உள்ளூர் செய்திகள்

சுட்டி முயல்...

ஒரு அடர்ந்த காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதில் ஒரு முயல் படு சுட்டி. எப்போதும் தன் கூட்டத்தை விட்டு தனியே செல்ல முயற்சிக்கும்.ஒருநாள் -அந்த சுட்டி முயல் தனியே சென்றபோது, ஒரு வண்ணத்துப் பூச்சியை கண்டு அதன்பின்னால் சென்றது.“ஏன் என் பின்னால் வருகிறாய்... உன் கூட்டத்துடன் செல்லவில்லையா?” என்று கேட்டது வண்ணத்துப் பூச்சி. “நான் உன்னுடன் நண்பனாய் இருக்க விரும்புகிறேன். என்னை சேர்த்து கொள்,” என்றது முயல்.“சரி!” என்று தலையசைத்தது வண்ணத்துப்பூச்சி.“இக்காட்டில் ஒரு தந்திரக்கார நரி இருக்கிறது. அது உன்னை சாப்பிட்டுவிடும். எனவே, தனியே வராதே. உன் கூட்டத்துடனே இரு. நான் உன்னை அங்கு வந்து தினமும் சந்திக்கிறேன்,” என்றது வண்ணத்துப்பூச்சி.தினமும் அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்ததை தந்திரக்கார நரி மரத்தின் பின் ஒளிந்து நின்று கவனித்தது. இந்த முயலை எப்படியாவது வேட்டையாடிவிட வேண்டும் என்று எண்ணியது. அவ்வாறு எண்ணியபோதே அதன் நாக்கில் எச்சில் ஊறியது.முயல் தனியாக இருக்கும் சமயம் பார்த்து, “முயல் குட்டியே! என்னுடன் நண்பனாய் இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்டது.“ நீ என்னை போன்ற சிறு விலங்குகளை ஏமாற்றி சாப்பிடுவாயாமே?” என்றது முயல்.“யார் சொன்னது?” என்று கேட்டது நரி.“என் நண்பன்தான் அப்படிச் சொன்னான்,” என்றது. “உன் நண்பர் யார்?” என்றது நரி.“வண்ணத்துப் பூச்சிதான் என் நண்பன்!” என்றது முயல்.“அவன் பொய் சொல்கிறான் நான் மிகவும் நல்லவன்!” என்றது நரி.நரியை நண்பனாக ஏற்றுக் கொண்டது முயல்.மறுநாள் முயலை சந்திக்க வந்தது வண்ணத்துப் பூச்சி. “நீ என்னுடன் பேசாதே! நரி அண்ணன் மிகவும் நல்லவன். அவனைப் பற்றி ஏன் தவறாக என்னிடம் சொன்னாய்!” என்றது முயல்.“நான் சொல்வது இப்போது உனக்குத் தவறாகத்தான் தோன்றும். பின்னாடி நீ அனுபவிப்பாய்,” என்று சொல்லி விட்டு பறந்து சென்றது வண்ணத்துப் பூச்சி.நரியுடன் புதிய நட்பை வளர்த்துக் கொண்டது முயல். ஒருநாள்- -“நான் உனக்கு நிறைய கேரட் பறித்துத் தருகிறேன். என்னுடன் வா,” என்று ஆசை வார்த்தை கூறி முயலை அழைத்தது நரி.அதன் பேச்சை நம்பி அதன்பின் சென்றது முயல்.சிறிது நேரம் சென்றபின், “எங்கே கேரட்... நாம் வெகு தூரம் வந்துவிட்டோமே,” என்று கேட்டது முயல்.“முட்டாள் முயலே, என்னிடம் நல்லா ஏமாந்துவிட்டாயா,” என்றது நரி.அப்போதுதான் நரியின் பயங்கரமான முகத்தை கண்டது முயல்.“என்னைக் காப்பாத்துங்கள்... என்னைக் காப்பாத்துங்கள்!” என்று கத்தியது முயல்.அந்த இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சி, முயல் கூட்டத்திடம் விரைந்து சென்று விஷயத்தைச் சொன்னது. உடனே, தாய் முயல், பெருங்கூட்டத்தை கூட்டி வந்து நரியை விரட்டி, அதன் பிடியிலிருந்து காப்பாற்றியது.தன் தவறை உணர்ந்து, வண்ணத்துப் பூச்சியிடம் மன்னிப்புக் கேட்டது முயல்.அதன்பின், வண்ணத்துப் பூச்சியின் நெருங்கிய நண்பனாகிவிட்டது முயல்.குட்டீஸ்... நரி போன்ற நண்பர்கள் உங்களிடம் இருப்பர். நீங்கள்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !