உழைப்பும், சோம்பலும்!
விவசாயம் செய்ய நிலமின்றி கவலையில் தவித்தார் விவசாயி சாமி. அதற்காக நிலம் கேட்டு மன்னருக்கு மனுக்கள் கொடுத்தார். எந்த பலனும் இல்லை. செய்வதறியாது வருந்தி நின்றார்.இதைக் கண்ட ஊர் பெரியவர், 'நம் கிராமத்துக்கு அருகில் மந்திரமலைக்கு ஒரு முனிவர் வந்துள்ளார்; அவரிடம் உன் மனக்குறையை கூறினால் தீர்வு கிடைக்கும்...' என நம்பிக்கையூட்டினார். மலை உச்சிக்கு சென்றார் விவசாயி. அங்கு முனிவரை சந்தித்து, 'ஐயா... நான் கடும் உழைப்பாளி. விவசாயம் செய்ய நிலம் ஏதுமில்லை...' என முறையிட்டார்.'கவலைப்படாதே, இந்த மலை கேட்டதை தரும் சக்தி வாய்ந்தது. நாளை, சூரியன் உதித்ததும், மலை அடிவாரத்திற்கு செல்; நிழல் விழும் இடத்தை எல்லாம் உனக்கு சொந்தமாக்கிக் கொள்; அதில் வேலியமைத்து சிறப்புடன் விவசாயம் செய்...''ஐயா... அங்கு மண் கெட்டியாக இருக்குமே; அதை உழுது பண்படுத்த காளையோ, ஏர் கலப்பையோ என்னிடம் இல்லையே...''எல்லாம் கிடைக்கும்... கவலை படாமல் போய் வேலையை பார்...'நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசி அனுப்பினார் முனிவர். சிறிது நேரத்தில் -முனிவரை பார்க்க வந்த சோம்பேறி, 'ஐயா... எனக்கு உழைத்து பழக்கமில்லை; ஆனால், பணக்காரனாக விரும்புகிறேன்...' என்றான்.'மகனே... மலை அடிவாரத்தை சுற்றிலும் புதையல் உள்ளது; அதை வேலியமைத்து ஒருவன் நாளை பராமரிக்க உள்ளான்; அதற்கு முன் இரவோடு இரவாக இயன்ற அளவு நிலத்தை தோண்டி, புதையலை எடுத்துக் கொள்...' என்றார் முனிவர்.அன்று இரவே, மண்ணை தோண்டி புதையல் தேட ஆரம்பித்தான் சோம்பேறி.மண்ணை கிளறி சல்லடை போட்டும் ஏதும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன், முனிவரை திட்டியபடி மூலையில் படுத்தான் சோம்பேறி. விடிந்ததும், அங்கு வந்தார் விவசாயி. மண் நன்றாக பண்பட்டிருப்பதைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது. மழையும் பெய்ய துவங்கியது. முனிவரை நன்றியுடன் நினைத்தபடி, பண்பட்டிருந்த நிலத்தில் விதை போட்டு விவசாயம் செய்தார். கடுமையாக உழைத்தார். செழித்து வளர்ந்தன பயிர்கள். ஆறு மாதங்களுக்கு பின் விவசாயிக்கு நல்ல வருமானம் கிடைத்தது.அறுவடை முடிந்ததும், முனிவருக்கு நன்றி சொல்ல புறப்பட்டார் விவசாயி. மந்திரமலைக்கு சென்றதும், 'ஐயா... நீங்கள் கூறியது போல விவசாயம் செய்தேன்; நல்ல மகசூல் கிடைத்தது; அதை விற்று கிடைத்த லாபத்தில் விவசாயத்துக்கு தேவையான கருவிகளை வாங்கி விட்டேன்; மீதி பணத்தை எடுத்து வந்துள்ளேன்...' என பணிவுடன் கொடுத்தார் விவசாயி.அருகே படுத்திருந்த சோம்பேறியை அழைத்த முனிவர், 'தம்பி... இந்த பணத்தை வாங்கி கொள்...' என்றார்.எதுவும் புரியாமல் விழித்த சோம்பேறியிடம், 'உலகத்தில் உழைக்காமல் ஏதும் கிடைக்காது. புதையல் கிடைக்கும் என்று தேடி மலை அடிவார நிலத்தை தோண்டினாய் அல்லவா... அந்த மண் நன்றாக பண்பட்டு விளைநிலமாக மாறிவிட்டது. அதில் விவசாயம் செய்ததில் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதி தான் இது... உன் கடின உழைப்புக்கான கூலி. வாங்கிக் கொள்...' என்றார் முனிவர்.கண் கலங்கிய சோம்பேறி, உழைப்பால் கிடைத்த பணத்தை வாங்கியதும் திருப்தி அடைந்தான். மகிழ்ச்சியுடன் முனிவரை வணங்கி அடுத்த வேலையை தேடி புறப்பட்டான்.குழந்தைகளே... உழைப்பே உயர்வு தரும்!