துன்பம் நேர்கையில்...
திருப்பூர் மாவட்டம், மண்ணரை, சசூரி வித்யாபவன் பள்ளியில், 2014ல், 11ம் வகுப்பு படித்தேன். அன்று வெள்ளிக்கிழமை. வகுப்பில் அமர்ந்திருந்தோம். உடன் படிக்கும் மாணவியின் அப்பா இறந்ததாக தகவல் வந்தது. அதை கேட்டு, 10 நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். பின், அரட்டை அடித்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அதை கண்ட ஆங்கில ஆசிரியர் ராஜ்குமார், 'உங்கள் வீட்டில் இதுபோல், துக்கம் நேர்ந்தால், சிரித்து கொண்டு இருப்பீரா...' என்று கோபத்தில் கடிந்தார். அவரது சொற்கள் சிந்திக்க வைத்தன. பிறர் துன்பத்தை உணர்ந்தேன்; அது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு, 22 வயதாகிறது; அந்த ஆசிரியரின் கடிந்துரையால் கற்ற பாடம், மனதில் நிலைத்திருக்கிறது.- எஸ்.நந்தினி, திருப்பூர்.