மல்லன் மாறப்பன்! (15)
சென்றவாரம்: சண்டையிடும்போது மாறப்பனை அடையாளம் கண்ட திருமலை, இவன் கொலைகாரன் என்று கத்தினான். மாறப்பன் நடந்ததை கூறி நீதி கேட்டான். சண்டையில் வெற்றி பெற்று கிருஷ்ண தேவராயரின் பாராட்டையும், தான் நிரபராதி என்பதையும் நிரூபித்தான். இனி-மகாராயரின் பாராட்டைப் பெற்று புள்ளியாகி விட்டதனால், எல்லாரும் அவனிடம் வலிய வந்து பழகினர்; நட்புப் பாராட்டினர். விருந்து முடிந்த பின் ராயர் பறங்கியரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார். போகும் போது மறக்காமல் மாறப்பனிடம், ''விரைவில் உன்னை விஜய நகரில் என் அவையில் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்!'' என்று அவனுக்குத் தான் விடுத்த அழைப்பை நினைவுபடுத்தினார். மாறப்பனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது.மறுநாள், தன் பயணத்தை மேற்கொண்டான் மாறப்பன். கப்பலிலிருந்து தப்பிய பின் நடந்த நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அதை அசை போட்டபடியே குதிரையில் போய்க் கொண்டிருந்தான்.'திருமலை தப்பிவிட்டான். பெர்னாண்டஸைப் பற்றி இனி அக்கறை இல்லை. அவன் சூழ்ச்சி வெளிப்பட்டு விட்டதால், ராயரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத போர்த்துக்கீசியர் அவனை எச்சரித்து அடக்கி வைப்பர். அப்படி அவன் வாலாட்டினால் அவனைப் பிறகு சந்திக்கலாம். முதல் காரியம் நான் விஜய நகரம் போக வேண்டும். மன்னரே அழைப்பு விடுத்திருக் கிறார்! அங்கு திம்மராயனைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கும். முடிவாகத் திருமலையிடம் கணக்கைத் தீர்க்கும் வேலையை வைத்துக் கொள்ளுவோம்...' இப்படித் தன் பயணத் திட்டங்களை வகுத்துக் கொண்டு விஜய நகருக்குப் பத்து காத தூரத்திலிருந்த நகருக்கு வந்தான்.அந்த ஊர் கலகலப்பாகக் காணப்பட்டது. கம்பீரமான கட்டடங்கள், அகலமான வீதிகள், அங்காடிகளில் பொருள்கள் குவிந்து வைக்கப் பட்டிருந்தன.'இந்த ஊரே இத்தனை கோலாகலமாக இருக்கிறதே, ராயரின் சாம்ராஜ்யத்தின் தலைநகரான விஜய நகரம் எப்படி இருக்குமோ!' என்று வியப்பும், பிரமிப்பும் அடைந்தான் மாறப்பன். சத்திரத்தில் விஜயநகர வீரர்கள் சிலர் இருப்பதைக் கண்டான்.ஒருபடை முகாமிலிருந்து வேறு முகாமுக்குப் போகிறவர்களாக இருக்கும். அல்லது அரசியல் விஷயமாகப் பயணம் மேற்கொண்டிருப்பர் என்று நினைத்துக் கொண்டு, தன் குதிரையைச் சத்திரத்துக் காவல்காரரிடம் ஒப்படைத்துவிட்டு, சத்திரத்து நிர்வாகியைக் காணும் நோக்கத்துடன் திரும்பிக் கொண்டிருந்தவனை ஒரு குரல் அதிகாரத்தோடு அழைத்தது.''ஏய்! இந்த என் மேலங்கியை மடித்து என் குதிரை மீது போடு!'' என்றார் விஜயநகரப் படைத்தளபதி. சத்திரத்துப் பணியாள் என்று மாறப்பனை எண்ணி விட்டார் போலும்! திகைத்துப் போன மாறப்பன், ''என்னிடமா கூறுகிறீர்கள்?'' என்று கேட்டான்.''உன்னிடம்தான் கூறுகிறேன். நீ என்ன விஜயநகரின் இளவரசோ? ஒரு தளபதியின் கட்டளைக்கு விளக்கம் கேட்க உனக்கு என்ன துணிச்சல்,'' என்றான்.மாறப்பனின் முகம் சிவந்தது.''துணிச்சல் என் உடன்பிறப்பு. வேண்டுகோள்கள் தான் கவனிக்கப்படும். அகம்பாவக்காரர்களின் அதிகாரங்கள் அலட்சியப்படுத்தப்படும்!'' என்றான்.மாறப்பனின் பேச்சு அந்தத் தளபதியை வெறியனாக்கியது.''நீச சாதியில் பிறந்தவனே!'' என்று முகம் சிவக்க, தன் சவுக்கை உருவிச் சொடுக்கினான்.''என் குதிரைச் சவுக்கு உன் கர்வத்தை அடக்கும்,'' என்று மாறப்பனைத் தன் சவுக்கினால் அடிக்க முற்பட்டான்.அடுத்த விநாடி மாறப்பன், தன் மீது சுண்டிய சவுக்கைப் பற்றித் தன் பக்கம் வேகமாக இழுத்தான். இத்தகைய தீரச் செயலை எதிர்பாராத திமிர்பிடித்த தளபதி, நிலை தடுமாறிச் சவுக்கின் பிடி நழுவ, மாறப்பனை நோக்கி வந்து விழுந்தான்.அவனை அப்படியே தன் இரு கைகளாலும் தூக்கிய மாறப்பன், அருகில் குதிரைகள் நீர் அருந்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கல்லாலான நீர்த் தொட்டிக்குள் வீசினான். குதிரை நீர்த் தொட்டியில் தலை குப்புற விழுந்து அந்தத் தளபதி பரிதாபமாக தத்தளித்தான். ஆனாலும் அவனுக்குப் புத்தி வரவில்லை. மூர்க்கர்களுக்கு எப்படிப் புத்தி வரும்?தெப்பலாக நனைந்தபடி, தட்டுத் தடுமாறிக் கொண்டு கேவலமான வார்த்தைகளால் மாறப்பனை ஏசிக் கொண்டு, மீண்டும் அவனைத் தாக்க முற்பட்டான். மாறப்பனின் உடலிலும் முறுக்கேறியது. அவன் முஷ்டிகள் வேகமாகச் செயல்பட்டன. வீறாப்புப் பேசிய அந்த வீணன், கடை வாயில் ரத்தம் ஒழுகப் புழுதியில் விழுந்தான்.''தமிழனின் தன் மானத்தை உதாசீனப் படுத்திய எவனும் உயிர் வாழ்ந்ததில்லை தெரியுமா?'' என்று கூறியபடி, தளபதியின் பல்லினால் கீறல் விழுந்த தன் முஷ்டியைத் துடைத்துக் கொண்டே, அங்கிருந்து வேகமாக வெளியேறினான் மாறப்பன்.தளபதி தாக்குண்டது அறிந்து, சத்திரத்தினுள் இருக்கும் விஜயநகர வீரர்கள் வெளியே வந்தனர். அதனால், நிலைமை மோசமாவதை விரும்பாத மாறப்பன், அந்தச் சத்திரத்தில் தங்கும் நினைப்பைக் கைவிட்டுத் தன் குதிரையின் மீது ஏறி அதை விரட்டினான். அவன் மனம் குழப்பமுற்றிருந்தது.'ஏன் இப்படி? எங்கு போனாலும் என்ன செய்தாலும் தொல்லைகள் சூழ்கிறதே. நான் ஊரை விட்டுக் கிளம்பிய வேளை சரியில்லையோ? நாளும், கோளும், வேளையும் பார்த்துத்தானே கிளம்பினேன்! எங்கு போனாலும் வம்பும், சண்டையும் ஏற்படுகிறதே...ம்... நண்பன் திம்மன் விஜயநகரிலே இருக்கிறானோ அல்லது அரச காரியமாக வெளியூர் போயிருக்கிறானோ தெரியாது. இந்தத் தளபதி வேறு... அவமானப் பட்டுப் போன இவன், விஜய நகரிலே என்னைக் கண்டால் மறுபடியும் வம்புக்கு வருவான். வீண் பழி சுமத்துவான்... ஆகவே, திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இப்போது விஜய நகருக்குப் போக வேண்டாம்... பின் எங்கே போவது?' இப்படிச் சிந்தனை வயப்பட்டவனாக, மாறப்பன் ராஜபாட்டையிலிருந்து விலகி, வேறு பாதையில் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான்.சட்டென்று அவன் நினைவில் கப்பலில் சந்தித்த கிழவரின் நினைவு வந்தது. குறு நில மன்னரான அச்சுதராயர், தன் கையைப் பற்றிக் கொண்டு வேண்டிக் கொண்ட காட்சி தோன்றியது.'ஆம் அதுதான் சரி... நான் முதலில் சந்திரகிரி போகிறேன். அச்சுதராயரின் மகள் லஷ்மி தேவியின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெங்கண்ணாவினால் அவளுக்கு ஏதாவது ஆபத்தானால் அவளைக் காப்பாற்ற வேண்டும்' என்ற முடிவோடு, சந்திரகிரிக்குச் செல்லும் பாதையில் குதிரையைத் திருப்பினான்.இளவரசி லஷ்மி தேவியின் நினைவு அவன் உள்ளத்தில் இனம் தெரியாத ஓர் உற்சாகத்தை உண்டாக்கியது.அங்கே-சந்திரகிரியில் அச்சுதராயரின் மகள் லஷ்மி தேவி சோகமே உருவாய் இருந்தாள். போர்க்களம் சென்ற தன் தந்தை நாடு திரும்பாதது மட்டும் அல்ல அவள் கவலைக்குக் காரணம்.'யுத்தகளத்திலே தன் தந்தை வீரமரணம் அடைந்திருந்தால் அவரது உடல் கிடைத் திருக்குமே... ஆனால், மாண்டவர் சடலங்களில் அவர் உடல் காணப்படவில்லை என்கின்றனர் மெய்க்காவலர்கள். கைதியாகி இருந்தால் மகாராயரிடமிருந்து தகவல் வந்திருக்கும். அதுவும் இல்லை. அப்படியானால் அப்பா உயிரோடிருக்கிறாரா? எங்காவது தலைமறை வாகி வாழ்கிறாரா? போரில் வெற்றி, தோல்வி சகஜம். இதற்காக ஒளிந்து வாழ்வானேன்? விவரம் தெரியாதவரல்லவர் என் அப்பா, அப்படியெல்லாம் செய்ய மாட்டார். ஆனால், ஏன் எந்தத் தகவலும் இல்லை...?' என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.அவளுடைய மாமாவான வெங்கண்ணாவின் தொல்லை வேறு, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அச்சுதராயர் இருக்கும் போதே அடிக்கடி லஷ்மியைத் தனக்கு மனைவியாக்கி வைக்கும்படி வற்புறுத்தி வந்தவன் அவன்.''லஷ்மி, இன்னும் நீ அப்பாவையே நினைத்துக் கொண்டு ஏங்குவது சரியல்ல... இறந்தவர்கள் எங்காவது திரும்புவதுண்டா? நீ என் மனைவியாகி விடு... இந்நாட்டின் அரசியாகி, ஆட்சிப் பொறுப்பை, உன் கணவனான என்னிடம் ஒப்படை. நாம் இருவரும் மக்கள் மகிழச் சந்திரகிரியை ஆளுவோம்,'' என்று நெருக்கினான்.''வெங்கண்ணா, நீ இப்படியெல்லாம் பேசி என் வேதனையைக் கிளறாதே. அப்பா இறந்து விட்டார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் இறக்கவில்லை என்று என் உள் மனம் கூறுகிறது,'' என்றாள் இளவரசி லஷ்மிதேவி.''போர்க்களத்திலிருந்து திரும்பிய வீரர்கள் கூறுவது பொய்யாக இருக்குமா? அதை நம்ப மறுத்து வீண் பிடிவாதம் பிடித்தால் எப்படி லஷ்மி...?'' ''அப்பா போர்க்களத்துக்குப் புறப்படுமுன், என்னிடம் ஒரு விஷயம் கூறி விட்டுப் போனார். வெற்றி, தோல்வி எதுவானாலும் எந்த நிலையிலும் ஒரு பொருள் எனக்கு அனுப்புவதாகக் கூறி இருந்தார். அதைக் கண்டு தன் நிலைமையைத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறிச் சென்றார். அந்தப் பொருள் கிடைத்தால் தான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்,'' என்றாள் லஷ்மிதேவி.''அது என்ன பொருள்? உன்னை ஒரு முடிவுக்கு வரச் செய்யக் கூடிய அந்த நினைவுச் சின்னம் எது?'' என்று கேட்டான் வஞ்சகனான வெங்கண்ணா!- தொடரும்.