உள்ளூர் செய்திகள்

எனக்குத்தான்!

முன்னொரு காலத்தில் நாரையும், தேன்சிட்டும் சிறந்த நண்பர்களாக இருந்தன.நாரையோ தோற்றத்தில் பெரியதாகக் காணப்படும். கருஞ்சிவப்பு நிறத்தில் உயரமாக, ஒல்லிக்குச்சித் தோற்றத்தில் இருக்கும். அதன் குரல் கூட கரகரப்பாக இருக்கும். ஆகாயத்தில் மிக உயரத்திற்குப் பறந்து செல்லும்.தேன்சிட்டு மிகச்சிறிய குருவி. அதன் பளபளக்கும் கருப்புச் சிறகும், மஞ்சள் நிற வயிற்றுப் பகுதியும் பார்ப்பவரைக் கவர்ந் திழுக்கும். குரலும் மிக அழகாக 'க்விக் க்விக்' என்று கேட்பவரை மயக்க வைக்கும். எனவே, அதற்கு 'ராகம் பாடும் பறவை' என்று கூட பெயர் உண்டு. கூடவே அது சிறிய சிறகுகளை அடித்து விர்ரென்று ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பறந்து செல்லும்.தங்கள் தோற்றத்திலும், குணத்திலும் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாரை யும், தேன்சிட்டும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அவை எப்போதும் ஒன்றிணைந்து நட்பு பாராட்டி வந்தன.அவை இரண்டுமே மீன்களை உண்பதில் விருப்பம் கொண்டிருந்தன. இரண்டுமே ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும். தேன்சிட்டு சிறிய மீன்களைக் கொத்தித் தின்னும். நாரை அதன் உருவத்திற்குத் தக்கவாறு பெரிய மீன்களைக் கொத்தித் தின்னும்.தேன்சிட்டுக்கு மீன்கள் மட்டுமின்றி பூக்களிலுள்ள தேனும் ரொம்பப் பிடிக்கும். அது நாரைக்குத் தெரியாமல், அவ்வப்போது பூக்களிலுள்ள தேனையும் உறிஞ்சிக் குடிக்கும்.ஒருநாள் வழக்கம்போல் நாரையும், தேன்சிட்டும் ஓர் குளக்கரையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தன. அப்போது தேன்சிட்டு நாரையிடம், ''நண்பா! நாம் இருவரும் இப்படி மீன்களைப் பிடித்து உண்பதால், இன்னும் சிறிது நாளில் மீன்களுக்குத் தட்டுப்பாடு வந்துவிடும் போலிருக்கிறதே!'' என்று சொன்னது.அதற்கு நாரையும், ''நீ சொல்வது சரிதான்! ஆனால், நம் இருவருக்குமே மீன் உணவு என்றால் மிகவும் பிடிக்கும். நாம் என்னதான் செய்வது?'' என்று கேட்டது.''நாம் ஒன்று செய்வோம். நாம் இருவருமே போட்டி ஒன்றை நடத்துவோம். நாம் இருவருமே வெகுதூரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பறந்து செல்ல வேண்டும். யார் முதலில் அந்த இடத்திற்குச் சென்று சேருகிறோமோ, அவர் வெற்றி பெற்றவர். அன்றிலிருந்து வெற்றி பெற்றவர் மட்டுமே மீன்களை உண்ண வேண்டும். தோல்வி அடைந்தவர் இனி, மீன்களை உண்ணக்கூடாது! எப்படி என் யோசனை?'' என்று கேட்டது.நாரைக்கும் தேன்சிட்டின் யோசனை சரியென்றே பட்டது.''சரி, நாம் இருவரும் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து பறந்து செல்வோம். நம் இலக்கு அதோ தூரத்திலுள்ள ஆற்றங் கரையில் நிற்கும் ஒரு பட்டுப் போன மரத்தைச் சென்று சேர்வதுதான். அந்தப் பட்டுப் போன மரத்தின் உச்சியில் யார் முதலில் சென்று அமர்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். அன்றிலிருந்து இந்த உலகத்திலுள்ள மீன்கள் எல்லாம் அவருக்கே சொந்தம்! சரிதானா?'' என்று கேட்டது நாரை.தேன்சிட்டும், நாரையின் யோசனைக்கு ஒப்புக் கொண்டது. இரண்டும் மறுநாள் போட்டியை நடத்தத் தீர்மானித்தன.மறுநாளும் வந்தது.நாரையும், தேன்சிட்டும் குறிப்பிட்ட நேரத்தில் பறக்கத் தொடங்கின.நாரை நேராகத் தன் பெரிய சிறகுகளை அடித்து, வெற்றி இலக்கை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. குறும்பு நிறைந்த தேன் சிட்டோ, தன் சிறிய சிறகுகளை அடித்து, நாரையைச் சுற்றிச் சுற்றி வந்து ஓட்டம் காட்டியது.நாரை ஆற்றைக் கடக்கும் எண்ணத்தில் முன்னோக்கிப் பறந்து கொண்டிருந்தது. ஆனால், வழியெங்கும் பூத்துக் கிடந்த பூக் களைக் கண்டவுடன், தேன்சிட்டுக்கு அதன் கவனம் சிதறியது.அது நாரையை முன்னால் பறக்கவிட்டு, பூக்களை ரசித்தபடியே பறந்தது. தேன்சிட்டின் கவனம் சிதறச் சிதற நாரை தேன்சிட்டை விட்டு வெகுதூரம் முன்னே பறந்துவிட்டது.இவ்வாறு இரண்டும் பறந்து கொண்டிருந்த போது, பொழுது இருட்டத் தொடங்கியது. முதல்நாள் இரவும் வந்து சேர்ந்தது.நாள் முழுவதும் சிறகை அடித்துப் பறந்த தேன்சிட்டுக்கு களைப்பு தோன்றியது.'இன்றிரவு ஏதேனும் ஒரு மரத்தில் தங்கியிருந்துவிட்டு, நாளை மீண்டும் பறக்கத் தொடங்கலாம்' என்று நினைத்தது தேன் சிட்டு. எனவே, அது ஒரு மரத்தில் இறங்கி, இளைப் பாறத் தொடங்கியது. முன்னே சென்ற நாரையைக் காணவே இல்லை.மறுநாள் பொழுது புலர்ந்தது. தேன்சிட்டு உறக்கம் கலைந்து விழித்தது. அப்போது மரத்தின் கீழே நின்றிருந்த பல செடிகளில் பூத்திருந்த அழகழகான, வண்ணமய மான பூக்கள் தேன்சிட்டின் கண்ணில் பட்டன.தேன்சிட்டு, நேராகப் பூக்களுக்குத் தாவியது. பூக்களிலுள்ள தேனை உறிஞ்சிக் குடித்தது. தேனின் சுவையில் தேன்சிட்டு நாரையைப் பற்றி மறந்தே போனது. இதற்குள் நாரை வெகுதூரம் பறந்து போய்விட்டதை அது கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.நாரை வெற்றி இலக்கான, அந்தப் பட்டுப் போன மரத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது.திடீரென்று போட்டி பற்றி ஞாபகம் வந்தது தேன்சிட்டுக்கு. எனவே, அது மீண்டும் சிறகை அடித்துப் பறக்கத் தொடங்கியது. இரண்டாவது நாள் பொழுது இருட்டத் தொடங்கியது. முதல் நாளைப் போலவே தேன்சிட்டு அங்கிருந்த ஒரு மரத்தில் தங்கியது. மறுநாள் அது போலவே, அங்கிருந்த பூக்களின் தேனைக் குடித்துச் சுவைத்தது.பிறகு மீண்டும் வெற்றி இலக்கை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. இப்படியே மூன்று நாட்கள் நிறைவு பெற்றன. நான்காவது நாளும் வந்து சேர்ந்தது.தேன்சிட்டைப் போல கவனத்தைச் சிதற விடாத நாரை எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் பறந்தது. அது வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தது. வெற்றி இலக்கான பட்டுப்போன மரத்தை அடைந்து, அதன் உச்சிக்குப் பறந்து, குறிப்பிட்ட இடத்தில் போய் அமர்ந்தது.நான்காவது நாள் காலையில் தேன் சிட்டோ, உறக்கக் கலக்கத்தில் இருந்தது. ஒருவழியாக உறக்கம் கலைந்த தேன்சிட்டு, தன் சிறிய சிறகுகளை அடித்துப் பறந்து, ஆற்றைக் கடந்து அந்தப் பட்டுப்போன மரத்தை அடைந்தது.ஆனால், அதனால் என்ன பயன் உண்டாகப் போகிறது? தேன்சிட்டு வந்து சேர்வதற்கு வெகுநேரத்திற்கு முன்பே நாரை, தன் வெற்றி இலக்கை அடைந்து, அங்கே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருந்தது.போட்டியில் நாரை வெற்றி பெற்றது. தேன்சிட்டு பரிதாபமாகத் தோற்றுப் போனது.தாமதமாக வந்த தேன்சிட்டிடம் நாரை, ''நண்பரே! போட்டியில் நானே வெற்றி பெற்றேன். இனி இந்த உலகத்திலுள்ள ஆறு, குளம், ஏரிகளிலுள்ள மீன்கள் எல்லாம் எனக்குத்தானே சொந்தம். இதை ஒப்புக் கொள்கிறாய் அல்லவா?'' என்று கேட்டது.தேன்சிட்டும், ''உண்மைதான்! நான் என் கவனக் குறைவால் தோற்றுவிட்டேன். நம் ஒப்பந்தப்படி இனி நான் மீன்களை உண்ண மாட்டேன். பூக்களிலுள்ள தேனைக் குடிக்கும் எண்ணத்தில் என் கவனத்தைச் சிதற விட்டேன். இனி நான் மீன்களை உண்ணவே மாட்டேன். இனி நான் பூக்களிலுள்ள தேனை மட்டும் குடித்து உயிர் வாழ்வேன்!'' என்று ஒப்புக் கொண்டது.அன்றிலிருந்து நாரைகள் மீனை உண்ணத் தொடங்கின.தேன்சிட்டு பூக்களிலுள்ள தேனை மட்டும் தன் கூரிய அலகால் குத்தி உறிஞ்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு, 'தேன்சிட்டு' என்ற பெயரே நிலைத்து விட்டது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !