கணக்கு மீது காதல்!
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, ஆர்.சி.துவக்கப்பள்ளியில், ௨௦௦௩ல், ௨ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு!அன்று, கணித வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். கரும்பலகையில் சில எண்களை எழுதியிருந்தார். அவற்றை, 'ஏறு' மற்றும், 'இறங்கு' வரிசையில் அமைக்க என்னிடம் கூறினார். ஒன்றும் புரியாமல் முழித்தேன்.என் காதை திருகியபடி வெளியே அழைத்து சென்றார். வகுப்பறை பக்கத்திலேயே மாடிப் படிக்கட்டு இருந்தது. ஒவ்வொரு படியிலும் ஒரு மாணவரை நிறுத்தி, வரிசைப்படி எண் எழுதிய பதாகைகளை கொடுத்திருந்தார். அவற்றை கீழிருந்து மேலாக வாங்க சொன்னார்.ஒன்று, இரண்டு, மூன்று... என வாய் விட்டு எண்ணியபடி, படிகளில் ஏறி வாங்கினேன். அதுதான் ஏறு வரிசை என உணர்த்தினார். பின், அதே பதாகைகளை வரிசைப்படி, உரியவர்களிடம் கொடுக்கச் சொன்னார். பத்து, ஒன்பது, எட்டு... என இறங்கினேன். அதுதான் இறங்கு வரிசை என உணர்ந்தேன். அந்த கணித அடிப்படை பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து, 'அட... இவ்வளவு தானா கணக்கு' என வியக்க வைத்தது. அதன் மீது காதலையும் ஏற்படுத்தியது. என் வயது, 23; கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, முனைவர் பட்ட ஆராய்ச்சியில் சேர விண்ணப்பித்துள்ளேன். இளம் வயதிலே கணிதத்தை செயல்முறையாக கற்பித்த அந்த ஆசிரியரின் பெயர் மறந்து விட்டாலும், முகம் நிழலோவியமாய் மனதில் பதிந்துள்ளது.- சரண்யா மோகன்ராஜ், கோவை