உள்ளூர் செய்திகள்

மல்லன் மாறப்பன்! (12)

சென்றவாரம்: நடந்த அனைத்தையும் கூறிய முதியவர், நீ இங்கிருந்து தப்பிச் செல்வாய் என்றும், என் மகளை உன் மனைவியாக்கிக் கொள் என்றும் கூறி மரணமடைந்தார். தன் கை சங்கிலி அறுபட்ட மாறப்பன் பறங்கிய மாலுமிகளை தாக்கினான். இனி-இயற்கையிலேயே பலசாலியும், வல்லவனுமான மாறப்பனிடம் விடுதலை வேட்கையும் சேரவே, அவன் உடலில் அசுர பலம் தோன்றியது. பறங்கியர் களின் துப்பாக்கிகள் வாய் திறக்குமுன், அவன் நெடுதுயர்ந்து நின்ற துறைமுக அரண் சுவரைத் தாண்டி அப்பால் குதித்து விட்டான். பறங்கியர் அரண் வாயில் வழியே மறுபக்கம் வருவதற்குள், அங்குள்ள பண்டக சாலைக்குள் புகுந்தான். அதை அடுத்திருந்த வளாகத்தில் விஜயநகர வேந்தர் கிருஷ்ண தேவராயருக்காக, அரபு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள் கட்டப் பட்டிருந்த லாயம் இருந்தது. சரசரவென்று அதனுள்ளே புகுந்த மாறப்பன், ஒரு கொழு கொழு குதிரை மீது தாவி ஏறி அமர்ந்து அதைத் தட்டி விட்டான்.தன் மீதமர்ந்து, தன்னை விரட்டுவதை ஏற்காத அந்த அரபு நாட்டு குதிரை, ஆத்திரத்துடன் வாயுவேகத்தில் கிளம்பியது. தன் மீதுள்ளவனைக் கீழே தள்ளும் நோக்கத்தில் வேகமாகப் பாய்ந்தது. மாறப்பனுக்கு வேண்டியதும் அதுதானே! அதிர்ஷ்டமும் அவன் பக்கமிருந்தது என்றுதான் கூற வேண்டும்.அவனைத் தேடி வந்த பறங்கிய வீரர்கள், 'அவன் குதிரை சவாரி செய்வதில் வல்லவன் என்று அறியாததால், பண்டக சாலையில் எங்காவது பதுங்கி இருப்பான்' என்று எண்ணித் தேடிக் கொண்டிருந்தனர்.'தட தட தட' என்று குதிரையின் குளம் படிச் சத்தம் கேட்டு, தங்கள் கவனத்தைத் திருப்பிய போது, மாறப்பனின் குதிரை வெகுதூரம் போய் விட்டது. தங்கள் கண் களில் மண்ணைத் தூவி விட்டுத் தப்பிய கறுப்பனின் செயலால் அவமானப்பட்டுப் போயினர்.கப்பல் காப்டனின் சுடுசொற்களைத் தாங்குவதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு, தொங்கிய தலையுடன் திரும்பினர்.மாறப்பனைக் கீழே தள்ளும் முயற்சி பலனில்லாமல் போகவே, குதிரை அவனுடைய அன்பான தடவலிலும், ஆதரவான பேச்சிலும் மயங்கி உற்சாகமாக ராஜபாட்டையில் ஓடிற்று.'இந்த ராஜபாட்டை விஜய நகருக்குத்தான் போகிறது என்று நினைக்கிறேன். பறங்கியர், குதிரையில் என்னைப் பிடிக்கத் தொடர்ந் தாலும் அவர்களிடம் அகப்படாமல் இந்த நெடுஞ்சாலையிலிருந்து குறுக்குப் பாதையைப் பிடித்துப் போக வேண்டும்' என்று முடிவு செய்து கொண்டான். ஆனால், வெகு நேரம் ஆகியும் பறங்கியர் யாரையும் காணவில்லை.'அவர்கள் என்னை கை கழுவி விட்டார் கள். தொடரவில்லை!' என்று நிம்மதிப் பட்டவன், மேற்கொண்டு எப்படிச் செயல் படுவது என்பதைத் திட்டமிடலானான்.'இந்தக் கந்தல் கைதி உடையைக் களைந்து வீசி விட்டுக் கண்ணியமான இந்திய உடையை எப்படியாவது பெற்று அணிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் என் பயணத்தைத் தடங்கலின்றித் தொடர முடியும்' என்ற முடிவோடு இருட்டும் வேளையில் ஓர் ஆற்றை அடைந்து, சுகமாகக் குளித்து உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டான்.பிறகு அடுத்திருந்த ஒரு கிராமத்துக்குப் போய், ஒரு வீட்டில் இரவு தங்க இடம் கேட்டான். அந்த வீட்டுக்காரர் நல்ல மனம் படைத்தவர். தன் மூட்டையை வழியில் திருடர்களிடம் பறி கொடுத்து விட்டதாக மாறப்பன் கூறியதும், அவனிடம் இரக்கம் கொண்டு, அவனுக்கு புதிய உடைகளை அளித்தார். காலையில் மாறப்பன், அந்தக் கண்ணியமான உடையில் அவருக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.'விஜயநகருக்குப் போனதும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களைப் பழிவாங்குவதுதான் தனது முதல் காரியமாக இருக்கும்' என்ற உறுதியோடு, விரைவில் விஜயநகரை அடைந்தான் மாறப்பன்.''பழிகாரன் அந்த பெர்னாண்டஸைத் தேடிப் பிடிக்க வேண்டும். போர்த்துக் கீசியரின் குடியிருப்புப் பகுதியில்தான் அவன் பங்களா இருக்கும்' என்று எண்ணிய மாறப்பன், வழிப் போக்கரிடம் பறங்கியரின் குடியிருப்புப் பகுதி எங்குள்ளது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டான். பெர்னாண்டஸ் முக்கியப் புள்ளியாதலால் அவன் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்வதில் மாறப்பனுக்கு சிரமம் இருக்கவில்லை. தவிரவும், அவன் விஜயநகருக்கு வந்தவேளை நல்ல வேளை.விஜயநகர மன்னருக் காகக் கொண்டு வரப் பட்டிருந்த அரபு நாட்டுக் குதிரைகளை வழங்கு வதற்காக, போர்த்துக்கீசியர் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பறங்கி யரின் வேண்டுகோளுக்கு இணங்கி, மன்னர் கிருஷ்ண தேவராயரும் அந்த வைபவத்திற்கு வருகை தருவதாக ஒப்புதல் அளித் திருந்தார். பறங்கியரின் நாகரிகம், நாட்டியம், விருந்துபசாரம் இவற்றை அறிந்து கொள்ளுவதும் ராயரின் நோக்கம். பறங்கி யரைக் கவுரவிப்பதாகவும் இருக்கும் என்று அவர் களுடைய கேளிக்கைகளில் கலந்து கொள்ளச் சம்மதித் திருந்தார்.போர்த்துகீசியரின் விருந்தளிப்பு வைபவத்தில் முக்கிய அம்சம் மாறுவேட மணிந்து ஆணும், பெண்ணும் நடனமாடு வது. முகமூடி அணிந்த பறங்கிய பிரபுக் களும், உயர் அதிகாரிகளும் மற்றும் பலரும் வருவர். அவர்களுடைய மனைவிமார்களும் முகமூடி அணிந்திருப்பர். கணவனுக்குத் தன் மனைவி எந்த முகமூடிக்குள் இருக்கிறாள் என்று தெரியாது. அதே போல, மனைவிக்கும் தன் கணவன் எந்த வேஷத்தில் வந்திருக் கிறான் என்று தெரியாது.இந்த விருந்து நடனத்தில் கலந்து கொள்ள பெர்னாண்டஸ் வேஷமணிந்து கொண்டு தயாராக இருந்தான். அப்போது அவன் படுக்கை அறை ஜன்னல் வழியே ஒரு உருவம் உள்ளே குதித்தது.மாறுவேட நடனப் போட்டிக்கு முகமூடி அணிந்து தன்னைச் சிங்காரித்துக் கொண்டிருந்த பெர்னாண்டஸ், ஜன்னல் வழியே வந்து குதித்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனான்.''யார்... யார் நீ? இந்த வழியாக...?'' என்று குழறினான்.''என்னை மறந்து விட்டாயா பெர்னாண்டஸ்...!'' என கேட்டப்படி இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்தான் மாறப்பன்.மாறப்பனை அங்கு, அந்த வேளையில் வித்தியாசமான உடையில் கண்ட அந்தப் பறங்கியனின் முகம் வெளுத்துப் போயிற்று. முகத்தில் வியர்வை துளிகள் முத்துக்களாகத் தோன்றி அவன் செய்து கொண்டிருந்த ஒப்பனையைக் கலைத்தன. மாறப்பனுக்குச் செய்த அநியாயங்களெல்லாம் மனத் திரையில் தோன்ற, நாக்கு உலர்ந்தது.''நீ... நீ... எப்படித் தப்பி வந்தாய்...?'' என்று தடுமாறினான்.''ஏன் பயமாக இருக்கிறதா பெர்னாண்டஸ்?'' என்று கேட்டபடி, நடுங்கிக் கொண்டு நிற்கும் அவனைச் சுற்றி வந்து நோட்டமிட்டான் மாறப்பன்.''நீசப் பிறவியே! என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பச் சூழ்ச்சி செய்தாய்... கப்பலிலே அடிமையாக்கி அனுப்பி வைத்தாய்... நான் உயிரோடு திரும்பி வரமாட்டேன் என்று மனப்பால் குடித்தாய் இல்லையா பெர்னாண்டஸ்?'' என்று அவன் முகத்துக்கு நேரே போனான் மாறப்பன்.''அது... அதையெல்லாம் மறந்துவிடு மாறப்பா. அது திருமலைக்காக, அப்படிச் செய்யும் கட்டாயத்திலிருந்தேன்... நானாகச் செய்யவில்லை...'' என்று கூறியபடி மெள்ளப் மெள்ளப் பின்னோக்கி நகர்ந்தான் பெர்னாண்டஸ்.''நீ... குற்றமற்றவன்... நிரபராதி என்று உனக்கு விடுதலை வாங்கித் தர முடியும் என்னால்... என்னை நம்பு...'' பேசிக் கொண்டே அவன் வலது கை மெள்ள மெள்ளப் பின்னால் போயிற்று. எதையோ துழாவிற்று நடுக்கத்துடன்.''சூழ்ச்சிக்காரப் பறங்கியே! இன்னமும் உன் வார்த்தையை நம்பவா சொல்கிறாய்? ம்... உயர்ந்த பதவியில் இருக்கிறாய் அல்லவா...? பதவியின் போர்வையில் என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா? சரி, நீ செய்த நீசத்தனமான சதிகளை விளக்கமாக எழுதிக் கையெழுத் திட்டுக் கொடு...'' என்றான் மாறப்பன். பின்னால் நகர்ந்து கொண்டே மேஜையின் இழுப்பறைக் கைப்பிடியைத் துழாவிக் கொண்டிருந்த பெர்னாண்டஸுக்கு மாறப்பனின் இந்தக் கட்டளை புதிய தெம்பைக் கொடுத்தது. இழுப்பறையில் உள்ள கைத்துப்பாக்கியை எடுத்துத் திடீரென்று மாறப்பனைச் சுட்டுக் கொல்வதே அவன் திட்டம். ஆனால், துழாவும் அவன் விரல்களுக்கு மேஜை இழுப்பறையின் கைப்பிடி தட்டுப்படவில்லை.திரும்பிச் செயல்பட முடியாமல் மாறப்பனின் முஷ்டியாகிய வலது கை, அவனது இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டிருப்பது அவனைக் கதிகலங்க வைத்தது.மாறப்பனின் குத்துக்கள் எப்படிப்பட்டவை என்பதை அறிந்தவனாயிற்றே. அதுவும் தவிர மாறப்பன் தன் ஈட்டிப் பார்வையை பெர்னாண்டஸை விட்டு அகற்றாமல் நிதான மாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். இப்போது ஒப்புதல் வாக்குமூலம் எழுதித் தரும்படி கூறவே, அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு காகிதமும், எழுதுகோலும் எடுப்பதற்காக மேஜை இழுப்பறையைத் திறக்கும் சாக்கில், ''இதோ... இதோ! இப்போதே நீ கேட்டபடி எழுதித்தருகிறேன்...'' என்று பரபரப்புடன் திரும்பி இழுப்பறையை இழுத்தவன், மின்னலெனத் திரும்பினான் மாறப்பனை நோக்கி. அவன் கையில் ஒரு சின்னத் துப்பாக்கி பளபளத்துக் கொண்டிருந்தது.''சுதேசிப் பதரே! என்னை மிரட்டவா பார்க்கிறாய்? இதோ சுருண்டு விழுந்து சாகப் போகிறாய். உன் உயிரைக் குடிக்கப் போகிறது இதிலிருந்து வெளிப்படும் குண்டு...'' என்றான்.- தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !