியே போய்விடும். சரியா?எப்பவும், மாறாத சிரிப்புடன், உங்கள் ஜெனிபர் ஆன்டி.