மாய மோதிரம் (17) - இருகூர் இளவரசன்
இதுவரை: முகுந்தனிடம் உள்ள சக்தி என்ன என்பதை கண்டுபிடிக்க முயன்றது ராஜமாணிக்கம் குரூப். இனி-ராஜமாணிக்கம் முகுந்தனை பற்றிச் சொன்னது உண்மைதான். அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதிலும் அதை அவன் விரலில் அணிந்திருக்கிறான். உற்று நோக்கியதில் ஒருவித ஒளிவட்டம் தெரிந்தது. அதுவும் சுவாமிஜி அணிந்திருந்த ஒரு வித்தியாசமான கண்ணாடியால்தான் அந்த ஒளியைக் காண முடிந்தது. இரவு வெகுநேரம் கழித்துதான் முகுந்தன் வீடு வந்து சேர்ந்தான். முகுந்தனின் நிலை என்ன ஆனதோ? அந்த பைவ் ஸ்டார் ஓட்டலில் அங்கு வசமாக மாட்டிக்கொண்டிருப்பான் என்று பிளாட் பையன்கள், சுசீந்திரனும் மற்றவர்களும் அங்கு விளையாடுவது போல் காத்துக் கொண்டிருந்தனர். முகுந்தன் கேட் காம்பவுண்டுக்குள் வந்ததும், ஆச்சரியப்பட்டனர்.சுசீந்திரன் பக்கத்தில் வந்தான்.''முகுந்தா நீ கொடுத்த, ட்ரீட் பிரமாதம். எப்போதும் இந்த ட்ரீட்டை மறக்கவே முடியாது,'' என்றான் சுசீந்திரன்.முகுந்தனுக்கு இதைக் கேட்க எரிச்சலாக இருந்தது.''என்ன இருந்தாலும் உங்க பணக்கார புத்தியைக் காட்டிட்டீங்க! கூட்டிட்டுப் போயி மாட்ட விட்டிட்டு வந்துட்டீங்க... ஏதோ இந்தக் காம்பவுண்டுப் பசங்களாச்சேன்னு நான் சும்மாவிடறேன்,'' என்றான் முகுந்தன்.''என்னடா செய்வே... சாதாரண வாட்ச்மேன் பையன் நீ... உனக்கு பைவ் ஸ்டார் ஓட்டல் சாப்பாடு கேக்குதா!''''நானா கேட்டேன். நீங்கதானே என்னை அழைச்சிட்டுப் போனீங்க!''''ஆமாடா அழைச்சிட்டுப் போனோம், என்னமோ நீ தான் பெரிய ஆள் மாதிரி இங்க பேசிக்கறாங்க! நீ என்னை விடப் பெரிய ஆளா?''''நான் சின்ன ஆள்தான்!''''சாதாரண அரசாங்க ஸ்கூல்ல படிக்கிறவன் நீ... என்கிட்ட எதிர்த்துப் பேசுறியா? இப்ப நீ என்கிட்டப் பேசினதுக்கு சாரி சொல்லுடா,'' என்று முகுந்தனின் சட்டையைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளினான் சுசீந்திரன்.கீழே விழுந்தான் முகுந்தன்.இதைக் கண்ட முகுந்தனின் தந்தை ஓடிவந்து தடுத்தார்.''எதுக்கப்பா என் பிள்ளையை அடிக்கறீங்க?''''உன் பையனை ஒழுங்கா பேசச் சொல்லு. கூலிக்காரப் பையனுக்கு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லு,'' என்றான்.''என் பையன் யார் வம்புக்கும் போகமாட்டானே தம்பி,'' என்றான்.''என்னடா... சாரி கேக்கறியா இல்லையா...''''எதுக்கப்பா சாரி கேக்கணும், உன்கிட்ட முகுந்தன் தப்பா நடந்துக்கிட்டானா?''''இந்தக் காம்பவுண்டுப் பசங்கங்கறதால எங்களைச் சும்மா விடறானாம், இல்லைன்னா அடிச்சிடுவானா? ரொம்ப வால் ஆட்டினா குடும்பத்தோட வெளியே துரத்திடுவோம் தெரியும் இல்ல... எங்கப்பா எவ்வளவு பெரிய ஆளுன்னு உன் பையன்கிட்டச் சொல்லி வை,'' என்றான் சுசீந்திரன்.''சரிதானப்பா... என் மகன் தப்பு செய்திருந்தா அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்!''''நீங்க எதுக்குப்பா மன்னிப்புக் கேக்கணும்?'' முகுந்தன் மறுபடியும் கேட்டான்.''டேய் என்ன திமிரா?'' எனக் கூறி கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் ஓங்கி அடித்தான். முகுந்தனின் தந்தை அதை தடுத்ததால், அந்த அடி முகுந்தனின் தந்தையின் கால் மீது விழுந்தது.ஏற்கனவே கால் மூட்டுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் கந்தசாமி. பேட்டால் அடிபட்டதும் வலியால் துடித்தார்.''பாத்தேயில்ல, ஒரு அடியில உங்கப்பன் சுருண்டுட்டான்,'' என்றான் சுசீந்திரன்.ஆத்திரம் பொங்கிய முகுந்தன் தன் தந்தை அவதிப்படுவதைக் காணமுடியாமல் சுசீந்திர னின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை. ஏதோ மின்சாரம் தாக்கியது போல் இருந்தது சுசீந்திரனுக்கு, அவ்வளவுதான் பத்தடி தள்ளிப் போய் விழுந்தான்.சுசீந்திரனின் நண்பர்கள் வியப்போடு பார்த்தனர்.''வாடா... பாக்கலாம் ஒரு கை,'' என்று முகுந்தன் அழைத்த போது சுசீந்திரனுக்கு அவன் பேசுவது எதுவும் கேக்கவில்லை. காதுக்குள் ஒருவித 'சொய்' என்ற சப்தம் மட்டுமே கேட்டது.''என்னடா ஆச்சு?'' நண்பர்கள் கேட்டனர்!''காது கேக்கலைடா... எனக்குக் காது கேக்கலை,'' என்று கத்தினான் சுசீந்திரன்.அதற்குள் பிளாட்டிலிருந்து ஆட்கள் வரத் தொடங்கினர். சுசீந்திரனின் பெற்றோரும் வந்தனர்.''என்னாச்சு? சசீந்திரன் ஏன் இப்படி நிக்கறான்?'' அவனது தந்தை கேட்டார்.அங்கு நடந்த சம்பவத்தை சுசீந்திரனின் நண்பர்கள் விளக்கமாகச் சொன்னார்கள்.இதை இப்படியே விட்டால் மற்ற பிள்ளைகளையும் முகுந்தன் அடிப்பான், அதனால் இதற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் சொன்னார். முகுந்தனின் தந்தை கந்தசாமி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடினார். முகுந்தனின் சித்தியும் மன்னிப்புக் கேட்டுப் பார்த்தாள்.சுசீந்திரனின் காது பாதிக்கப்பட்டது போல் ஒரு பெரிய தண்டனையை முகுந்தனுக்கு வழங்க வேண்டும், அதுவும் அந்த தண்டனையை கந்தசாமியே வழங்க வேண்டும், என்றனர்.அது என்ன தண்டனை?''எந்தக் கையால் என் பிள்ளையை உன் மகன் அடித்தானோ, அந்தக் கையில் பழுக்க நெருப்பில் காய்ச்சிய கம்பி யால் சூடுபோட வேண்டும்,'' என்றார் சுசீந்திரனின் தந்தை!''உடனே இந்த தண்டனைக்கு ஏற்பாடு செய் இல்லையேல் இந்த தண்டனையை நாங்கள் செய்ய வேண்டியது இருக்கும்! நாங்கள் தண்டனை கொடுப்பதாக இருந்தால், இரண்டு கைகளிலும் சூடு போடுவோம்,'' என்றார்.கந்தசாமிக்கு வேறுவழியில்லாமல் சம்ம தித்தான்.அதற்குள் ஒருவன் ஒரு இரும்புக் கம்பியைக் கொண்டு வந்தான்.வள்ளியம்மாளிடம் கொடுத்து அடுப்பில் வைக்கச் சொன்னார்கள்.வள்ளியம்மாள் மறுத்தாள்.சுசீந்திரனின் தந்தை ஒரு இடத்தில் தீயை மூட்டினார். கம்பியை தீயில் வைத்தார்.அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சுசீந்திரன் காதைப் பொத்தியபடி நின்றிருந்தான்.தீயில் கம்பி பழுத்துக் கொண்டிருந்தது.''என்ன கந்தசாமி தண்டனையை நீயே கொடுக்கப் போறியா அல்லது நானே கொடுக்கட்டுமா?'' மறுபடியும் கேட்டார் சுசீந்திரனின் தந்தை.வேறு வழியில்லாமல் கந்தசாமி அழுவதவாறே தீயில் காய்ச்சிய கம்பியை எடுத்தார்.முகுந்தன் கையை நீட்டி நின்றான்.''இதுபோதாது, முகுந்தனின் கையை இருக்கமாக ஒருவர் பிடித்துக் கொள்ள வேண்டும், சூடு வைக்கும் கந்தசாமியின் கையை ஒருவர் அழுத்த வேண்டும்,'' என்றார்.அதேபோல் முகுந்தனின் கையை ஒரு ஆள் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.கந்தசாமியின் சூட்டுக் கம்பியை முகுந்தனின் கையில் வைத்து அழுத்தினான் இன்னொருவன்.'ஆ' வென்று முகுந்தன் வலியால் துடித்தான்.அக்கணமே முகுந்தனின் கை கொப்புளங்களாகி சிவந்து பெரிய புண்ணாக ஆனது. சூட்டு வலி தாங்கமால் அழுது துடித்தான். முகுந்தனின் அழுகையைக் காணமுடியாமல் கந்தசாமியும், வள்ளியம்மாளும் அழுதனர்.''இன்னியோட இந்தக் கூலிக்காரப் பையன்கிட்ட யாரும் பேசவோ, விளையாடவோ கூடாது,''என்றார் சுசீந்திரனின் தந்தை!கந்தசாமியும், வள்ளியம்மாளுமள் முகுந்தனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர்.சுசீந்திரனை டாக்டரிடம் காட்டி வர அவனை அழைத்துக் கொண்டு மருந்துவமனை சென்றனர்.''அவசரப்பட்டு எதுக்காக அந்தப் பையனை அடிச்சே?'' கந்தசாமி கேட்டார்.''உங்க முட்டியில அடிச்சானே அது நியாயமா? இன்னிக்கு அவன் என்ன செஞ்சான் தெரியுமா? என்னைக் கார்ல அழைச்சிட்டுப் போயி பைவ் ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட வெச்சு பில் கொடுக்காம என்னை மாட்டிவிட்டிட்டு வந்துட்டான்,'' அழுதேவாறே முகுந்தன் சொன்னான்.''பாவப்பட்டவர்களிடம் விளையாடுவது இந்தப் பணக்காரப் பிள்ளைக்கு வேடிக்கையாகி விட்டது. இனிமேல் அவர்களிடம் நீ பேசவும் வேண்டாம்; விளையாடவும் வேண்டாம். இப்படியே இருந்து கொள்,'' என அறிவுரை கூறி சூடுபட்ட கைக்கு மருந்து போட்டுக் கொடுத்தார் கந்தசாமி.வள்ளியம்மாள் முகுந்தனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டாள்.சுசீந்திரனை பரிசோதித்த டாக்டர் ரொம்பவும் ஆச்சரியப்பட்டார்.''என்னத்தான் கன்னத்தில் அறைந்தாலும் காதுக்குள் இருக்கும் ஜவ்வு இப்படி சேதம் அடையாது. அடித்தவன் கையில் பலமான ஆயுதம் இருந்திருக்க வேண்டும், ஆயுதத்தால் தாக்கினால் மட்டுமே இதுபோன்று பாதிக்கப் படும்,''என்றார்.''முகுந்தனின் கையில் ஏதேனும் ஆயுதம் இருந்தா?'' சுசீந்திரனின் தந்தை கேட்டார்.சுசீந்திரனுக்கு காதுகேக்காமல் இருந்ததால் டாக்டர் பேசுவதும், தந்தை பேசுவதும் என்னவென்றே தெரியவில்லை.''ஒருவேளை ஆபரேசன் செய்து பார்க்கலாம் காது கேட்டாலும் கேட்கும், இல்லையென்றால் இல்லை! முயற்சித்துப் பார்க்கலாம்,'' என்றார் டாக்டர்.ஒரு சாதாரண அறையில் காது இப்படி ஆகாதுதான். ஏற்கனவே முகுந்தன் நம்பமுடியாத சாதனையைச் செய்தவன் என்பதால், அவன் மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாதபடி ஏதேனும் ஆயுதம் வைத்திருக்கலாம் என சந்தேகித்தார் சுசீந்திரனின் தந்தை.''டாக்டர் அந்தப் பையன் எதைக் கொண்டு தாக்கியிருக்கிறான் என்பதை நான் கண்டுபிடித்து வருகிறேன். என் பையனுக்கு நல்லபடியாக ட்ரீட்மெண்ட் கொடுத்துக் காப்பாற்றுங்கள்,'' என்று கூறி சுசீந்திரனை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டார் சுசீந்திரனின் தந்தை!அதே நேரம் படுக்கையில் படுத்தியிருந்த முகுந்தன் மாயமோதிரத்தை தன் வாயருகே கொண்டு வந்து... மாயமோதிரமே, எனக்கு தீக்காயத்தின் வலி இல்லாமல் செய்வாக,'' என் கூறினான். அக்கணமே அவன் உடலில் வலி நின்றது. அதன் பிறகு யோசித்தான். தனக்கு அதீத சக்தி இருப்பதாக பலரும் நினைத்துக் கேள்வி கேக்க ஆரம்பித்து விட்டால், ஒருவேளை தன்னை அழைத்து யாரேனும் டெஸ்ட் செய்தால் தான் மாட்டிக் கொள்வதோ, மாய மோதிரத்தைப் அபகரித்தும் சென்று விடுவர் என எண்ணி மோதிரத்தைக் கழட்டி, ஒரு டப்பாவில் போட்டு அதை சுவற்றின் மீது யாருக்கும் தெரியாமல் வைத்தான்.-தொடரும்.