மாய விழிகள்! (4)
முன்கதை: பள்ளி மாணவி சிறுமி தியா, கிராமத்தில் பாட்டி வீட்டுக்கு வந்தாள். அங்கு மர்மக் கிணற்றில் நீர் குடித்து, பார்வையில் புதிய சக்தி பெற்றாள். இனி - விடுதியில் தங்கியிருக்கும் மாணவியருக்கு ஒரு சலுகை இருந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, இரண்டு மணி நேரம் வெளியில் சென்று வர அனுமதி உண்டு.முதலாவது ஞாயிற்றுக்கிழமை அது!''அக்கா... நீ ஏதாவது வாங்க வேண்டியது இருக்கிறதா...''''இல்லை தியா; ஏன் கேட்குற...''''கடைவீதியை தவிர்த்து ஏதாவது பூங்காவுக்கு போகலாமா...''''நல்ல யோசனை...''இருவரும் அந்த பூங்காவிற்கு வந்த போது, கலவையான வயதில் நிறைய பேர் இருந்தனர்.சிலர் அமர்ந்து கதை பேசினர். சிலர் நடைபயிற்சி செய்தபடி இருந்தனர்.''வா தியா... ரெண்டு ரவுண்டு நடக்கலாம்...''நடக்க ஆரம்பித்தனர்.அப்போது தான் அதை கவனித்தாள் தியா.தனியாக இருந்த இளம் பெண்ணிடம் வம்பு செய்து கொண்டிருந்தான் ஒருவன்.''எத்தனை நாள் பின்னாலே வந்து கொண்டிருக்கிறேன்...''என்றான் அவன்.''எனக்கு பிடிக்கல போ...''முகம் சுளித்தாள் அந்த பெண். விருப்பத்தை மீறி தொந்தரவு செய்வதை கண்டு கோபம் வந்தது தியாவுக்கு.''அக்கா... நீ நடந்துகிட்டே இரு... நான் வந்துடறேன்...''கலைச்செல்வியை விட்டு விலகி, அந்த இளம் பெண்ணிடம் வந்தாள் தியா.''தொந்தரவு செய்கிறானா...''அந்த பெண் திரும்பி பார்த்தாள்.தியா வந்து பேசுவதைக் கண்ட அவன் சற்று தயங்கி நின்றான்.அவன் தயங்குவதை பார்த்து, தியாவுக்கு பதில் அளித்தாள்.'ம்...' தலையசைத்தாள்.''உங்களுக்கு உதவி செய்கிறேன்; பயப்படாதீங்க...'' அவள் நிமிர்ந்து பார்த்தாள்.''பெஞ்ச் லைட் போஸ்ட் குறுக்க வர்ற மாதிரி நடந்து போங்க... அவன் பின்னால் வந்தாலும் திரும்பி பார்க்காதீங்க...''அந்த பெண் தயக்கமாய் தியாவை பார்த்தாள்.''போங்க... நான் அவனை சமாளிக்கிறேன்...''உறுதியான குரலில் தியா சொன்னதை கேட்டு தைரியமடைந்தவள் நடக்க ஆரம்பித்தாள்.அவனை திரும்பி பார்த்தாள் தியா. இளம் பெண் தனியாக நடப்பதை கண்டதும் மீண்டும் பின் தொடர ஆரம்பித்தான்.'பொருட்களை மறைய வைக்கும் சக்தி தன்னிடம் இருக்கிறதா... உண்மையிலேயே அப்படி நிகழ்கிறதா'சோதித்து பார்க்க முடிவு செய்தாள் தியா.அவனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையில் விளக்கு துாண் இருந்தது.அந்த துாணை உற்றுப் பார்த்தாள் தியா.பார்வையில், எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை.மீண்டும் உற்றுப் பார்த்தாள்.கண்ணுக்கு முன் புகை மூட்டம் தெரியவில்லை; துாண் பார்வைக்கு மங்கலாகவில்லை. திகைத்தாள் தியா.'அப்படியானால் உற்றுப் பார்த்தால் பொருள் மறைகிறது என்பது பிரமை தானா... ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வோ' என நினைத்து குழம்பினாள்.அந்த பெண்ணை பின் தொடர்ந்தவன் நெருங்கினான்.''நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா... என் கிட்ட பேசுவதில் என்ன குறைஞ்சு போகுது...'''போடா... பிடிக்கலைன்னா தொலைய வேண்டியது தான...' அவள் தனக்குள் முனங்கினாள்.தியாவின் கோபம் உச்சம் அடைந்தது. காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி அவன் மீது வீசி எறிய முற்பட்டாள். அதே வினாடி கண்களுக்கு முன் புகை மூட்டம் தோன்றியது. அடுத்த வினாடி அந்த துாண் மங்கலாக தெரிந்தது.அவன் கண்களுக்கு துாண் தெரியவில்லை போலும்.துாணில் மடேர் என்று முட்டி, 'ஜெர்க்'ஆனான்.கண்ணைச் சிமிட்டினாள் தியா.இப்போது துாண் தெளிவாக தெரிந்தது. அவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.துாணைப் பார்த்து திகைத்து பின் வாங்கினான். மீண்டும் துாணை உற்றுப் பார்த்தாள் தியா. மீண்டும் புகை மூட்டம்... மீண்டும் மங்கலான தோற்றம்.கண் முன்னிருந்த துாண் மீண்டும் திடீரென மறைந்ததைக் கண்டு, இன்னும் பின் வாங்கி மிரண்டான்.கண் சிமிட்டியபடி, துாணை மீண்டும் தோன்ற வைத்தாள் தியா.பதறிப் போனவன் விலகி வேகமாக நடந்தான். அவன் நடந்த வழியில், பெஞ்சை உற்றுப் பார்த்து மறைய வைத்தாள் தியா. அதில் முட்டி விழுந்தான்.கண் சிமிட்டினாள் தியா. விழுந்து நிமிர்ந்தவன் திடீரென அங்கு பெஞ்ச் இருப்பதை கண்டு, இன்னும் மிரண்டு ஓடினான். இளம் பெண் இப்போது திரும்பி பார்த்தாள்.அவன் ஓடுவதையும், தியாவின் கையில் செருப்பு இருப்பதையும் கவனித்தவள், வேகமாக தியாவை நெருங்கி, நன்றி தெரிவித்தாள்.''உன்னை மாதிரி செருப்பை கழற்றி அவனை அடிக்க எனக்கு தைரியம் இல்லாமல் போயிட்டது. இனி யாராவது தொல்லை செய்தால் எதிர்த்து நிற்பேன்...''அந்த பெண், தியாவை கட்டிக் கொண்டாள்.மறுநாள் -இரவு உணவை முடித்து, தியாவும், கலைச்செல்வியும் திரும்பிய போது, படிக்கும் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள் ஒருத்தி.''அக்கா... அது அனு தானே...''''ஆமா...''''அவ ஏன் தனியா படிக்கிறாள்...''''வார்டன் தண்டனை கொடுத்திருப்பாங்க...''''தண்டனையா... அதெல்லாம் இங்க உண்டா...''''ஏன் இல்லாமல்... உண்டு. போக போக தெரிந்து கொள்வாய்...''''எதுக்கு தண்டனை...''''ஏதாவது வார தேர்வு வைத்திருப்பர். இவள் படிக்காமல் இருந்திருப்பாள். அதனால், படித்து முடித்து தான் சாப்பிட வேண்டும் என்று தண்டனை கொடுத்திருப்பார் வார்டன்...''''சாப்பிட்ட பின் கூட படிக்கலாமே...''''படிக்கலாம் தான்... ஆனால், உரிய நேரத்தில் படிக்காததற்கு தான் தண்டனை...''''முகத்தைப் பார்த்தாலே அவள் பசியில் இருப்பது போல தெரிகிறது. ஏதாவது, தின்பண்டம் கொடுக்கலாமா...''''ஏன் உனக்கும் தண்டனை வேண்டுமா தியா... வார்டனுக்கு தெரிந்தால் வாங்கி கட்டுவாய்... வா போகலாம்...''கலைச்செல்வி நகர, தியாவின் மனசு குறுகுறுத்தது.பொருட்களை மறைய வைக்கும் சக்தி நினைவுக்கு வர, அனுவுக்கு உதவ முடிவு செய்தாள்.அறைக்குச் சென்று, ஒரு புத்தகத்தையும், கேக்கையும் எடுத்து வந்தாள் தியா.''அனு... இத வெச்சுக்கோ...''என்னவோ என்று வாங்கியவள், கிண்ணத்தில் கேக் இருப்பதை கண்டு பதறினாள்.- தொடரும்...ஜே.டி.ஆர்.