உள்ளூர் செய்திகள்

மாஜிக் மந்த்ரா! (2)

சென்றவாரம்: கான்வென்ட பள்ளி என்று நினைத்து மந்த்ராவை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். இனி-கான்வென்ட் பள்ளியில் சேர்க்க, மந்த்ராவின் அருமை தாத்தா கேசவன் குட்டி, மந்த்ராவுடன் சென்றார். தாத்தா பலே மந்திரக்காரர். கூடு விட்டுக் கூடு பாய்வது என்பார்களே ... அது போல உருமாறும் வல்லமை பெற்றவர் மந்த்ராவின் தாத்தா. ரயிலை விட்டு இறங்கியதும், பேத்தி மந்த்ராவிடம் கூறினார்.''மந்த்ரா குட்டி! நீ மற்ற பெண்களைப் போல அல்ல... பிரபல மாந்திரீகக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அதனால் ஆகாயத்திலே பறந்து போய் ஸ்கூல் வாசல்லே இறங்கணும் புரிஞ்சுதா?''''அதெப்படி தாத்தா முடியும்?''''மத்தவங்களால முடியாது. உன்னால முடியும். ஏன்னா, நீ மாந்திரீகர் கேசவன்குட்டியின் பேத்தி! கண்ணை மூடிக்கொள்!'' என்றார்.மந்த்ரா கண்ணை மூடிக் கொண்டாள். தாத்தா ஏதோ மந்திரங்களை ஜெபித்தார். அவள் தோளில் கனமான ஏதோ ஒன்று உட்காருவதை உணர்ந்தாள். ஆனால், அவள் கண்களைத் திறந்து பார்க்கவில்லை. தாத்தா சொல்லாமல் அவள் கண்களைத் திறக்க மாட்டாள்! அடுத்த வினாடி காற்று, 'விஷ்' என்று சீட்டி அடித்தது. மந்த்ரா ஆகாயத்தில் பறப்பதை உணர்ந்தாள். சில வினாடிகளில் தரையில் கால் பதித்து நிற்பதை உணர்ந்தாள்.''மந்த்ரா குட்டி கண்களைத் திற!'' என்று தாத்தாவின் குரல் அவள் தோள் மீதிருந்து கேட்டது. மந்த்ரா கண்களை திறந்து பார்த்த போது, அவள் தோளில் ஒரு கருப்புப் பூனை.அந்தப் பூனை அவளோடு பேசவும் செய்தது.''ஏன் இப்படிப் பார்க்கறே? உன் தாத்தா தான் நான். எப்போதும் உன்னுடனேயே உனக்குப் பாதுகாப்பாக இருக்க, பூனையாக மாறி விட்டேன். பூனையினால் தான் எங்கும் ஏற முடியும். ஓசையின்றி எங்கும் நுழைய முடியும். நான் பேசுவது உனக்கு மட்டுமே புரியும்; கேட்கும். பிறர் கண்களுக்கு நான் வெறும் கருப்புப் பூனை. உனக்கு ஏதாவது இக்கட்டான நிலை ஏற்படுமானால், என்னை நினைத்து கொள். நான் எங்கிருந்தாலும் உன் உதவிக்கு வருவேன். ஆகவே, நீ கவலைப் படாமல் கான்வென்டில் படி. நான் சொல்லிக் கொடுத்திருக்கும் மந்திரங்களையும் மறக்காமல் அவசியமேற்படும் போது பயன்படுத்து,'' என்றார்.மந்த்ராவுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி... ''தாத்தான்னா தாத்தா தான்!'' என்று கருப்புப் பூனையை கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்.''உங்களைப் பிரிந்து வந்து இங்கு படிக்கணுமேன்னு வருத்தமா இருந்தது தாத்தா. என்னோடவே இருங்கன்னு எப்படிச் சொல்றது. நானோ இங்க ஹாஸ்டல்லே தங்கப்போறேன். ரொம்ப சங்கடப்பட்டுப் போனேன். நல்ல வேளை நீங்க நல்ல ஐடியா பண்ணிட் டீங்க!'' என்று பூனையின் வெல்வெட் உடலை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தாள்.''என் பேத்தியோட மனசு எனக்குத் தெரியாதா? சரி, நாம மகாராஜா பெண்கள் கான்வென்ட் பள்ளியின் வாசலில்தானே நிற்கிறோம்?'' என்று கேட்டது பூனை. ''அப்படித்தான் நினைக்கிறேன். அந்த போர்டில் உள்ளதை படிக்கத் தெரியலை எனக்கு!'' என்றாள் மந்த்ரா.''நான் என் மூக்குக் கண்ணாடியைக் கொண்டு வர மறந்துட்டேன். பரவாயில்லை... இந்தக் கட்டடமாத்தான் இருக்கும். உள்ளே நுழைவோம் வா!''''கேட் சாத்தியிருக்கு தாத்தா!''''மாஜிக் மந்த்ரா, மூடிய கேட்டை பார்த்துத் தயங்கலாமா? தாத்தாவிடம் கற்றுக்கொண்ட மாயாஜால வித்தைகள் இருக்கும் போது தயங்கி நிற்கலாமா? தங்கு தடையின்றி வா உள்ளே...!'' என்று கூறிய பூனை குபீரென்று பெரிய இரும்பு கேட்டின் மீது தாவிக் குதித்து உள்ளே போயிற்று.சாதாரணப் பள்ளிக்கூடமாக இருந்தால், அத்தனை பெரிய கேட் தேவை இல்லை, அதை மூடி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், இது சீர்திருத்தப் பள்ளியாயிற்றே... ஆகவேதான், இவ்வளவு பெரிய இரும்பு கேட்டும் பந்தோபஸ்தும்! மாணவிகள் தப்பிச் செல்ல முடியாதபடி கேட் எப்போதும் மூடியே இருக்கும்!தாத்தா உள்ளே போனதும், மந்த்ரா யோசித்தாள். ''கேட் வழியாகப் போவானேன்? சுவரின் வழியாக ஊடுருவிச் சென்றால் போயிற்று. அப்படிச் செல்லக் கூடிய மந்திரத்தை தாத்தா சொல்லிக் கொடுத்திருக்கிறாரே!'' என்று எண்ணியவள், அந்த மந்திரத்தைக் கண்களை மூடிக்கொண்டு கூறினாள். கண்களை திறக்காமலேயே காம்பவுண்ட் சுவரை நோக்கி நடந்தாள். புராணக் கதைகளில் வருவது போல சுவர் விலகி வழிவிடும் அல்லது தான் வெண்ணையில் நுழையும் கத்தி போல சுவரில் நுழைந்து மறுபக்கம் போய் விடுவோம் என்று நினைத்தாள், கத்துக்குட்டி மந்திரவாதியான மந்த்ரா. ஆனால், நடந்தது என்ன தெரியுமா?'மடார்' என்று சுவரில் போய் மோதிக் கொண்டாள். மூக்கு ஏகமாக வலித்தது. கண்களை திறந்தாள். சுவர் சுவராகத்தான் இருந்தது. வெண்ணையாகவில்லை. இவளும் வெளியே தான் நின்று கொண்டிருந்தாள். மந்த்ராவின் மந்திரம் பலிக்கவில்லை. கத்துக்குட்டிதானே... இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறதே!'சே! மந்திரம் பலிக்கவில்லை. சுவர் என் மந்திரத்திற்கு கட்டுப் பட்டு வழி விடவில்லை!' என்று அலுத்துக் கொண்டாள். தாத்தாவும் உள்ள போய் விட்டார். போகாதிருந்தால் கூட அவரிடம் அடிக்கடி உதவிக்கு ஓடக்கூடாது. நான் மாஜிக் மந்த்ராவாக லாயக்கில்லை என்று தீர்மானித்து எனக்கு எதுவுமே கற்றுக் தர மாட்டார். முடிந்தவரை எதையும் நானே சமாளிக்க வேண்டும். கேட்டின் மீது ஏறி மறுபக்கம் போனால் போயிற்று,' என்ற முடிவோடு செயல் படலானாள். பெரிய கேட்டின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, அவற்றில் கால்பதித்து உச்சிக்கு ஏறி உள்ளே இறங்கினாள்.நல்லவேளை மந்த்ரா கேட் மீது ஏறி உள்ளே குதிப்பதை யாரும் பார்க்க வில்லை.'தாத்தா எங்கே போனார்?' என்று யோசித்தபடியே நடைபாதையில் நடக்கலானாள். பாதையின் இரண்டு பக்கங்களிலும் மெத்தென்ற புல்வெளி. அதையொட்டி மரங்கள் அடர்ந்த சோலை, பள்ளிக்கூட கட்டடங்கள், அந்தக் சோலையைத் தாண்டி அப்பால் கம்பீரமாக நின்றது. அமைதியான சூழ்நிலை அரண்மனைப் பூங்காவனம் போலிருந்த அதை வியப்போடு பார்த்தப்படி நடந்து கொண்டிருந்தாள் மந்த்ரா. எல்லாமே அவளுக்குப் புதுமையாக இருந்தன. அதே சமயம், அவளையே ஒரு புதுமையாகப் பார்த்தப்படி அவள் வயதுடைய நான்கு பெண்கள் அந்த பாதையில் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர் சீர்திருத்தப்பள்ளி மாணவிகள். தவறு, பொல்லாத சிறுமிகள், வீட்டுக்கு அடங்காத முரட்டுப் பெண்கள், திருட்டுக் குணம் படைத்தவர்கள், சண்டைக் காரிகள் இப்படிப்பட்ட பெண் குழந்தைகளை சீர்திருத்தி, அவர்களை நல்லவர்களாக்கும் பள்ளிக் கூடமாயிற்றே அது. மந்த்ராவை நோக்கி வந்து கொண்டிருந்த நான்கு பெண்களில் ஒருவள் பெயர் மங்காத்தா. அங்குள்ள பெண்களில் மகா முரடு. அவள் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும். அவளை எதிர்த்தால், அவ்வளவுதான்! மேலே பாய்ந்து அவர்களைப் புரட்டி எடுத்து விடுவாள். பெரிய சண்டைக்காரியான மங்காத்தாவை மாணவிகள் பகைத்துக் கொள்ளப் பயப்படுவர். நல்ல வாட்ட சாட்டமாக இருப்பாள் வஸ்தாது போல.''புதுப் பொண்ணு போலிருக்கே?'' என்றாள் மங்காத்தாவின் பின்னாலிருந்த ஒரு மாணவி.''பேந்தப் பேந்த விழித்தப்படி வர்றதைப் பார்த்தாலே தெரியலியா? அவள் தலையில் குல்லாவைப் பார். கோமாளியைப் போல!'' என்று களுக்கென்று சிரித்தாள் மற்றொரு பெண்.மந்த்ரா நிஜமாகவே தலையில் குல்லாய் அணிந்திருந்தாள் மிட்டாய் பொட்டலம் போல. அவளுக்கு நகரத்து நாகரிகமெல்லாம் தெரியாது.''எவ்வளவு கர்வமா நடந்து வரா?'' என்று முணு முணுத்தாள் மங்காத்தா.''என் அருகில் வந்ததும் எனக்கு வணக்கம் சொல்றாளா பார்ப்போம். இல்லே, நான் யார் என்பதை அவளுக்குப் புரிய வைக்கணும்!'' என்று கூறியபடி மந்த்ராவை எதிர் நின்று காத்திருந்தாள்.மந்த்ரா அவர்கள் அருகில் வந்தாள். தன்னை முறைத்துப் பார்க்கும் அவர்களைப் பார்த்து முறுவலித்தாள். பிறகு ஒதுங்கித் தன் வழி நடந்தாள்.''என்ன திமிர் பார்த்தியா அவளுக்கு? நம்மை லட்சியமே பண்ணாம போறாளே!'' என்று கடுப்பேற்றினாள் ஒரு பெண்.மங்காத்தாவின் முகம் சிவந்தது. அடுத்த வினாடி, மந்த்ராவின் தொப்பி ஆகாயத்தில் பறந்தது.''என் தொப்பி...!'' என்று திடுக்கிட்டுத் திரும்பினாள் மந்த்ரா. அவள் மாஜிக் வேலைகள் செய்யும்போது அந்தத் தொப்பியை அணிய வேண்டும் என்று தாத்தா கூறி இருந்தார். ஆகவே, மந்த்ரா அதை எப்போதும் அணிந்திருப்பது வழக்கம். மற்றவர்களுக்குக் கோமாளித் தொப்பி போல இருந்தாலும், மந்த்ராவிற்கு அந்தத் தொப்பியை ரொம்பப் பிடிக்கும். அது இப்போது மங்காத்தாவினால் தட்டிவிடப்பட்டு மேலே பறந்து கொண்டிருந்தது. மங்காத்தாவும், அவள் கூட்டாளிகளும் சிரிப்பதைப் பார்த்தாள் மந்த்ரா. அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. உடனே, அவள் தாத்தா கூறியதும் நினைவுக்கு வந்தது.'நீ பெரிய மந்திரவாதியாக வேண்டுமானால் உனக்குக் கோபமே வரக்கூடாது. ஆத்திரமே படக்கூடாது!' தாத்தாவின் வார்த்தை எதையும் அவள் மீறுவதில்லை. கோபத்தையும், ஆத்திரத்தையும் உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு சில மந்திரங்களைக் கூறினாள்.-தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !