காக்கா பொன் குமரேசன்!
மதுரை மாவட்டம், மேலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது, நடந்த சம்பவம் இது... ஒருநாள், மாணவர் வருகையை பதிவு செய்து கொண்டிருந்தார், வகுப்பாசிரியர் ஏகாம்பரம். குமரேசன் என்ற மாணவன் மட்டும் வரவில்லை. 'ஆப்சென்ட்' போட எத்தனித்த போது, மைதானத்தில் அவன் ஓடி வருவதை கவனித்து கூறினேன். மைதானத்தை பார்த்தார் ஆசிரியர். அவனது அழுக்கான சட்டையில், 'பளபள' என, சூரிய ஒளியில் ஒளிரும் கண்ணாடி சில்லுகள் போல் ஜொலித்தன. அவனை கூர்ந்து கவனித்தபடி, பளபளப்புக்கு விளக்கம் கேட்டார்.சற்று தயக்கத்துடன், 'காலையில் அப்பாவுடன் கிணறு தோண்ட போனேன். மண்ணை சுமந்து அகற்றிய போது, 'காக்கா பொன்' என்ற உலோக துகள், சட்டையில் ஒட்டியது; துடைத்தும் அகலவில்லை. மாற்றுச் சட்டை இல்லாததால், அதையே அணிந்து வந்தேன்...' என்றான்.அவனது உழைப்பை, வெகுவாக பாரட்டிய ஆசிரியர், தேவையான உதவிகள் செய்தார். அன்று முதல் அவனை, 'காக்கா பொன் குமரேசன்' என்போம். இப்போது என் வயது, 58; பள்ளி படிப்பை முடித்து, 43 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த நினைவுகள் அழியவில்லை. உழைப்பை மதித்து, ஆசிரியர் செய்த உதவியை, நானும் பின்பற்றி வருகிறேன்.- எஸ்.சந்திரன், காஞ்சிபுரம்.