என்னோடது!
ஆலங்குடி என்னும் கிராமத்தில், இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒருவன் பெயர் வாசு; மற்றவன் சிவா. இருவரும் இணைபிரியாத சிநேகிதர்கள். ஒருவரை ஒருவர் எப்போதும் பிரியமாட்டார்கள்.ஒருநாள்-அவர்கள் இருவரும் பக்கத்திலிருந்த ஒரு ஊருக்கு புறப்பட்டனர். ஓரிடத்தில் அமர்ந்து தாங்கள் எடுத்து வந்த உணவை சாப்பிட்டனர். சாப்பிட்ட கையை கழுவ, அருகிலுள்ள குளக்கரைக்கு சென்றனர்.அப்போது, அங்கே ஒரு செப்புப் பானை இருப்பதை பார்த்தான் வாசு. உடனே ஓடிப்போய் அதை எடுத்தான். சிரமப்பட்டு அதன் மூடியை திறந்து பார்த்தான். உள்ளே வெள்ளிக் காசுகளும், தங்க காசுகளும் ஜொலித்தன. அவன் அந்த பானையை விலுக்கென்று மூடிவிட்டான். இதை உடனிருந்து கவனித்த சிவா மிகவும் மகிழ்ந்தான்.“நண்பா! அதிர்ஷ்ட தேவதை நம்மை கண் திறந்து பார்த்து விட்டாள் போலும். இன்றுடன் நம் கஷ்டங்கள் யாவும் தீர்ந்தது,” என்றான் சிவா.“இல்லை சிவா... அதிர்ஷ்ட தேவதை என்னை கண் திறந்து பார்த்து விட்டாள். இன்றுடன் என் கஷ்டமெல்லாம் தீர்ந்தது. ஏனென்றால், இந்த செப்பு பானை புதையலை, முதன் முதலில் கண்டெடுத்தவன் நான் தான். எனவே, இதற்கு முழு சொந்தக்காரன் நான் தான். நீயும் சேர்ந்து கொள்ள வேண்டாம்,” என்றான்.ஆமாம்! பணத்தை கண்டதும் உயிர் நண்பனின் மனம் மாறிவிட்டது. இதை உணர்ந்த சிவா மிகவும் வருந்தினான். நண்பர்கள் தொடர்ந்து செல்லாமல் தங்கள் ஊருக்கே திரும்பி விட்டனர்.சில தினங்களுக்கு பின் - வாசு புதையல் கண்டெடுத்ததை, அவன் வீட்டு வேலைக்காரன் எப்படியோ கண்டுபிடித்து விட்டான். ஊர் முழுவதும் செய்தி பரவி விட்டது. இதை அறிந்த அரசாங்கத்தினர் புதையலை மறைத்த குற்றத்திற்காக, வாசுவின் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். இதை கேள்விப்பட்ட வாசு, தன் நண்பன் வீட்டிற்கு தலைதெறிக்க ஓடி சென்றான்.“நண்பா! நாம் கண்டெடுத்த புதையலை பற்றி அரசாங்கத்திற்கு செய்தி போய் விட்டது. இதனால் நமக்கு துன்பம் வரும் போலிருக்கிறதே,” என்று பயந்தபடி கூறினான்.நண்பன் கூறுவதை வெகு அமைதியாக கேட்ட சிவா, “நண்பா! புதையல் நாம் கண்டெடுத்ததல்ல... நீ கண்டெடுத்தது. அதை அரசாங்கத்திற்கு மறைத்தது நாமல்ல... நீ தான். எனவே, இப்போது துன்பம் வரப்போவதும் நமக்கல்ல. உனக்குதான்,” என்று கூறிவிட்டு பேசாமல் உள்ளே சென்று விட்டான். அப்போது தான் வாசுவிற்கு தான் செய்த தவறு புரிந்தது.'புதையல் கிடைத்தவுடன் உயிர் சிநேகிதனுக்கு, பங்கு தர மனம் இன்றி, அதை நான் கண்டெடுத்தது என்றும், புதையலால் தன் கஷ்டமே தீரும் என்று கூறியது எத்தனை பெரிய தவறு!' என்று உணர்ந்தான் வாசு.'நம் மகிழ்ச்சியில் நண்பர்களுக்கு பங்கு தரவில்லை என்றால், அவர்கள் நம் துன்பத்தை எப்படி நம்முடன், பங்கு போட்டுக் கொள்வர்...' என்று நினைத்தபடி தலைகுனிந்து நடந்தான் வாசு.குட்டீஸ்... நீங்களும் இப்படி 'செப்பிஷ்'ஆ இருக்க கூடாது. சரியா...