உள்ளூர் செய்திகள்

தலைமை பண்பு பயிற்சி!

திருப்பூர் மாவட்டம், செந்தாம்பாளையம், செல்வ விநாயகர் கல்வி நிலைய தொடக்கப் பள்ளியில், 1991ல், 5ம் வகுப்பு படித்தபோது, ஒழுக்கம் மற்றும் முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை பெற்றேன்.ஒவ்வொரு மாதமும், முதல் வாரம் பள்ளியில் மாணவர் மன்றம் நடைபெறும். அதில், 5ம் வகுப்பு மாணவ, மாணவியரை தேர்ந்தெடுத்து, பிரதமர், அமைச்சர் போன்ற நிர்வாகப் பதவிகளில் அமர்த்தி, பள்ளி வளாகத்தை சிறப்புடன் பராமரிக்க துாண்டுவர். செய்த வேலைகள், செய்ய தவறிய பணிகளை பட்டியலிட்டு, குறிப்பேடு எழுத வேண்டும். அடுத்தக் கூட்டத்தில் அதுபற்றி கலந்துரையாடல், விவாதம் நிகழும். அதற்கு, முறையாக பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு, தலைமைப் பண்புடன், பொறுப்புணர்வையும் உணர்த்தினார், தலைமை ஆசிரியை சிரஞ்சீவி. தற்போது வெளிவந்துள்ள, 'சாட்டை 2' என்ற திரைப் படத்தில் வரும் மாணவர் பார்லிமென்ட், 27 ஆண்டுகளுக்கு முன், எங்கள் பள்ளியில் அமலில் இருந்தது.என் வயது, 37. பள்ளி மன்றத்தில் பெற்ற பயிற்சிதான், என்னை சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி மையம் அமைத்து, சேவை செய்யத் துாண்டியது. பயிற்றுவிப்பதில் முனைவர் பட்டமும் பெற வைத்துள்ளது. எங்களை உயர்த்த உழைத்த ஆசிரியர்களை மனதில் கொள்கிறேன்.- கி.மஞ்சுளா செந்தில், திருப்பூர்.தொடர்புக்கு: 93666 99887


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !