மல்லன் மாறப்பன் (18)
சென்றவாரம்: அச்சுதராயர் கொடுத்த மோதிரத்தை லஷ்மி தேவியிடம் காட்டிய மாறப்பன், அரண்மனையிலிருந்து லஷ்மியை அழைத்து கொண்டு வெளியேறினான். வெங்கண்ணாவின் வீரர்கள் அவர்களை விரட்டி வந்தனர். மாறப்பனின் குதிரை ஆற்று வௌ்ளத்தில் இறங்கியது. இனி-ஆற்று வெள்ளம் மாறப்பனின் குதிரையைப் படாத பாடுபடுத்தியது.'என்னை வெல்ல உன்னால் முடியுமா?' என்று தன் வேகத்தைக் காட்டியது. வெள்ளத் தின் வேகத்தில் பல முறை தடுமாறித் தத்தளித்தது குதிரை.குதிரை தத்தளித்தாலும், காட்டாற்று வெள்ளத்தின் மூர்க்கத்தனத்தினால், அக்குதிரையை ஏதும் செய்ய முடியவில்லை. லஷ்மி தேவியையும், மாறப்பனையும் சுமந்தபடி, ஆற்று வெள்ளத்திலிருந்து கரையேறியது. இளவரசி குதிரையிலிருந்து இறங்கு வதற்கு உதவிய மாறப்பன், ''அரச குமாரி! நம்மை விட்டு அபாயம் விலகவில்லை. வெங்கண்ணாவின் வீரர்கள் பாலத்தின் வழியாக ஆற்றைக் கடந்து நம்மைத் துரத்திக் கொண்டு வருகின்றனர். நான் சென்று அந்த வேட்டை நாய்களை விரட்டி விட்டு வருகிறேன். அதுவரை இந்தப் தோப்பில் உள்ள மறைவிடத்தில் இளைப்பாறியபடி உடைகளையும் காயப்போடுங்கள்,'' என்று கூறி லஷ்மிதேவியை, விழுது விட்டுப் படர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் விழுதுத் திரைகளுக்கிடையே பத்திரப்படுத்தி விட்டுத் தன் குதிரையைத் தட்டிவிட்டான்.அதே வேகத்துடன் அவர்களும் குதிரை களில் பாய்ந்து வந்து கொண்டிருந்தனர். கையில் உருவிய வாளுடன் நான்கு வீரர்கள், மாறப்பனோ ஒருவன். தேடி வந்தவன் எதிர் பட்டதும், குதிரையின் லகானை இழுத்துப் பிடித்து நிறுத்தினர். குதிரைகள் முன்னங்கால் களை உயர்த்திக் கனைத்தபடி நங்கூர மிட்டன. இளவரசியோடு ஓடியவ னிடம் இப்போது இளவரசியை காணாது திகைத்தனர் வெங்கண்ணாவின் ஆட்கள். இளவரசியை மீட்பதுதான் அவர்கள் குறிக்கோள். மாறப்பனை வீழ்த்துவதில் அவர்களுக்கு அக்கறையில்லை.அவர்கள் தயக்கத்தைப் புரிந்து கொண்ட மாறப்பன், ''உயிர் மீது ஆசை இருக்குமானால், ஓடி விடுங்கள். இது சோழ நாட்டு வாள்! இதன் வீச்சில் மூச்சிழப்பீர்கள்!'' என்றபடி தன் வாளினால் காற்றோடு விளையாடிக் காட்டினான்.அவர்களும் வீரர்கள் தானே! கோழை களில்லையே! ஓடிப்போகவா இத்தனை தொலைவு விரட்டி வந்தனர். மாறப்பனின் சவாலை ஏற்று, வாளை சுழற்றினர். ஆனால், மாறப்பனின் வல்லமை அவர்களுக்கு இல்லை. மின்னல் போலச் சொடுக்கிய சோழ நாட்டு வீரனின் வாளுக்கு நல்ல விருந்து. நால்வரில் மூவர் படுகாயமுற்றுத் தரையில் விழுந்தனர். எஞ்சிய ஒருவனோ தன் வாளைக் கீழே போட்டு விட்டு மாறப்பனிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டுக் கெஞ்சினான்.''பிழைத்துப் போ!'' என்று ஓங்கிய தன் வாளை உறையில் போட்டான் மாறப்பன்.''பேராசைக்கார உன் எஜமானிடம் போய் செய்தி சொல்ல வேண்டுமல்லவா...? ஓடிப்போ! சந்திரகிரி சிங்காசனத்தை ஒழித்து வைக்கச் சொல் வெங்கண்ணாவிடம்... ம்... ஓடு!'' என்று விரட்டினான். உயிர் தப்பிய அந்த வீரன், உயிருக்கு மன்றாடியபடி கிடந்த, காயமுற்ற தன் தோழர்களைத் தூக்கிக் குதிரை மீது போட்டுக் கொண்டு, சந்திரகிரியை நோக்கிக் குதிரை களைச் செலுத்தலானான்.மாறப்பன், இளவரசி லஷ்மி தேவியின் இருப்பிடம் நாடிச் சென்றான்.வெற்றியோடு திரும்பிய மாறப்பனை மகிழ்ச்சியோடு வரவேற்றாள் இளவரசி. ஆனால், சிந்தனையினால் இருண்ட மாறப்பனின் முகத்தைக் கண்டு துணுக்குற்றாள். காரணம் புரியாமல் கலங்கினாள்.''ஐயா! வெங்கண்ணாவிடமிருந்து என்னைப் காப்பாற்றினீர்கள். என் அருமைத் தந்தையிடமிருந்து அடையாளத்தோடு வந்திருக்கிறீர்கள் ராம தூதனைப் போல. அனுமனைக் கண்ட அசோகவனத்துச் சீதை போலிருக்கிறேன் நான். ஆனால், உங்கள் முகத்தில் மகிழ்ச்சிப் பூச்சு இல்லையே... ஏன்?'' என்று கேட்டாள்.மாறப்பன் அவள் முகத்தைப் பார்க்காமல் கானகத்து மரங்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் மவுனமாக. லஷ்மிதேவி அவன் பேசுவதற்காக காத்திருந்தாள்.''இளவரசி! உங்கள் தந்தையின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானேன். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற உங்களை வெங்கண்ணாவிடமிருந்தும் மீட்டு விட்டேன்...'' என்றவன் தொடராமல் நிறுத்தினான்.அவனையே ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த லஷ்மி தேவி, ''சொல்லுங்கள்... தயக்கம் ஏன்?'' என்று தூண்டினாள்.''கையிலே வாள்... தோளிலே வலிமை. உள்ளத்திலே நேர்மை இருந்தாலும் நான் அரச குடும்பத்தவனல்லன் இளவரசி...'' என்ற மாறப்பனின் குரல் உடைந்திருந்தது. ''குதிரை மீது வந்து உங்களைச் சிறை மீட்டேன். ஆனாலும், நான் ராஜகுமாரனல்லன். சோழ வள நாட்டின் ஒரு சாதாரணக் குடிமகன். உங்கள் நாட்டவன் கூட இல்லை,'' இதற்கு மேல் மாறப்பனால் பேச முடியவில்லை. உணர்ச்சி வசப்பட்டு குரல் தடைப்பட்டது. இளவரசி அவன் நினைப்பைப் புரிந்து கொண்டாள்.''நீங்கள் அரச குலத்தவராக இல்லா திருப்பதையும், சாதாரணக் குடிமகனாக இருப்பதையும் நான் பெருமை யாகக் கருதுகிறேன். அரண்மனை வாழ்வும், அரசியல் சூழ்ச்சிகளும் எனக்கு வெறுத்து விட்டன. என் தந்தை அனுபவித்த துயரங்களை உங்களிடமிருந்து கேட்ட பிறகு நான் அரசகுமாரியாக இருக்கவே விரும்பவில்லை. இதற்காகவா நீங்கள் மனங்கலங்கினீர்கள்? என்னை இளவரசியாகப் பார்க்காதீர்கள். உங்கள் நாட்டு ஏழைப் பெண்ணாகப் பாருங்கள்!'' என்றாள், கண்களில் நீர் பளபளக்க.''நிஜமாகவா லஷ்மி?'' என்றான் மாறப்பன்.அவன் முகத்தில் மகிழ்ச்சி வரியிட்டது.''எனக்காக அரச போகத்தைத் துறக்கப் போகிறீர்களா?''''இப்படியே உடுத்தியுள்ள ஒற்றைப் புடவையுடன் உங்களுடன் வருகிறேன். நீங்கள் வாழும் குடிசையே இனி என் அரண்மனை! இந்த அரச குமாரியை இந்தச் சாதாரணக் குடிமகனார் ஏற்றுக் கொள்ளுவாரா?'' என்று தன் சுட்டு விரலை மாறப்பனின் நெஞ்சில் பதித்துக் கேட்டாள். நாணத்தால் அவள் முகம் சிவந்தது.லஷ்மியின் பேச்சினால் திருப்திப்பட்ட மாறப்பன், அவள் கைகளை பற்றிக் கொண்டு, ''லஷ்மி! நான் அதிர்ஷ்டக் காரன்!'' என்றான் குரல் தழுதழுக்க.பிறகு அவளிடம், ''லஷ்மி! மன்னர் கிருஷ்ணதேவராயர் தன்னை வந்து காணும்படி கூறியுள்ளார். திம்மராயன் என்று ஒரு நண்பன் விஜயநகர அரசில் பெரும் பதவியில் இருக்கிறான். ஆகவே, சந்திரகிரி யின் அரச குமாரிக்கு ஏற்ற ஆண்மகனாக என்னை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது,'' என்றான்.''இப்போதே நீங்கள் என் உள்ளத்தில் உயர்ந்துதான் இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் எப்போதும் இதே போலிருந்தாலே போதும்,'' என்றாள் லஷ்மிதேவி.மகிழ்ந்து போனான் மாறப்பன்.பிறகு இருவரும் மேற்கொண்டு எப்படிச் செயல்படுவது என்பதைத் திட்டமிடலாயினர்.''திம்மராயனையும், கிருஷ்ண தேவராயரையும் சந்திக்க, விஜயநகரம் செல்லும் போது, லஷ்மி தேவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாதே,'' என்று தயங்கினான் மாறப்பன்.''அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். குருகுல வாசத்தில் எனக்கு ஒரு தோழி கிடைத்திருக்கிறாள். நான் அவள் வீட்டில் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக் கிறேன். நீங்கள் மன்னர் கிருஷ்ண தேவராயரையும், உங்கள் நண்பரையும் சந்தித்து விட்டு விரைவில் திரும்பி வாருங்கள்!'' என்றாள் லஷ்மிதேவி.அவள் விருப்பப்படியே அவளை, அவள் தோழியின் வீட்டில் கொண்டு விட்டு விட்டு, அவளிடம் விடை பெற்று விஜய நகருக்குக் கிளம்பினான் மாறப்பன்.தொடரும்.