உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (222)

அன்புள்ள அம்மா...என் வயது, 17; தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படிக்கும் மாணவன். வியப்பான கேள்வி ஒன்று என் மனதில் அடிக்கடி வந்து செல்கிறது. மனிதர்களுக்கும், கிரீடங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா... இது தொன்று தொட்டு தொடரும் சென்டிமென்ட் என்கிறான் என் வகுப்பு நண்பன். எனக்கு இது பற்றி அறிய ஆவலாக உள்ளது. மனித தலை மீது, இன்னொரு ஆபரணமா என, நான் வியக்காத நாளில்லை. கிரீடம் மனிதருக்கு சொந்தமா, கடவுளுக்கு சொந்தமா... நல்ல தீர்ப்பு சொல்லுங்க...இப்படிக்கு,ஆர்.செல்வேந்திரன்.அன்பு மகனுக்கு...கிரீடத்தை பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அவை...மகுடம், மணிமுடி, பரிவட்டம், ஜடா மகுடம், ஜடா மண்டலம், ஜடா பந்தம், சர்ப்ப மவுலி, பிரிசடை, சுடர்முடி, கிரீட மகுடம், சிரஸ்திரகம், குந்தளம், நம்மில்லம் அல்லது தமிழம், அளகசூடம், கரண்ட மகுடம், எனப்படுகிறது.கிரீடத்தை கடவுளோ, மன்னர்களோ, அரசியல் தலைவர்களோ பதவியின் மாண்பை மிகைபடுத்தும் விதமாக சூடி வந்தனர்.பெண் தெய்வங்கள், முருகன், விநாயகர் போன்ற கடவுள் உருவங்கள் கரண்ட மகுடத்துடன் காணப்படுகின்றன. தலைப்பாகை வகைகளும், மகுடத்தில் தான் சேரும். கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் ஆண்டவர், 'டியாரா' என்ற கிரீடம் அணிகிறார். உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றவருக்கு கிரீடம் சூடப்படுகிறது. பண்டை காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு, ஆலிவ் கிரீடம் அணிவிக்கப்பட்டது.ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி விக்டோரியா அணிந்த கிரீடம், பெரும் பண மதிப்புடையது. தலைக்கு மேல் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மரகதம், பவளம், கோமேதகம் பதித்த கிரீட மரியாதை கடவுளருக்கும், மனிதருக்கும் தேவைப்படுகிறது. கிரீடம் என்பது மகிமையும், கண்ணியமும், பொறுப்பும் மிகுந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட தலை.கிரீடம் அணிந்த தலை மிக மிக பாரமானது. இந்த பொன்மொழியை ஐரோப்பாவில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். நல்ல மனைவி, தன் கணவனுக்கு கிரீடம் என்கிறது கிறிஸ்தவ வேத நுாலான பைபிள்.பல் மருத்துவத்தில், சிர்கேனியா, லித்தியம், டிசிலிகேட், செராமிக், தங்கம், தாமிரம் கலந்த பிசின் கிரீடங்கள் சிகிச்சையளிக்கப்பட்ட பல் மீது அணிவிக்கப்படுகிறது.கிரீடம் என்பது கடவுளருக்கு மட்டுமே சொந்தம் என தீர்ப்பளிக்கிறேன்.நவீன அல்ட்ரா மாடர்ன் உலகில், கிரீடம் அனாவசியமான ஒரு சுமை. ஒவ்வொரு ஆணும், ஒரு மகாராஜா; ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகாராணி. அவரவர் நற்செயல்களே அவர்கள் மானசீகமாய் அணிந்திருக்கும் கிரீடங்கள்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !