மருந்து கண்ட மாமேதை!
முன்பெல்லாம், மருத்துவ வசதி இல்லாத காலத்தில், பல கொடிய நோய்கள் குழந்தைகளை தாக்கின. அவற்றுள் மிகவும் கொடிய இரண்டு நோய்கள், 'டீப்தீரியா' என்கிற தொண்டை அடைப்பான், 'டெட்டனஸ்' என்கிற கக்குவான். இந்த நோய் குழந்தைகளை ஆட்டிப் படைத்து விடும்.சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... மருந்தே கண்டுபிடிக்காத அக்காலத்தில் இந்த நோய்கள் வந்தால், குழந்தைகள் மரணத்தை மட்டுமே சுவாசிக்கும்.இன்று தடுப்பு மருந்துகளால்... குழந்தைகள் உயிர் வாழ்கின்றன. இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்ட மருத்துவ மாமேதையின் பெயர், 'எமில் அடால்ப் வான்பெரிங்' என்ற ஜெர்மானியர்.இவர் ஜெர்மனியின், 'ஹன்ஸ்டார்ப்பில்' 1854ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி பிறந்தார். ஆகஸ்ட் ஜார்ஜ்பெரிங், ஆகஸ்டைன் சட்ச்பெரிங் தம்பதிகளின் 13 பிள்ளைகளில் மூத்தவர்.சிறுவயதிலேயே அவருக்கு மருத்துவம் படிக்க ஆர்வம். 'பெர்லினில்' புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் மருத்துவபடிப்பில் சேர்ந்து, 1874 முதல் 1878ம் ஆண்டு வரை மருத்துவப் படிப்பை முடித்தார்.அவர் போலந்து நாட்டின் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வீரர்கள் அடிக்கடி நோயால் தாக்கப்படுவதைக் கண்டார். இவ்வாறு தாக்கப்படுவது கிருமிகளால் என்பதை அறிந்து அதனை தடுக்க ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் ஜெர்மனிக்கு திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அங்கு சுகாதார ஆய்வு மையத்தில் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இவருக்கு தலைவராக இருந்தவர் உலகப் புகழ்பெற்ற மருத்துவர் 'ராபர்ட்கோச்.' இவரிடம் உதவியாளராக சேர்ந்தது அவரின் அதிர்ஷ்டம்.ராபர்ட் கோச் வைரஸ்கள் பற்றியும், பாக்டீரியாக்கள் பற்றியும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றியும் ஆராய்ந்த மேதை ஆவார்.மருத்துவ ஆய்வில் இரண்டு, மூன்று முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி ஆராய்ந்தார்.'டிப்தீரியா' என்ற நோயைக் 1890ம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்த நோயால் குழந்தைகள் படும் அவதியைக் கண்டு அதற்கு எதிர்வினை புரியும் மருந்தை கண்டுபிடித்து, மருத்துவ உலகிற்கு மகத்தான சேவையை செய்தார். அடுத்து இவர், சில மனிதர்களுக்குள் புகும் கிருமிகளை எதிர்த்து வெல்லும் சக்தியை எவ்வாறு பெறுகின்றனர் என்பதை பற்றியும் ஆய்வு செய்தார்.பலர் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களுக்கு செயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முனைந்தார்.எப்படி எனில் பாதிக்கப்பட்டவரின் உடலில் செயற்கை எதிர்ப்பு சக்தியை உட்செலுத்தினால், உடலிலுள்ள கிருமிகளை வலுவிழக்கச் செய்து விடலாம் என்பதே அவர் எண்ணம். இதற்கு அவர் செய்த சிகிச்சைக்கான பெயர், 'சீரம் தெரபி' என்பதாகும்.ஒரு நோயாளியின் உடலில் இருக்கும் நோய்க்கிருமிகளை ஆராய்ச்சிக்குரிய சிறு விலங்குகளுக்கு கொடுத்து எதிர்ப்பு சக்தி வளர்த்து, அந்த விலங்கின் ரத்தத்திலிருந்து, 'சீரம்' என்ற பொருளை எடுத்து அதை நோயாளிகளுக்கு கொடுக்க, அவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இவ்வாறான சிகிச்சைக்குத்தான், 'சீரம் தெரபி' என்று பெயர். இத்தெரபியை பலருக்கு செய்து பல நோய்களை குணப்படுத்தி உள்ளார். ஆனால், இதை எல்லாருக்கும் செய்வது என்பது இயலாதது என்பதை உணர்ந்த பெரிங், நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் இறங்கினார்.டிப்தீரியாவிற்கு (தொண்டை அடைப்பான்) மருந்தைக் கண்ட அவர் கடும் இருமல் மற்றும் கக்குவான் இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார்.கோடிக்கணக்கான குழந்தைகளை டிப்தீரியா, டெட்டனஸ் நோய்களிலிருந்து காப்பாற்ற அற்புதமான தடுப்புமருந்தை கண்டுபிடித்த பெரிங் 1901ல் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த இவருக்கு பல நாடுகள் பட்டங்களையும், விருதுகளையும் கொடுத்துப் பாராட்டின.நோய் எதிர்ப்பு சக்திக்காக இரவும், பகலும் உழைத்த மருத்துவ மாமேதையை 1917ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி காலன் அழைத்துச் சென்றான்.பிறந்து வளரும் குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த அவரை என்றென்றும் வணங்குவோம்.