மாஜிக் மந்த்ரா! (27)
சென்றவாரம்: மகாராஜா பள்ளியின் ஆண்டுவிழா தொடங்கியது. நாடகத்தின் முதல் காட்சியில் மூவரும் நடித்து முடித்தனர். இனி -அடுத்த காட்சிக்கு எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்த போது மங்காத்தாவும், வடிவும் அரங்கின் பின்பக்க வழியே மெல்ல நழுவினர். அதையொட்டித் தான் கேட் கலெக்ஷன் வசூலிக்கும் அறையும், அலுவலகமும். மங்காத்தா எதிர்பார்த்தபடியே டிக்கெட் கவுண்டருக்கு அருகே பணப்பெட்டி. அவர்களுடைய அதிர்ஷ்டம் கலெக்ஷனை கவனித்தவர் அங்கு இல்லை. நாடகம் ஆரம்பமாகி விட்டதால், டீ குடிக்கவோ, பாத்ரூமுக்கோ போயிருந்தார் பணப்பெட்டியை பாதுகாப்பின்றி விட்டு விட்டு.''ஏய் வடிவு! நம்ம வேலை சுளுவாப் போச்சு. அடுத்து இரண்டொரு காட்சிகளுக்கு நாம் தேவைப்பட மாட்டோம். அதோ பார்... வசூலான தொகை. நல்ல வாய்ப்பு. இதை நழுவ விடக்கூடாது...ம்...'' என்று பரபரத்தாள் மங்காத்தா.அதே வேளையில், மந்த்ராவும் பரபரப் போடு மங்காவையும், வடிவையும் தேடிக் கொண்டிருந்தாள் கையில் கொப்பரையுடன். அடுத்த காட்சியில் மூன்று சூனியக்காரிகளும் மேடையில் தோன்ற வேண்டும்.'எங்கே போச்சுங்க இந்த ரெண்டும்...' என்று சுற்றி வரும்போது கையில் பணப் பெட்டியுடன் வந்த மங்காத்தா, மந்த்ரா மீது மோதிக் கொண்டாள். அரங்கினுள் வெளிச்சம் குறைவாயிற்றே. மங்காவின் செயலைக் கண்ட மந்த்ரா திடுக்கிட்டுப் போனாள்.''மங்கா...இது நாடக வசூல்... நீ இதை...'' குழறினாள் மந்த்ரா.மங்காத்தா வெறியோடு மந்த்ராவின் குரல்வளையை அழுத்தினாள்.''கூச்சல் போடாதே!'' என்று மிரட்டியவள் பணப்பெட்டியை மந்த்ராவின் கையிலிருந்த அட்டையினாலான மந்திரக் கொப்பரைக்குள் வைத்துக் கொண்டே கூறினாள்.''பணப்பெட்டி காணவில்லை என்பதை அறிந்து தேடும்போது அது இந்தக் கொப்பரைக்குள் இருப்பது யாருக்கும் தெரியாது... நீ மூச்சு விட்டே தொலைச்சுடுவேன்... ம்... போ மேடைக்கு!'' என்று உத்தரவிட்டாள் மந்த்ராவுக்கு.திகைத்து திக்கு முக்காடிப் போன மந்த்ராவுக்கு பேச நாக்குப் புரளவில்லை.'பணப் பெட்டியை திருடிக் கொண்டு ஓடப் பார்க்கின்றனர் இரு வரும். நான் எப்படி இவர்களைத் தடுத்து நிறுத்துவது? என்ன செய்யலாம்?' என்று யோசிக்கலானாள்.''ம்... போ மேடைக்கு... பேச வேண்டிய வசனத்தை தடுமாற்றமின்றிப் பேசு... பிறர் சந்தேகிக்காதபடி...'' என்று கண்டிப்போடு கிசுகிசுத்தாள் மங்காத்தா. நேரமாகி விட்டது. அடுத்த காட்சி அவர்கள் மூவரும் மேடையில் தோன்ற வேண்டும். திரை விழுந்து எழுந்தது.கொப்பரையின் முன்னே மூன்று சூனியக்காரிகளும் தோன்றினர். சபையோர் மூச்சடக்கிக் கொண்டு உன்னிப்பாகப் பார்த்தனர். மந்திரக் கிழவிகள் கொப்பரையிலிருந்து வவ்வால்களையும், தவளைகளையும் வரவழைக்க வேண்டும். புகையும் ஜ்வாலைகளுக்கும் இடையே மந்த்ரா வசனம் பேசினாள். அடுத்த விநாடி வவ்வால்கள் கொப்பரையிலிருந்து சிறகடித்துப் பறந்து வந்தன. தவளைகள் குபீர் குபீர் என்று தாவிக் குதித்தன.'ஆகா எவ்வளவு தத்ரூபமாக இருக்கு!' என்று வியப்பொலி எழுந்தது அரங்கிலிருந்து. நிஜமான வவ்வால்களும், தவளைகளும் வெளிப்பட்டால் தத்ரூபமாகத்தானே இருக்கும்! மந்த்ராவின் வசனத்தை தனக்கு இடும் உத்தரவாக நினைத்து குட்டிச்சாத்தான் நிஜமான வவ்வால்களையும், தவளைகளையும் தோன்றும்படி செய்து விட்டது. நிலைமையை உணர்ந்த மந்த்ரா தவித்துப் போய் விட்டாள்.'ஐயையோ... நான் குட்டிச் சாத்தானிடம் இது நாடக வசனம்... நிஜமல்ல... நீ ஏதும் செய்யாதே' என்று எச்சரிக்காதது தப்பாப் போச்சே!' என்று சங்கடப்பட்டவள் மனதுக்குள் தாத்தாவை உதவிக்கு அழைத்தாள்.பார்வையாளரிடையே உட்கார்ந்திருந்த கருப்புப் பூனை மேடையில் ஏதோ குழப்பம் என்பதைப் புரிந்து கொண்டது. மந்த்ராவின் மானசீக அழைப்பும் தாத்தாவைத் தொடவே, சட்டென்று மந்திரம் போட எல்லாம் பழைய நிலைக்கு வந்தன.கொப்பரைக்குள் இருந்த பணப்பெட்டி அதன் உரிய இடத்துக்குப் போயிற்று. நிஜமான வவ்வால்களும், தவளைகளும் மறைந்து காகித வவ்வால், தவளைகளாக மாறின. மங்காத்தா, வடிவு இருவருக்கும் தாங்கள் திட்டமிட்டது செயல்பட்டது எதுவுமே நினைவில்லை. நாடகத்துக்கு ஏகப் பாராட்டு. அதுவும் சூனியக்காரிகளாக நடித்த இவர்களை பேச்சாளர்கள் புகழ்ந்து தள்ளினர்.ஹெட்மிஸ், மந்த்ராவிடம், ''நிஜமான சூனியக்காரி போலவே வசனம் பேசினாயே!'' என்று தட்டிக் கொடுத்தார். மந்த்ரா தன் தாத்தாவுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தாள் நிலைமையை நல்ல விதமாக சமாளித்ததற்காக.ஒருவாரம் சென்ற பின்-மந்த்ராவின் அம்மாவும், அப்பாவும், பாட்டியும் வந்திருந்தனர் மகாராஜா பெண்கள் பள்ளிக் கூடத்துக்கு. தாத்தா கேசவன்குட்டி தன் கருப்புப் பூனை வேஷத்திலிருந்து மாறி, கேசவன் குட்டியாக அவர்களோடு உட்கார்ந்திருந்தார்! என்ன காரணம், எதற்காக மந்த்ராவின் குடும்பத்தினர் எல்லாரும் வந்திருக்கின்றனர் என்று யோசிக்கிறீர்களா? மகாராஜா பெண்கள் சீர்திருத்தப் பள்ளியில் பெற்றோர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி இருந்தனர் 'பேரண்ட்ஸ் டே' கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும்படி. மங்காத்தாவின் அப்பா மாடசாமியும் வந்திருந்தார். மந்த்ராவுக்கு தன் பெற்றோரையும், பாட்டியையும், பூனையாக இல்லாத தாத்தாவையும் ஒன்றாகப் பார்த்ததில் மகிழ்ச்சியான மகிழ்ச்சி! அந்தப் பள்ளியின் மாணவிகளைப் பார்த்த பத்மினி பாட்டிக்கு அதிர்ச்சியாக இருந்தது.''நான் படித்தபோது இருந்த பள்ளிக் கூடமாத் தெரியலியே இது!'' என்றாள் பத்மினி பாட்டி.''பள்ளிக்கூடம் அதுதான். ஆனால், சூழ்நிலை மாறிப் போச்சு. நீ படிச்சு எத்தனை வருடமாச்சு? நாற்பது வருஷத்துக்கு மேலே இருக்குமே. அப்புறம் விவரமாச் சொல்றேன்!'' என்றார் தாத்தா கேசவன்குட்டி.இங்கும், அங்கும் நோட்டமிட்டபடி, குவிந்த உள்ளங்கைக்குள் ஒளித்துக் கொண்டிருந்த பீடியை, அவசர அவசரமாக இழுத்து, புகையை பிறர் பார்த்து விடாதிருக்க வெளியிடுவதில் கவனம் செலுத்தி, திருட்டு விழி விழித்துக் கொண்டிருந்த தன் அப்பா மாடசாமியிடம் வந்தாள் மங்காத்தா.''என்னப்பா இது, இங்கே வந்துமா பீடி குடிக்கணும்?'' என்று முகங்கடுத்தாள். தன் அப்பா மற்றவர்களோடு ஒட்டாமல், ஒட்ட முடியாமல் வித்தியாசமாக இருப்பதில் அவளுக்கு மனக்குறைதான்.சட்டென்று பீடியைக் கீழே போட்டு குதிகாலினால் அதைத் தேய்த்துக் கொண்டே, ''மங்காப் பொண்ணு கோவிக்காதேம்மா. பழக்க தோஷம்... அத்தை விடு. நீ இன்னிக்கு விளையாட்டுப் போட்டியிலே எல்லா பரிசையும் தட்டிக்கினு வரணும். வந்திருக்கிறவங்க எல்லாம் யாருடா இந்தக் கில்லாடி பொண்ணு? இம்மாம் சாமர்த்தியமா ஜெயிச்சுட்டு வருதுன்னு பிரமிக்கணும். என் கையைக் குலுக்க ஓடி வரணும்... என்னா சொல்றே?'' என்று குஷி ஏற்றினார் தன் பெண்ணுக்கு.''கவலைப்படாதீங்கப்பா... நீங்க சொல்லிக் கொடுத்த 'கமால்' வேலையெல்லாம் நான் மறக்கல்லே. குறுக்கு வழியிலே தடாலடியடித்து எல்லா விளையாட்டிலும் முதலாவதா வரேன் பாருங்க... விசில் கொடுத்துட்டாங்க, நான் வரேன்,'' என்று தன் அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டு மைதானத்தை நோக்கி வேக நடை போட்டாள் மங்காத்தா.மற்றோர் இடத்தில் மந்த்ரா தன் பெற்றோர், தாத்தா பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டிருந்தாள். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறச் செல்வதற்காக.''பாட்டி... அம்மா... நீங்க ஐஸ்கிரீம் சாப்பிடறீங்களா வரவழைத்து தரேன். ஜில்லுனு ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டே நான் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருவதைப் பாருங்க!'' என்று தன் மாஜிக்கினால் ஐஸ் வரவழைக்க குட்டிச்சாத்தானைக் கூப்பிட்டாள்.''நீ மாஜிக் செய்து ஐஸ்கிரீம் வரவழைக்க வேண்டாம்!'' என்று மந்த்ரா அம்மா தடுப்பதற்குள்... மந்த்ரா மந்திரத்தைக் கூறி மாஜிக்கை முடித்து விட்டாள். அவள் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லாருடைய கைகளிலும் ஐஸ் கிரீம் வந்து விழுந்தது. கப் இல்லை, கோன் இல்லை. கட்டியாக வெண்ணையை உருட்டி வைத்தது போல வெறும் ஐஸ் கிரீம்! உருகி வழிய ஆரம்பித்தது. அப்போதுதான் மந்த்ராவுக்கு தன் தவறு புரிந்தது.''ஓ! கப் ஐஸோ... கோன் ஐஸோ கொண்டு வான்னு சொல்ல மறந்துட்டேன்!'' என்றாள்.''எனக்கு தெரியுமே... நீ இப்படித்தான் அரைகுறை மாஜிக் செய்வேன்னு!'' என்று கடுத்தாள் மந்த்ராவின் அம்மா. அதற்குள் போட்டிகள் ஆரம்பமாவதற்கான 'விசில்' சத்தம் கேட்கவே, மந்த்ரா, ''சாரி...!'' சொல்லி விட்டு பந்தய மைதானத்துக்கு ஓடினாள்.கேசவன் குட்டி தன் பேத்தியின் மாஜிக்கை சரி செய்ய கண் சிமிட்டினார். அடுத்த நிமிடம் அவர்கள் வெறும் கையில் உருகிக் கொண்டிருந்த ஐஸ் கிரீம் பேப்பர் கப்பினுள் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்தது. மர ஸ்பூனை தலையில் செருகிக் கொண்டு.பத்மினி பாட்டி தன் கணவரை அர்த்த புஷ்டியோடு பார்த்து முறுவலித்தாள்.முதல் போட்டி ஓட்டப் பந்தயம். மந்த்ரா, மங்காத்தா உட்பட பத்து மாணவிகள் மைதானத்தில் மண்டியிட்டு ஓடுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். தன் அருகில் உள்ள மந்த்ராவை, மங்காத்தா ஓரக் கண்ணால் பார்த்தாள்.''ஓட்டத்திலே என்னை இந்த மந்த்ரா மிஞ்சினாலும் மிஞ்சிடலாம்... அதனால ஏதாவது செய்து இவளை தோற்கடிக்கணும்...'' என்று தீர்மானித்தாள்.விசில் ஊதப்பட்டது.- மாஜிக் தொடரும்.