அன்பே வெல்லும்!
குகையை விட்டு, கம்பீரமாக வெளியே வந்தது சிங்கம். 'இன்று நல்லா சாப்பிடணும்; கண்களில் எந்த விலங்கு அகப்பட்டாலும், விடக் கூடாது. உடனே, அடித்துச் சாப்பிட வேண்டியது தான்' என, எண்ணியபடியே நடந்தது.அன்று எந்த விலங்கும் தென்படவில்லை; மிகவும் கவலை அடைந்தது சிங்கம்.அலைந்து அலைந்து சோர்ந்தது. மாலையில், ஒரு நதிக்கரையை அடைந்தது.'உணவு தான் கிடைக்கவில்லை; தண்ணீரைக் குடித்தாவது, வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம்' என்ற முடிவுடன், நதியில் இறங்கியது. தண்ணீரை, 'மடக்... மடக்...' என்று குடிக்கத் துவங்கியது.அந்நேரத்தில், மிகவும் சோர்வுடன் வந்து கொண்டிருந்தது ஒரு மான்.அதைக் கண்டதும், நாவில் எச்சில் ஊற, 'எப்படியாவது அடித்துச் சாப்பிட வேண்டும்' என முடிவு செய்தது சிங்கம்.தண்ணீர் குடித்த சிங்கத்தைப் பார்த்து விட்டது மான். கண்டதும் ஓடி விடும் என்று எண்ணிய சிங்கத்துக்கு ஏமாற்றம். தயங்கியபடி நின்றது.எந்த சலனமும் காட்டவில்லை மான்; அமைதியாக நெருங்கி வந்து, 'சிங்க ராஜவே... நீங்க பசியுடன் இருப்பதாக தெரிகிறது; என்னை தாராளமாகச் சாப்பிடலாம். தயாராக இருக்கிறேன்...' என்று பணிவுடன் நின்றது.இந்த பேச்சு, சிங்கத்திற்கு வியப்பை ஏற்படுத்தியது. 'பார்த்த மாத்திரத்திலேயே, எந்த விலங்கையும், துரத்தி சென்று அடித்துச் சாப்பிடுவேன். ஆனால், இந்த மானின் பேச்சு இரக்கத்தை அல்லவா ஏற்படுத்துகிறது! இதை கொல்லும் எண்ணமே ஏற்படவில்லையே... இது ஏன்' என, குழப்பத்துடன் நோக்கியது சிங்கம்.'ஏன் தயங்கி நிற்கிறீங்க... நீங்க இந்த காட்டிற்கு ராஜா! பசியுடன் இருக்கலாமா... அது காட்டிற்கே அவமானமாயிற்றே! அதனால், என்னை அடித்து சாப்பிடுங்க...' என்றது மான்.'என்னைக் கண்டவுடன், உயிரைக் காப்பாற்ற விலங்குகள் எல்லாம் பாய்ந்து ஓடி தப்ப முயலும்; நீ மட்டும் தைரியத்துடன் முன் வந்து, பணிவுடன் நடந்து கொள்கிறாய். உன் தைரியமும், பணிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்போது, என் பசி பறந்து போய் விட்டது...' என்று குகைக்கு திரும்பியது சிங்கம்.துணிந்து நின்ற மான், துள்ளி மகிழ்ந்து ஓடியது.மொட்டுக்களே... அன்பான வார்த்தை, பலம் நிறைந்த சிங்கத்தையே மாற்றி விட்டது பார்த்தீர்களா... அன்பை கடைபிடித்தால் எதிரியையும் காலடியில் விழ வைக்கலாம்.