உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (177)

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 16; பிளஸ் 1 படிக்கிறேன். பெற்றோருக்கு ஒரே மகள். தனியார் நிறுவனத்தில், உயரதிகாரியாக பணிபுரிகிறார் அப்பா. தனியார் பள்ளியில், ஆசிரியையாக உள்ளார் அம்மா. ஒவ்வொரு முறை கண்ணாடியில் முகத்தை பார்க்கும் போதும், புருவங்கள் ஒரு தேவையற்ற இலவச இணைப்பாக படுகிறது. அழகான முகத்துக்கு, திருஷ்டி பரிகாரமாய் கம்பளி பூச்சி போன்ற புருவங்கள் எதற்கு... விளக்கம் தாருங்கள் ஆன்டி...இப்படிக்கு,யா.ஆஷிகா.அன்பு பூக்குட்டிக்கு...பெண்களின் புருவத்தை வில்லென வளைந்தது என்றான் கவிஞன். இயற்கை அல்லது இறைவன் எந்த உயிரினத்தின் சிறு அங்கத்தையும் தேவையில்லாமல் படைக்கவில்லை. புருவத்தின் பயன்பாடுகளை பார்ப்போம்...* ஈரமோ, வியர்வை துளிகளோ, மழையோ, கண்களுக்குள் நேரடியாக புகுந்து விடாமல் பாதுகாக்கும். புருவ ரோமங்கள் முகத்தின் பக்கவாட்டில் நீண்டிருப்பதால், நீர் முகத்துக்கு வெளியே சொட்டி விடும் * புருவம் காரின், 'வைப்பர்' போன்றது* புருவங்கள் ஆரோக்கியத்தை சுட்டி காட்டும். ஹைபர் தைராய்டிசம் இருப்பதை புருவத்தில் கண்டுபிடித்து விடலாம்* ஆணோ, பெண்ணோ வாயால் பேசுவதை விட, புருவத்தால் சைகை மொழியில் பேசி, தகவல் தொடர்பை மேம்படுத்தலாம்* சிறு சிறு பாவனைகளை புருவத்தில் காட்டலாம்* மன உணர்வுகளை வெளிப்படுத்த, ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து கொள்ள புருவங்கள் உதவுகின்றன. புருவங்களை உயர்த்தி, அவ நம்பிக்கையை அல்லது விருப்பத்தை தெரியப்படுத்தலாம்* இரண்டு புருவங்களையும் உயர்த்தி, திகைப்பை காட்டலாம்* விஞ்ஞானிகள், 2003ல் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். பிரபலமான, 50 பேர் முகங்களை, புருவங்களை வைத்தே, மிக எளிதாக கண்டு கொண்டனர்* பிறரின் இன்ப துன்பங்களை உணர்ந்து, மனிதாபிமானமாக செயல்பட புருவங்கள் உதவுகின்றன* ஒவ்வொரு கால கட்டத்திலும், புருவங்கள் நாகரிகத்தின் அளவுகோலாக செயல்பட்டிருக்கின்றன* புருவங்களை வைத்து, உலக சந்தையில் ஆண்டுக்கு, 42 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் அதாவது, 335 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது * ஒவ்வாமை, தோல் நோய், தைராய்டு பிரச்னை, வயோதிகம் காரணமாக, புருவங்கள் உதிர்ந்து போகின்றன. புருவ ரோமங்கள் மற்றும் கண்ணிமை இழப்புக்கு, 'மடாரோசிஸ்' என்ற நோய் காரணமாகிறது. ஒரு மனிதனின் புருவ அமைப்பை மரபணுக்களே தீர்மானிக்கின்றன. தேங்காய் எண்ணெய், தேயிலை எண்ணெய், லாவன்டர் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தேய்த்து புருவத்தை மேம்படுத்தலாம். புருவ பகுதியை மசாஜ் செய்யலாம்.மொத்தத்தில் புருவங்கள் கண்களின் வாசல் என உணர்ந்து கொள் செல்லமே!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !