இளஸ் மனஸ்! (227)
அன்பு மிக்க பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 15; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். என் சொந்த ஊர் மதுரை; எந்த ஊரில் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை திருவிழாவுக்கு மதுரை சென்று விடுவேன். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை கண் குளிர பார்ப்பேன். என் உறவினர் ஒருவர், 'திருவிழாக்கள், சோம்பேறிகள் பொழுது போக்குக்கு ஏற்படுத்திய திட்டம்' என்கிறார். திருவிழாக்கள் தேவை தானா... உலகம் முழுதும், பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவை எதற்காக என்பது குறித்து உரிய பதில் தாருங்கள்.இப்படிக்கு,என்.விஷ்ணுபிரசாத்.அன்பு மகனுக்கு...உலகில், தேசியம், மதம், இசை, நாடகம், உணவு, நடனம், விவசாயம், ஆண்டு பிறப்பு, மரணம் சார்ந்தும், திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. திருவிழாக்கள் கொண்டாட்ட மனோபாவத்தில் பல்வேறு மனிதர்களை இணைக்கின்றன. மன அழுத்தத்தை மிகச்சிறப்பாக போக்கும் வகையில் செயல்படுகிறது.மண்ணின் மணம், பண்பாடு, கலாசாரம், நம்பிக்கைகள் வெளிப்படும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.திருவிழா கொண்டாடும் நாட்கள் மகிமைப்படுத்தப்பட்ட பிளாட்டின நாட்கள்.உன் உறவினரின் கருத்தை புறக்கணி.உலகில், மிக அதிகமாக திருவிழாக்கள் நடக்கும் நாடு இந்தியா.உலகில், பல ஆயிரம் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் முக்கிய, 20 திருவிழாக்களை பட்டியலிடுகிறேன்...* தென் அமெரிக்க நாடான பிரேசில் நெவாடா கரும்பாறை பாலைவனத்தில் நடக்கும் எரியும் மனிதன் திருவிழா!* ஆண்டுக்கு, 50 லட்சம் பேர் கலந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய ரியோடி ஜெனிரோ திருவிழா. இதுவும் பிரேசில் நாட்டில் தான் நடக்கிறது * ஆசிய நாடான சீனா ஹர்பின் நகர பனி சிற்ப திருவிழா! * ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடக்கும் தக்காளி திருவிழா! * அமெரிக்கா, லுாசியானாவில் நடக்கும் கொழுத்த செவ்வாய் திருவிழா! * வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மரணத் திருவிழா! * ஐரோப்பிய நாடான நெதர்லாந்து மன்னரின் பிறந்தநாள் திருவிழா! * மத்திய ஐரோப்பாவில் நடக்கும் கிராம்பஸ் சாத்தான் திருவிழா! * ஆசிய நாடான தாய்லாந்தில் நடக்கும் சொன்கிரான் புது ஆண்டு திருவிழா! * ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் நடக்கும் செயின்ட் பேட்ரிக் திருவிழா! * ஐரோப்பிய நாடான இங்கிலாந்து மான்செஸ்டரில் நடக்கும் இசை மற்றும் கலை திருவிழா! * ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் புனித இசை திருவிழா! * ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் மாஸ் திருவிழா! * இங்கிலாந்தில் உலக இசை கலை நடன திருவிழா! * ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் புனித ஆவி திருவிழா! * மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு கருப்பு மந்திர திருவிழா! * இந்தியாவின் வட மாநிலங்களில் நடக்கும் ஹோலி திருவிழா! * மேற்காசிய நாடான துருக்கியில் நடக்கும் சூபி ஞானி ரூமியின் திருவிழா! * ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடக்கும் ஈஸ்டர் திருவிழா! * அண்டை நாடான இலங்கையில் லிசாக் எனப்படும் புத்தர் தின திருவிழா. இவை எல்லாம் மிகவும் புகழ் பெற்றவை. உப்பு சப்பில்லாத பத்திய சாப்பாட்டில் பலாப்பழ பாயாசம் போல திருவிழாக்கள் வருகின்றன. இவற்றை கொண்டாடி மகிழ்வோம்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.