மல்லன் மாறப்பன்! (11)
சென்றவாரம்: மாறப்பனின் காயங்களை துடைத்தார் முதியவர். பறங்கியரிடம் சிக்கிய காரணத்தை கேட்ட முதியவரிடம் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டான் மாறப்பன். முதியவர் நடந்ததை பற்றி கூறினார். இனி-''உன் குழப்பம் நியாயமானதுதான். வெங்கண்ணா இக்கொடிய செயலை நேரடி யாகச் செய்யவில்லை. அந்த அளவுக்கு அவன் திறமைசாலியும் இல்லை. அவன் நண்பன் திருமலையின் காரியம் அது. வஞ்சகமும், சூழ்ச்சியும் மிக்க அவன் திறமைசாலியும் கூட.''திருமலையின் தயவை நாடினான் வெங்கண்ணா. பெரும் பொருளுக்கு எதையும் செய்யத் தயங்காத திருமலையை என் பொக்கிஷத்தைத் திறந்து விட்டுச் சம்மதிக்கச் செய்து விட்டான். திருமலை யும் போர்த்துக்கீசியருக்கு பண்டகசாலை அமைப்பதில் சலுகைகள் காட்டி என்னையும் அவர்களிடம் கைதியாக ஒப்படைத்து விட்டான்,'' என்றார் முதியவர் அச்சுதர்.தொடர்ந்து பேசியதால், அவருக்கு மூச்சு வாங்கியது.ஒரு இந்திய மன்னர், பறங்கியரின் கப்பலில் கைதியாகச் செத்துக் கொண்டிருப் பதைப் பார்க்க மாறப்பனின் ரத்தம் கொதித்தது. ஆனால், அவனும் அதே போல ஒரு கைதி தானே? என்ன செய்ய முடியும்? அவனும் திருமலையினால் வஞ்சிக்கப்பட்டவன்தானே!''உதயகிரி மன்னர் போர்க்களத்தில் உங்களைத் தேடவில்லையா பெரியவரே?'' என்று கேட்டான் மாறப்பன்.''தோல்வியைத் தழுவி ஓட்டமெடுத்த உதயகிரி மன்னருக்கு, என் நினைவு எப்படியப்பா இருக்கும்? அப்படியே பின்னால் அவர் தனக்கு உதவிய சிற்றரசர்களின் நிலை பற்றிக் கேட்டிருந்தாலும், நான் போர்க்களத்தில் இறந்து விட்டதாகவும், உடல் கிடைக்கவில்லை என்றும் பொய்ச் செய்தியைப் பரப்பி, நம்பும் படி செய்திருப்பான் திருமலை,'' என்றார் அச்சுதர்.''பாவி... கொலைக்கும் அஞ்சாத கொடியவன் அந்தத் திருமலை. இந்தக் கப்பலி லிருந்து என்னால் தப்ப முடியுமானால், அந்தத் திருமலையைப் பழிவாங்கியே தீருவேன்,'' மாறப்பனின் தசைகள் புடைத்து முறுக்கேறின.''தம்பி... என் உள் மனதில் ஏதோ ஒரு குரல் சொல்கிறது. நீ இந்தப் பறங்கியரின் பிடியிலிருந்து தப்பிச் செல்வாய் என்று. உன்னைக் கண்ட தினத்திலிருந்து ஏனோ உன் மீது எனக்கு ஒரு இனம் தெரியாத பாசமும் ஏற்பட்டுள்ளது. நான் அதிக நாள் உயிர் வாழ மாட்டேன். என் செல்ல மகளை நீ சந்திக்க வேண்டும்,'' என்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டார் முதியவர். ஆயாசத்தினால் அவர் கரங்கள் நடுங்கின.''அப்படியெல்லாம் சொல்லாதீர் அரசே... நீங்கள் வாழப் போகிறீர். மறுபடி அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யப் போகிறீர். அருமை மகள் லஷ்மியின் சுக வாழ்வைக் காணப் போகிறீர்!'' என்றான் மாறப்பன்.''யாருக்குக்குதான் வாழ ஆசை இருக்காது மாறப்பா? ஆனால், என் உடல்நிலை பற்றி எனக்குத் தெரியும். பறங்கியர்களிடம் நான்பட்டபாட்டில் என் உடல் நொறுங்கிப் போய் விட்டது. வெங்கண்ணா துரோகி என்பதை அறிந்த போதே என் உள்ளத்துப் பலமும் போய்விட்டது. இனி நான் வாழ விரும்பவில்லை...'' என்று கூறி, மேலே பேச முடியாமல் மவுனமானார் அச்சுதர்.மாறப்பன் பரிவோடு அவர் மார்பைத் தடவிக் கொடுத்தான்.சற்று ஆசுவாசத்துக்குப் பின், ''போர்க்களம் கிளம்பு முன், என் மகள் லஷ்மியிடம் விடைபெறும் போது இதோ இதில் பாதியை அவளிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று கூறித் தன் இடைத்துணியில் சுருட்டி முடிச்சுப் போட்டு வைத்திருந்ததை அவிழ்த்து மாறப்பனிடம் கொடுத்தார். மாறப்பன் பளபளக்கும் அதை வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போது கூறினார்.''அப்போதே ஏதோ ஒரு குரல் என் மனதில், 'நீ மறுபடி நாடு திரும்பப் போவதில்லை!' என்று கூறியது. ஆகவே, என் மகளிடம் இதன் மறு பாதியை, யார் உன்னிடம் கொண்டு வருகிறார் களோ, அவர்களையே நான் அனுப்பியதாக எண்ணி நம்பு. வேறு யாருடைய எந்தப் பேச்சையும் நம்பாதே!' என்று கூறி வந்திருக் கிறேன். ஆகவே, இந்த மறுபாதியை நீ பத்திர மாகக் காப்பாற்று. என் மகளைச் சந்திக்க ஆண்டவன் உனக்கு அருள் புரியட்டும்!''''நான் உங்களுடனேயே உங்கள் மகளைச் சந்திப்பேன். கவலைப்படாதீர்கள்,'' என்று ஆறுதல் கூறினான் மாறப்பன்.''ஆறுதல் மொழிகள் என் ஆயுளைக் கட்டிப் பிடித்து நிறுத்தாது இளைஞனே! எதார்த்தத்தை ஏற்றுக்கொள். நீ எப்படியும் இந்தப் பறங்கியரிட மிருந்து தப்ப வேண்டும். உன்னிடம் நான் கொடுத்துள்ளதை என் மகளிடம் காட்டு. என்னைப் பார்ப்பது போல உன்னை வரவேற்பாள். என் அன்பு மகளை உன் மனைவியாக்கிக் கொள். இருவரும் சந்தோஷமாக வாழ நான் இப்போதே ஆசீர்வதிக் கிறேன்!'' என்றவர் மூர்ச்சை யானார்.தவித்துப் போன மாறப்பன் அவர் மூர்ச்சையைத் தெளி விக்க முயற்சித்தான். ஆனால், பலவீனப்பட்ட அந்த உடலால் எந்த சிகிச்சையையும் ஏற்க முடியவில்லை. உயிர் மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.சில நாளில் அதுவும் அவரைக் கை விட்டது. நினைவு திரும்பாமலேயே அச்சுதர் மரணமடைந்தார். தந்தையைப் போலத் தன்னிடம் அன்பு காட்டிய அந்த முதியவரின் மறைவை மாறப்பனால் தாங்க முடிய வில்லை. கடைசியாக அவர் அளித்த அந்த நினைவுச் சின்னத்தின் பாதியைப் பத்திரப்படுத்திக் கொண்டான். பிரமை பிடித்தவன் போலக் கப்பலில் கைதிகளோடு உலவி வந்தான்.ஒவ்வொரு நாள் முடிவிலும், ''இந்தப் பறங்கியரின் பிடியி லிருந்து எப்படியும் தப்புவேன். அச்சுதரின் அருமை மகளைக் காப்பாற்றுவேன்!'' என்ற உறுதியை வளர்த்துக் கொண்டான்.அந்த நாளும் வந்தது. மாறப்பனைக் கைதியாகக் கொண்ட போர்த்துக்கீசியப் கப்பல், சரக்குகளை ஏற்ற சூரத் துறைமுகத்துக்கு வந்தது. கைதிகள் கரைக்குக் கொண்டு வரப்பட்டனர்.போர்த்துக்கீசியக் கப்பலில் வேலை செய்ய நிறைய அடிமைகளைக் கொண்டு வருவர். அந்த அடிமைகள் பல நாட்டைச் சேர்ந்தவர் களாக இருப்பர். கை, கால்களைச் சங்கிலியால் பிணைத்துக் கப்பலில் கீழ்த்தளத்தில், இந்த அடிமைகளைக் கடல் பயணத்தின் போது அடைத்து வைத்திருப்பர். வியாபாரம் செய்யும் துறைமுகங்களுக்குக் கப்பல் நங்கூரமிட்டதும், அடிமைக் கைதிகளைத் துறைமுகத்துக்குக் கொண்டு வந்து, அவர்களுடைய விலங்குகளை அகற்றி, போர்வீரர்களின் கண்காணிப்பில் அவர்களிடம் வேலை வாங்குவர். சரக்கு களைக் கப்பலுக்கு இறக்குதல், புதிய சரக்கு களைக் கப்பலிலிருந்து ஏற்றுதல் ஆகிய பணி களை இந்த அடிமைகளிடமிருந்து பெறுவது வழக்கம்.''கறுப்பர்களின் கை விலங்குகளை அகற்றி, அவர்களிடம் கடினமான வேலை வாங்குங் கள்!'' என்று ஆணை பிறப்பித்தான் கப்பல் தலைவன். கைதிகள் ஒவ்வொருவராகத் துறை முகத்தின் ஆயுத சாலைக்குக் கொண்டு வரப் பட்டனர். சங்கிலி பிணைத்த தங்கள் கைகளை அவர்கள் ஒரு பட்டறைக் கல்லில் வைக்க, ஒரு போர்த்துக்கீசியன் அந்தச் சங்கிலியைப் பெரிய வெட்டுளிச் சம்மட்டியால் துண்டாக்கிக் கைதி களுக்கு விடுதலை அளிக்கலானான். சங்கிலி அகற்றப்பட்ட கைதிகளைப் போர்த்துக்கீசிய வீரர்கள் பணி இடத்துக்குக் கொண்டு போயினர்.மடிறப்பனின் முறை வந்தது. சங்கிலி பிணைக்கப்பட்ட கையைப் பட்டறைக் கல்லில் வைத்துக் கொண்டு, சம்மட்டி விழுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான்.இந்தக் கயவர்களிடமிருந்து தப்புவதற்கு ஏற்ற தருணம் இதுதான். வேலை வாங்கிக் கொண்டு மறுபடி சங்கிலி பூட்டி கப்பல் அடித் தளத்தில் கொண்டு போய் அடைத்து விடுவர். ஆகவே, இதை நழுவ விடக்கூடாது என்று, சங்கிலி அறுபட்ட வினாடி சம்மட்டிக் காரனைத் தனது முஷ்டியினால் தாக்கினான். மாறப்பனின் முஷ்டி பலநாளாக உணவின்றிப் பசியோ டிருந்தது. அதோடு, மாறப்பனின் விடுதலை வேட்கையும் சேரவே, அவன் குத்து இடி யெனப் பறங்கியனின் தாடையில் இறங்கியது. இப்படியொரு திடீர்த் தாக்குதலைக் கறுப்பனிட மிருந்து எதிர்பாராத பறங்கிய மாலுமி, நிலை குலைந்து சம்மட்டியோடு சரிந்து உருண்டான்.காவலுக்கு இருந்த பறங்கிய மாலுமி இருவர் மாறப்பனை நோக்கி ஓடி வர, புயலெனத் திரும்பிய மாறப்பன், ''இந்தா என் வலதுகைக் குத்து உன் தொப்பைக்கு... இந்த இடதுகை முஷ்டி உன் தாடைக்கு!'' என்று கூறி அவ்விருவரையும் சுருண்டு புரண்டு விழச் செய்தவன், காலத்தை வீணாக்காமல் துறைமுகப் பகுதியின் அரண் சுவரை நோக்கி ஓடினான். இதற்குள் மாறப்பனின் செயல் காட்டுத் தீயெனப் பரவவே... கப்பல் தலைவன் மாறப்பனைப் பிடிக்கும்படி மாலுமிகளை விரட்டிக் கொண்டிருந்தான். தன் வழியில் குறுக்கிட்ட பறங்கியருக்குத் தன் முஷ்டியின் சுவையைக் காட்டி விட்டுக் குபீரென்று சரக்கு மூட்டைகளின் மீது தாவி ஏறி... அரண் சுவரின் உச்சியை அடைவதில் துரிதம் காட்டினான் மாறப்பன்.''முட்டாள்களா... இந்தியனிடம் குத்துப் பட்டு உருளுகிறீர்களே! வெட்கமாக இல்லை. உங்கள் துப்பாக்கி எங்கே? சுட்டுத் தள்ளுங்கள் அந்தக் கறுப்பனை!'' என்று கத்தினான் கேப்டன்.- தொடரும்.