உள்ளூர் செய்திகள்

புதுமை கல்வி!

சிவகங்கை மாவட்டம், கண்டனுார் சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 11ம் வகுப்பு படித்த போது, ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார் ஆதிமூலம். ஒழுக்கத்தை கற்றுத்தந்தார். பிரத்யேக அறிவை உற்சாகத்துடன் வழங்கி வந்தார். அதற்கு, அவர் கையாண்ட விதம் நுாதனமானது.மாதம் ஒருமுறை குறிப்பிட்ட நாளில், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, ஒரு சிறிய புரஜெக்டர் எடுத்து வருவார். கல்வி சம்பந்தப்பட்ட ஆங்கில படங்கள், விடுதலைக்கு வித்திட்டவர்கள், வாழ்வை சித்தரிக்கும் ஆவணப்படங்கள், அரசு வெளியிடும் செய்திப் படங்களை திரையிடுவார். அவற்றை வகுப்பு வாரியாக, மாணவ, மாணவியர் பார்க்க ஒழுங்கு செய்வார். புத்தக கல்வியுடன், திரைக்கல்வி வழங்கியது, மிகவும் புதுமையாக இருந்தது. பரந்த அறிவை அது ஊட்டியது. என் வயது, 71; அந்த பள்ளியில், 2018ல் பவள விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் நன்றியுடன் பங்கேற்றது மன நிறைவை தருகிறது.- எல்.பஞ்சநதம், சிவகங்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !