மல்லன் மாறப்பன்! (14)
சென்றவாரம்: பெர்னாண்டஸை தாக்கிவிட்டு, மாறுவேடமணிந்து மன்னருக்கு அளிக்கப்படும் விருந்துக்கு சென்றான் மாறப்பன். கிருஷ்ண தேவராயரின் விருப்பத்துக்காக நடைபெற்ற குத்துச் சண்டைக்கு தயாரான மாறப்பன், முகமூடியுடனேயே போட்டி நடக்கும் அரங்கிற்கு சென்றான். இனி-திருமலை பிலிப்பிடம், ''இரண்டாயிரம் பொற்காசுகளும் உனக்குத் தான் பிலிப்! இதோ எங்கள் நாட்டவன் ஒருவன் வருகிறான். அவனுக்கு உங்கள் குத்துச் சண்டையின் நெளிவு, சுளிவு தெரியாது. நீ சுலபமாக வெற்றி பெறுவாய்...!'' என்று கூறித் தன் மீசையை முறுக்கிக் காட்டினான்.அரங்கின் நடுவிலே வந்து நின்ற மாறப்பனைக் கண்ட நடுவர், கூட்டத்தினரை அமைதிப்படுத்திவிட்டுக் கூறினார்.''என் வலது பக்கம் முகமூடியணிந்த ஒரு இந்தியர் மகாராயரின் சார்பாகப் போட்டியிட முன் வந்துள்ளார். இடது பக்கம் முகமூடி அணிந்து நிற்பவர் எங்கள் மன்னரின் பிரதிநிதியாகப் போரிடப் போகிறவர். இருவரில் ஒருவர் வெற்றி பெறும் வரை குத்துச் சண்டை நிகழும்... மகாராயர் அவர்கள் கண்டு மகிழலாம்!'' என்று கூறி அரங்கிலிருந்து விலகிப் போய் நின்று கொண்டார்.பறங்கியன் இருகைகளையும் முஷ்டியாக்கிக் கொண்டு குதித்தபடி மாறப்பனை அழைத்தான். பரபரப்போ, பதற்றமோ காட்டாமல் நிதானமாக பிலிப்பை நோக்கி முன்னேறிய மாறப்பன், அந்தப் பறங்கியனை எடை போடலானான்.'இவன் உடல் இரும்பைப் போல உறுதியாக இருக்கிறது. மற்ற வெள்ளையர்களைப் போல ரொட்டி மாவு உடம்பல்ல இது. இவனை வீழ்த்துவதில் நான் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடில் நம் மன்னருக்குத் தலை குனிவு ஏற்படும்!'அந்தப் போர்த்துக்கீசிய வீரன் பலசாலி, திறமைசாலி மட்டுமல்ல, கேவலமான தந்திரசாலியும் கூட. இருவரும் கவனமாகக் குத்துக்களைப் பரிமாறிக் கொண்டு சுற்றி வரும் போது, எதிர்பாராதபடி மாறப்பனின் காலைத் தட்டிவிட்டான். இது குத்துச் சண்டை விதிகளுக்குப் புறம்பானது. ஊன்றி நிற்கும் கால் நிலைகுலையவே நிதானமிழந்து தடுமாறிய மாறப்பனின் தாடையிலே பறங்கியனின் இரும்பு முஷ்டி இடியென இறங்கிய அதே சமயம் மாறப்பனின் முகமூடி அறுந்து அகன்றது.அதே சமயத்தில் அரங்கின் அமைதியைக் கிழித்துக் கொண்டு திருமலையின் குரல் கிறீச்சிட்டது.''இது... இவன் அந்த நாடோடிப் பயல்... மாறப்பன்! கொலைக்காரன்... சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி!''திருமலையின் குற்றச் சாட்டைக் கேட்ட வீரர் கள் பலர் தங்கள் கத்திகளை உறையிலிருந்து வேகமாக உருவினர். கூடி இருந்த அத்தனை பேரின் பார்வையும் முகமூடி இன்றி நிற்கும் மாறப்பனின் மீது பதிந்திருந்தன. போர்த்துக் கீசிய ராணுவ அதிகாரி ஒருவர், '' என்ன சொல்கிறாய் திருமலை? இவன் கொலை காரனா? யாரைக் கொன்றான். எதற்காக?'' என்று கேட்டபடி உருவிய வாளுடன் மாறப்பனின் அருகே போனார்.''ஆமாம்... இவன் கொலைகாரன் தான். இவன் பெயர் மாறப்பன்!'' என்று அவசர அவசரமாக விவரிக்கலானான் திருமலை.''தமிழ் நாட்டைச் சேர்ந்தவன். உங்கள் வீரன் ஒருவனைக் கொலை செய்ததற்காகக் கைதியாகி கப்பலில் அடிமையாக அனுப்பப்பட்டான். அங்கிருந்து எப்படியோ தப்பியவன் இங்கு மாறுவேடத்தில் வந்திருக்கிறான். கவுரவமிக்கவர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் இடம் பெறத் தகுதியற்றவன் இவன்!'' என்றான் திருமலை.தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மன்னர் கிருஷ்ண தேவராயருக்குக் கரங்கூப்பி வணங்கிய மாறப்பன், ''மாட்சிமை தாங்கிய மன்னர் பிரானே! நான் நிரபராதி. தமிழ் நாட்டவன் தான். என் பெயர் மாறப்பன் தான். பொய்யர்களும், புரட்டுக்காரர்களுமான பெர்னாண்டஸ், திருமலை இவர்களால் அபாண்டமானக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையே இல்லாமல் கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் கப்பலில் என்னை அடிமையாக்கிக் கைகளில் விலங்கு பூட்டி அனுப்பினர். நீதியின் வழியில் ஆட்சி நடத்தும் நீங்கள் எனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்!'' என்றான் அமைதியாக.''தூக்கு மேடை காத்திருக்கும் உனக்கு நீதியா? மன்னரிடம் முறையிட உனக்கு ஏது தகுதி?'' என்று எம்பிக்குதித்தான் எமகாதகனான திருமலை.நடந்த அனைத்தையும் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணதேவராயர், 'திட்டமிட்டபடி போட்டி தொடரட்டும்!'' என்றார்.அவர் பார்வை இன்னும் மாறப்பன் மீதே இருந்தது.''இந்த இளைஞன் கூறுகிறான் தான் நிரபராதி என்று. திருமலையோ, அவனைக் கொலைகாரன் என்கிறான். உண்மையோ ஒளிந்து கொண்டிருக்கிறது. சண்டையின் முடிவில் அது வெளிப்படலாம்!'' என்றார் ராயர்.இது மாறப்பனுக்கு மகிழ்ச்சியளித்தது. குறுக்கு வழியில் நேர்மையற்ற முறையில் சண்டையிடும் அந்தப் பறங்கியன் பிலிப்பை அலறவைக்க வேண்டும் என்று ஆக்ரோஷ மாகச் சண்டையிடலானான். குற்றமுள்ள நெஞ்சுடைய பறங்கியனின் வேகம் மடிந்து விட்ட நிலையில், மாறப்பனின் சத்தியக் குத்துக்கள் ஒவ்வொன்றும் பறங்கியனை நிலை குலைய வைத்தன. மாறப்பனின் குத்துக்களைத் தாங்க முடியாமல் தரையில் விழுந்தவன், எழுந்திருக்க முடியாமல் அலறினான்.''போதும்... போதும் நிறுத்து... இனி உன் குத்துக்களை என்னால் தாங்க முடியாது...!'' என்று கதறினான்.''போதாது.... இது போதாது...!'' என்று கூறித் தன் முஷ்டியில் முறுக்கேற்றிக் கொண்ட மாறப்பன், ''நீ உண்மையைக் கூறும் வரை என் குத்துக்கள் நிற்காது. என் முஷ்டியின் தாகமும், வேகமும் தணியாது!'' என்றான்.மாறப்பனின் இரும்புக் கரம் மீண்டும் உயர்ந்த போது, பரிதாபமாக அலறினான் பிலிப்.''வேண்டாம்... உன் குத்துக்களை என் உடலில் இறக்காதே... நான் உண்மையைக் கூறி விடுகிறேன்... இந்த இந்திய இளைஞன் நிரபராதி. தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டுத் தான் பாத்ஷாகான் இறந்தான். இந்த இளைஞன் அவனைக் கொல்லவில்லை. பெர்னாண்டஸும், திருமலையும் திட்டமிட்டு இந்த இளைஞனைக் குற்றவாளியாக்கி விட்டார்கள்...'' என்று மூச்சு வாங்கப் பேசினான் அந்தப் பறங்கியன்.''போதும். இதற்கு மேல் நீ எதுவும் கூறவேண்டாம்...'' என்றார் கிருஷ்ண தேவராயர், அந்தப் பறங்கியனைப் பார்த்து, ''எங்கே திருமலை!'' என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்து நின்றது.ஆனால், திருமலை, அங்கு இல்லை. மாறப்பனின் குத்துக்களினால் நிலை குலைந்து தரையில் விழுந்த பறங்கியனிடமிருந்து மாறப்பன் விஷயத்தைத் தெரிந்து கொள்வதை அறிந்து கொண்ட திருமலை, அவசர அவசரமாகக் கூட்டத்திலிருந்து நழுவினான். சத்தியம் விழித்துக் கொண்டு விட்டது. இனி, தன் தகிடு தத்தங்கள் அதன் முன்னால் தவிடு பொடி யாகும் என்பதை உணர்ந்துக் கொண்டான். மகாராயரின் கோபமும், தண்டனையும் எப்படிப்பட்டவை என்பதையும் அறிவான் அவன். ஆகவே, இனி இங்கிருப்பது அபாயம் என்று அந்தக் கணமே தலைமறைவாகி விட்டான் திருமலை.திருமலை காணப்படவில்லை என்பதை அறிந்த கிருஷ்ணதேவராயர், தம் கோபத்தை அடக்கிக் கொண்டு, மாறப்பனை இன்முகத்துடன் பார்த்து, ''தமிழக வீரனே! உன் வீர விளையாட்டுத் தொடரட்டும். உன் திறமை முழுவதையும் காணவிரும்புகிறேன்,'' என்றார்.ராயரின் வார்த்தைகளால் மாறப்பனின் இதயம் பூரித்துப் போயிற்று. அவன் கைகளில் மின்னல் வந்து இறங்கியது. அடுத்தடுத்துப் பல பறங்கிய வீரர்களை வீழ்த்தி வீராவேசம் காட்டினான்.மகாராயரின் முகத்தில் மகிழ்ச்சி கூத்தாடியது.''மாறப்பா, உன் வீரம் கண்டு வியந்தோம்; மகிழ்ந்தோம். பரிசுப் பணத்துடன் இந்த நவரத்தின மாலையும் உன் பரந்த மார்பை அலங்கரிக்கட்டும்!'' என்று கூறி, தான் அணிந்திருந்த ரத்ன ஹாரத்தைக் கழற்றி அவனுக்குத் தம் கைகளாலேயே அணிவித்தார். கூட்டத்தினர் கரகோஷம் செய்தனர். ராயரின் பொக்கிஷ அதிகாரி அவரிடம் ஒரு பண முடிப்பைத் தர, அதையும் மாறப்பனுக்கு வழங்கினார் ராயர். அதே போல மற்றொரு முடிப்பைப் போர்த்துக்கீசிய அதிகாரி ராயரிடம் கொடுக்க, அதையும் ராயர் மாறப்பனிடம் அளித்தார்.''மாறப்பா! நீ நமது தலைநகரமான விஜய நகருக்கு வா. உன் வீரத்துக்கு ஏற்ற வேலை ஒன்று காத்திருக்கிறது. விஜயநகர வேந்தரிடம் பணிபுரிய விருப்பந்தானே உனக்கு?'' என்று அவன் தோளில் கை பதித்துக் கேட்டார் மகாராயர்.''அதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டுமே... தமிழகத்திலிருந்து உங்களைத் தரிசிக்கும் ஆவலுடன்தான் வந்தேன். உங்களிடம் பணிபுரியும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நான் அதிர்ஷ்டசாலி!'' என்ற மாறப்பனின் குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் சுரந்தது, அருவியைப் போல் ஆனந்தத்தினால். இதன் பிறகு போர்த்துக்கீசியரின் விருந்தும் நடனக்களியாட்டங்களும் தொடர்ந்தன. குத்துச்சண்டையின் வெற்றிக்குப் பிறகு, கூட்டத்தினரிடையே மாறப்பன் முக்கியப் புள்ளியாக விளங்கினான். எல்லாருடைய பார்வையும் அவன் மீது பதிந்தன.- தொடரும்.