எல்லாம் தெரியும்!
மாலை நேரம். கடல் அலையினை ரசித்தபடி கடற்கரையில் அமர்ந்தான் தங்கமணி. அந்த நேரத்தில் அங்கே தர்மலிங்கம் வந்தான்.''நண்பனே, உன்னைப் பார்த்து வெகு நாட்களாகிறதே... எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டான் தர்மலிங்கம்.''நான் நன்றாகதான் இருக்கிறேன். இதோ இந்த கடல் அலையை நான் ரசித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் என்னிடம் நீ இடையூறு செய்ய வந்திருப்பது போன்று தெரிகிறது,'' என்றான் தங்கமணி.''அடடே! இத்தனை நாட்களுக்குப் பின்னரும் உன்னுடைய குணம் மாறவில்லையே. நீ கடல் அலையை ரசிக்கிறாயே... கடல் அலையைப் பற்றி உனக்கென்ன தெரியும்?'' என்று கேட்டான் தர்மலிங்கம்.''என்னிடத்தில் நீ அப்படிப் பேசாதே. நான் உன்னை விடவும் ஏகப்பட்ட விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறேன். இயற்கையான இந்த கடல் அலையை ரசிக்கிற ரசனை உனக்குத்தான் இல்லை. ஆனால், எனக்கு இருக்கிறது. அதனை நீ என்றுமே மறவாதே,'' என்றான் தங்கமணி.''நண்பா, உனக்கே எல்லாம் தெரிவது போன்று நீ பேசிக் கொண்டிருக்கிறாய். நீ இவ்வாறு இருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்கு முன்னர் ஓரளவுக்குத்தான் ஆணவம் உள்ளவனாக இருந்தாய். இப்போது அதிகமாக ஆணவம் உள்ளவனாக காணப்படுகிறாய். கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பதை மறந்துவிடாதே,'' என்றார் தர்மலிங்கம்.''இதோ பார், எனக்கு நீ அறிவுரை சொல்ல வேண்டாம். எனக்குத் தெரிந்த அனுபவ அறிவுகளில் உனக்குக் கால் பங்கு கூட தெரிய வாய்ப்பில்லை. நல்ல அனுபவசாலியான என்னிடம் நீ அடக்கத்துடன் பேசக் கற்றுக் கொள்,'' என்றான் தங்கமணி.''நண்பனே, உன்னிடம் பேசுகிற போதெல்லாம் உன்னை நீ அறிவாளியாகவும், அனுபவம் மிக்கவனாகவும் உயர்த்திக் கொண்டு பேசுகிறாய். நீ அறிவாளியாக இருந்தால் அதனைக் கண்டு நான் மகிழ்ச்சியடைவேன். ஒருவேளை நீ முட்டாளாக இருந்து விட்டால் என்ன செய்வது? அதனை நினைக்கையில்தான் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது?'' என்றான் தர்மலிங்கம்.''என்னையா நீ முட்டாள் என்கிறாய்? நீ என்ன வேலை செய்யச் சொன்னாலும் அதனை நான் சிறப்புடன் செய்து காட்டுவேன். அப்போதுதான் நீ என்னுடைய அறிவையும், புத்திசாலித்தனத்தையும் புரிந்து கொள்வாய்,'' என்று கூறினான் தங்கமணி.''அப்படியானால் நீ நாளை மாலை இதே இடத்திற்கு வா. நான் உனக்கு ஒரு பரீட்சை வைக்கிறேன். உன் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி நீ அந்தப் பரீட்சையில் எப்படி வெற்றி பெறுகிறாய் என்று பார்க்கலாம்,'' என்றான் தர்மலிங்கம்.''ஓ, தாராளமாக வைத்துக்கொள். நான் அதில் வெற்றி பெறுவேன். நீதான் வெட்கத்தால் தலைகுனிவாய்,'' என்றான் தங்கமணி.''சரி நண்பனே, நாளை மாலையில் யார் தலைகுனியப் போகின்றனர் என்று பார்க்கலாம்,'' என்று கூறியபடி சென்றான் தர்மலிங்கம்.மறுநாள் மாலை நேரத்தில் தர்மலிங்கத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான் தங்மணி.சிறிது நேரத்தில் அங்கே தர்மலிங்கம் வந்து விட்டான். அவனிடம் சிறிய பை ஒன்று இருந்தது. அந்தப் பையின் உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போன்று தெரிந்தது.''வா தர்மலிங்கம் வா, நீ எப்போது வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் பையோடு வந்திருக்கிறாயே, பையின் உள்ளே என்ன இருக்கிறது?'' என்று கேட்டான் தங்கமணி.உடனே தர்மலிங்கம் பையின் உள்ளே கைவிட்டு தேங்காய் ஓடு ஒன்றினை வெளியே எடுத்தான்.''என்ன பையில் இருந்து கொட்டாங்குச்சியை எடுக்கிறாயே!'' என்று கேட்டான் தங்கமணி.''நண்பா, இந்த கொட்டாங்குச்சியை உன்னிடம் கொடுக்கப் போகிறேன். நீ இதன் உதவியால் இந்தக் கடலில் இருக்கிற தண்ணீரை எல்லாம் இறைத்து கரையில் சேர்க்க வேண்டும்!'' என்றான் தர்மலிங்கம்.''அதெப்படி முடியும்? இந்த பரந்து விரிந்துள்ள கடல்நீரை சிறிய கொட்டாங்குச்சியால் இறைத்துக் கரை சேர்ப்பது சாத்திய மாகுமா?'' நீ நடக்காத கதையைக் கூறுகிறாய்!'' என்றான் தங்கமணி.''நண்பனே, நீதானே நேற்று என்னிடம் எதையும் செய்துவிடுவேன் என்றும், உன்னுடைய அறிவையும், அனுபவத்தையும் இன்று என்னிடம் நிரூபித்துக் காட்டுவதாகவும் கூறினாய். இந்த உலகத்தில் நீ செய்ய முடியாத செயல் எதுவுமே இல்லையென்று திட்ட வட்டமாக அறிவித்தாயே. உன் அறிவாலும், அனுபவத்தாலும் இந்தக் கொட்டாங்குச்சியால் கடல் நீரை இறைத்துக் காட்டு பார்க்கலாம்,'' என்றான்.அதனைக்கேட்ட தங்கமணியோ பதில் எதுவும் பேச முடியாமல் அமைதியுடன் நின்றான்.''நண்பனே, சிறிய கொட்டாங்குச்சியின் மூலமாக நீ என்னுடைய ஆணவத்தை அடக்கி விட்டாய். இப்போது நான்தான் தலை கவிழ்ந்து நிற்கிறேன்,'' என்றான் தங்கமணி.***