உள்ளூர் செய்திகள்

தீர்ப்பு! - (2)

அவர்களுள் ஒருவர் இரண்டு மணி நேரம் விழித்திருக்கவும், மற்ற மூவர் உறங்கவும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்றொருவனை எழுப்பி விட்டு, விழித்திருப்பவன் உறங்க வேண்டும் என்றும் அவர்கள் வகுத்துக் கொண்டனர். அவ்வாறே நால்வரும் தலைக்கு இரண்டு மணி நேரம் விழித்திருந்து, காவல் புரிய வேண்டும் என்று ஓர் ஏற்பாடு செய்துக்கொண்டனர்.அந்த ஏற்பாட்டின் படி முதலில் கோபியை விழித்திருந்து காவல் புரிய வேண்டினர். மற்றவர்கள் உறங்கினர்.கோபி அடிக்கடி சுள்ளிகளையும், விறகுகளையும் தீயில் இட்டு, அதனை வளர்த்து வந்தான். அவனால் வீண் பொழுது போக்க முடியவில்லை. அருகில் பெரிய மரம் ஒன்று விழுந்து கிடப்பதைக் கண்டான். தன்னிடமுள்ள ஆயுதங்களை எடுத்து அம்மரத்திலிருந்து ஐந்து அடி நீளமுள்ள துண்டு ஒன்றை வெட்டியெடுத்தான்.பின்னர் தீயின் ஒளியைக் கொண்டு, அம்மரத்துண்டில் ஓர் அழகிய பெண்ணின் உருவத்தைச் செதுக்கத் தொடங்கினான். விரைவில் அதை அழகாக செய்து முடித்தான். அவன் அம்மரச் சிலையைச் செய்து முடிப்பதற்கும், அவன் விழித்திருக்க வேண்டிய இரண்டு மணி நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது. உடனே அவன் ரவியை எழுப்பி விட்டு, உறங்கச் சென்று விட்டான்.ரவி தீயின் முன்னால் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பொழுதுபோகவில்லை. சுற்றும், முற்றும் பார்த்தான். தன் அருகில் மரத்தால் செய்யப்பட்ட அழகான பெண் சிலை இருப்பதைக் கண்டான்.சேலை ஒன்று நெய்து அதற்கு உடுத்தினால், அழகாக இருக்கும் என எண்ணினான். தன்னிடமிருந்த விலை உயர்ந்த பட்டு நூலை எடுத்துத் தறி அமைத்து விரைவில் அழகான புடவை ஒன்றை நெய்து முடித்தான். அப்புடவையை அம்மரச் சிலைக்கு உடுத்தி மகிழ்ந்தான். அதற்குள் அவனது காவல் நேரம் முடிந்து விட்டது. அதனால் அவன் வசந்தனை எழுப்பி விட்டு, உறங்கச் சென்றுவிட்டான்.வசந்தன் தீயின் முன்னால் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். பின்னர் எதிரில் அழகான மரச்சிலை பட்டாடை உடுத்தி நிற்பதைக் கண்டு வியப்படைந்தான். இவ்வளவு அழகான சிலையைச் செய்தவர்கள் கோபியும், ரவியும் தான் என்பதை வசந்தன் புரிந்துக் கொண்டான்.அச்சிலைக்கு ஒரு நகைக்கூட இல்லாமல் இருப்பதைக் கண்டான். அச்சிலைக்கு தன்னிடமுள்ள பொன்னால் அணிகலன்கள் செய்து அணிவிக்க விரும்பினான்.அவ்வாறே செய்யத் தொடங்கினான். விரைவில் ஒரு சிறந்த பொன் சங்கிலியும், காதுக்கு கம்மலும், கைக்கு வளையல்களும் செய்து முடித்து, அச்சிலைக்கு அவற்றை அணிவித்து அழகுபடுத்தினான்.அப்போது அச்சிலை மிகவும் அழகுடைய தாயிற்று. ஓர் உயிருள்ள பெண்ணே எதிரில் நிற்பது போல் இருந்தது. அதன் அழகு காண்பவர்களைக் கவரும் தன்மையுடையதாயிருந்தது. அந்நிலையில் அவனுடைய காவல் நேரம் முடிந்தது. அவன் மதுவை எழுப்பி விட்டு, உறங்கச் சென்று விட்டான்.மது அம்மரச்சிலையைக் கண்டு களிப்புற்றான். இவ்வளவு அழகிய சிலை உயிர் இல்லாமல் இருப்பதை எண்ணி வருத்தமடைந்தான்; இச்சிலைக்கு உயிர் இருக்குமானால், மிகவும் நன்றாக இருக்குமே என்று எண்ணினான்.'என் நண்பர்கள் மூவரும் தங்களுடைய கலைத்திறன்களை இம்மரச்சிலையின் மூலம் வெளிப்படுத்தி விட்டனர். நானும் என் வல்லமையை என் நண்பர்களுக்கு விளக்கிக் காட்ட இதுவே தக்க வாய்ப்பு என்று கருதினான். உடனே, தன் ஆசிரியரை நினைத்து வணங்கினான். சில மந்திரங்களை ஓதினான். தன்னிடமிருந்த தண்ணீரை அச்சிலையின் மீது தெளித்தான்.அவன் அவ்வாறு செய்ததுதான் தாமதம்! உடனே உயிரற்ற அம்மரச்சிலை, கண்களைத் திறந்து, புன்னகை பூத்து, அழகாக அவன் முன் நடந்து வந்து வணங்கி நின்றது. அதைக் கண்ட மது, தன் கலையின் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தான். தன் ஆசிரியரை, மனமார நினைத்து வணங்கினான்.அந்நிலையில் பொழுது விடிந்தது. மற்ற நண்பர்கள் மூவரும் உறக்கம் தெளிந்து எழுந்தனர். மதுவின் அருகில் அழகுமிக்க ஒரு பெண் நிற்பதைக் கண்டு வியந்தனர்.ஒவ்வொருவருக்கும் தாம் செய்த செயல் நினைவுக்கு வந்தது. அவர்கள் செய்த செயல் காரணமாக, ''அப்பெண் தமக்கே உரியவள்!'' என்று நால்வரும் உரிமை கொண்டாடினர்.''இந்த பெண் உருவத்தை அமைத்தவன் நானே. இதற்கு மூலகாரணமாக இருந்தவன் நான். நான் மரத்தினால் இதைச் செய்யவில்லை என்றால் இப்பெண் இங்கே எவ்வாறு வர முடியும்? எனவே, இவள் எனக்கே உரியவள்,'' என்று உரிமை கொண்டாடினான் கோபி.''இந்தப் பெண் உலகில் மானத்தோடு வாழ, நடமாட இவளுக்கு ஆடை அளித்தவன் நானே. ஆடை இல்லையென்றால், இவள் இங்கு வந்து நிற்பாளோ... எனவே, இப்பெண் எனக்கே உரியவள்,'' என்று வாதாடினான் ரவி.''இந்த அழகிற்கு அழகு செய்வது, இவள் அணிந்திருக்கும் பொன் அணிகலன்களே... பொன் அணிகலன்களைப் பொலிவுறச் செய்து இவளுக்குப் பூட்டியவன் நான். பெண்ணுக்கு அழகு பொன்னணி என்பர். ஒரு பெண்ணிற்கு அணிகலன்கள் இல்லையென்றால், அவளுக்கு அழகும், மதிப்பும் இல்லை. ஆகையால் இவள் எனக்கே உரியவள்,'' என்று உரிமை பேசினான் வசந்தன்.நண்பர்கள் மூவரும் பேசிய உரிமை வாதங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மது சிரித்தான். அம்மூவரையும் நோக்கி, ''நண்பர்களே! உங்களுடைய வாதம் இருக்கட்டும். இப்பெண்ணிற்கு உயிர் கொடுத்தவன் நானே. இவள் உயிர் இல்லாமல் இருந்தால் மரச் சிலைத்தானே... மரச்சிலையாக இருந்தால் நாம் இவ்வாறு விரும்புவோமா? இச்சிலையை இங்கேயே விடுவித்து, நம் அணிகளையும், உடைகளையும் எடுத்துக் கொண்டு நம் ஊரை நோக்கி செல்வோமன்றோ? நீங்கள் இப் பெண்ணிற்கு அளித்துள்ள உருவம், உடை, அணிகலன்கள் முதலிய எல்லாவற்øயும் விட, நான் அளித்துள்ள உயிரே மிக உயர்வானது. ஆகையால் இப்பெண் எனக்கே உரிமையானவள். இதை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்று அப்பெண்ணின் மீது உரிமைக் கொண்டாடினான்.அவற்றையெல்லாம் கண்டும், கேட்டும் நின்ற அப்பெண் மவுனமாகவே இருந்தாள். நீண்ட நேரவாதத்திற்குப் பிறகு, நால்வரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அருகில் இருந்த நகரத்தின் அரசனிடம் தங்கள் வழக்கைத் கூறுவதென்றும், அவ்வரசன் அளிக்கும் தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்தனர். நால்வரும் அப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.நால்வரும் சென்று அந்த நகரத்து அரசனைக் கண்டு தங்கள் வழக்கு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினர். அவ்வழக்கினைக் கேட்ட அரசன் வியப்படைந்தார். அது போன்ற வேடிக்கையான வழக்கை அவர் அதுவரை கேள்விப்பட்டதில்லை. அரசன் அவ்வழக்கினைக் குறித்து நன்கு சிந்தித்தான்.''கோபி! உன்னுடைய கை வேலைத்திறனாலும், மதியினாலும் இப்பெண்ணின் உருவத்தை முதன் முதலில் நீ உண்டாக்கியதாகக் கூறினாய். இவ்வுருவத்தைச் செய்ததினால் தான், அதில் மது உயிர் ஊட்ட முடிந்தது என்றும் கூறுகிறாய். இந்நிலையில் பார்த்தால், நீ இப்பெண்ணிற்குத் தாய் முறை ஆகவேண்டும். தான் பெற்ற பெண்ணைத் தாயே மணந்து கொள்ள முடியுமா? எனவே, இப்பெண் உனக்கு உரிமை <உடையவள் அல்ல.''வசந்த்! நீ இப்பெண் உலகத்தில் மானத்துடன் வாழப் பட்டாடை அளித்ததாக வாதாடுகிறாய். உலகில் ஒரு தந்தை தன் பெண்ணிற்குச் செய்ய வேண்டிய மிகச் சாதாரண கடமைகளில் இதுவும் ஒன்று. தன் குழந்தைகளுக்கு உடைகளை அளிக்க வேண்டியது தந்தையின் கடமையன்றோ? எனவே, நீ பெண்ணிற்குத் தந்தை முறை ஆவாய். ஆகையால், உன் வாதமும் பொருந்தாது.''மது! மரச்சிலைக்கு நீ உயிரூட்டியதால், இப்பெண் உனக்கே உரியவள் என்று உரிமை வாதம் புரிகிறாய். ஆனால், உயிர் கடவுளால் அளிக்கப்படுவது. அச்சிலைக்கு உயிரூட்டியதால், நீ இப்பெண்ணுக்குக் கடவுளாகிறாய். ஆகையால், நீ இவளை மணந்து கொள்ளுதல் இயலாது.''ரவி! உன்னுடைய பொன்னணிகள் இவளை அழகு மிக்கவளாகச் செய்கின்றன வாயினும், இப்பெண் யாரை விரும்புகின் றாளோ, அவனுக்குத்தான் உரியவளாவாள்,'' என்று விளக்கமாகக் கூறினான். நால்வரும் அவற்றை ஏற்றுக் கொண்டனர்.அரசன் அப்பெண்ணை நோக்கி, ''நீ யாரை விரும்புகிறாய்?'' என்று கேட்டார்.அப்பெண், ''நான் இளவரசனை மணக்க விரும்புகிறேன்,'' என்றாள்.அதைக்கேட்ட அரசன், நால்வரையும் நோக்கி, ''இப்பெண்ணின் விருப்பப்படியே தீர்ப்புக் கூறுகிறேன். இவள் என் மகனுக்கே உரியவள்,'' என்று தீர்ப்புக் கூறினான்.நால்வரும் தலையை தொங்கபோட்டுக் கொண்டு சென்றனர்.முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !