அகிம்சை கற்பிக்கும் அருங்காட்சியகம்!
அக்., 2 காந்தி ஜெயந்தி!அகிம்சை நெறியை கடைபிடித்து, உலகை வென்ற காந்திஜிக்கு இது, 134ம் பிறந்தநாள். உலகில், 79 ஆண்டுகள் வாழ்ந்த மகான். மக்கள் நலனுக்காக உழைத்தவர். யாரையும் தாழ்வாக கருதாமல் மதித்த மகாத்மா. தொண்டு உள்ளத்துடன் சொல், செயலில் துாய்மை காத்தவர். செருக்கை துறந்து, மேன்மையை கடைபிடித்தவர். எளிய வாழ்க்கை முறையை கற்றுத் தந்தவர். இவ்வளவு உயர்வாக வாழ்ந்தவரின் மேன்மையை எடுத்துக் கூறும் தேசிய அருங்காட்சியகம், டில்லியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியத்துவம் பெற்றுள்ள அம்சங்கள்...* காந்திஜி செய்து வந்த பணிகளை மேன்மையடைய செய்வது * அவரது நினைவை போற்றுவது * காந்திஜி உருவாக்கிய நிறுவனங்களை சோர்வின்றி, தொடர்ந்து நடத்துவது... இந்த லட்சியங்களில் அடிப்படையில் இயங்குகிறது. காந்திஜி மீது பற்றுடன் அகிம்சையை பின்பற்றுவோரிடம் அருங்காட்சியக திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டப்பட்டது. காந்திஜி என்றுமே அரசு சார்ந்தவராக இல்லை. மக்கள் நலன் சார்ந்தே செயல்பட்டார். அதற்காக, இந்தியா முழுதும் சுற்றி வந்தார். அனைத்து பகுதி பண்பாட்டையும், கலாசாரத்தையும் அறிந்திருந்தார். உலகத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். பல நாட்டு மக்களிடம், அன்பு, மரியாதை, ஆதரவு பெற்றிருந்தார். காந்திஜி பயன்படுத்திய பொருட்கள், எழுதிய கடிதங்கள் எல்லாம், அவர் நினைவை போற்றுகின்றன. அவற்றை வகைப்படுத்தி, முறைப்படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, காந்திஜியை துளைத்து, உயிரைக் குடித்த துப்பாக்கிக் குண்டு, அன்று உடுத்தியிருந்த ஆடை, அணிந்திருந்த கடிகாரம் என, நெகிழ்ச்சி தரும் வகையில் காட்சியில் உள்ளன.வாழ்ந்த காலத்தில், புகைப்படத்தில் அதிகம் பதிவானவர் என்ற பெருமை உடையவர் காந்திஜி. அவரை மையப்படுத்திய, 7,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வரலாற்று பின்னணியுடன் தொகுப்பாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இது, அவரது சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. உலக மக்களிடம் மிகப்பெரும் செல்வாக்கு பெற்றவர் காந்திஜி. அவரது வாழ்க்கை முறை, பல்துறை கலைஞர்களிடம் பெரும் தாக்கங்களை உருவாக்கியிருந்தது. கலைஞர்களின் கை வண்ணத்தில் சிலையாக, சிற்பமாக, துணியில் நெசவாக, வரை படமாக, ஓவியமாக புதிய அவதாரம் எடுத்து உள்ளார் காந்திஜி. விடுதலைப் போராட்டத்தின் போது, பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார் காந்திஜி. சிறைச்சாலையை கோவில் என்றே மதிப்பிட்டார். சிறைகளில் வாழ்ந்த போது பயன்படுத்திய உணவுத்தட்டு மற்றும் தண்ணீர் குவளைகளையும் இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். ரத்த அழுத்த பாதிப்பை அளக்கும் கருவியை எப்போதும் உடன் வைத்திருப்பார் காந்திஜி. அந்த கருவியும், அவரது உடல் நலம் தொடர்பான மருத்துவ ஆவணங்களும், குறிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. காந்திஜி என்றாலே கைத்தடி, கண்ணாடி, செருப்பு தான் நினைவுக்கு வரும். இப்படி அன்றாடம் பயன்படுத்தியவற்றை அருங்காட்சியகத்தில் காணலாம். அவரைப் பற்றி பல கோணங்களில் புத்தகங்கள் வந்தபடியே இருக்கின்றன. மறைந்து, 75 ஆண்டுகளுக்கு பின்னும் வரத்து குறையவில்லை. அவற்றை பாதுகாக்க, அருங்காட்சியகத்தில் தனி படிப்பகம் உள்ளது. அதில், 45 ஆயிரத்துக்கும் அதிக புத்தகங்கள் இருக்கின்றன. காந்திஜியை அறியவும், ஆராயவும் மிகப்பெரிய அறிவுக் கருவூலமாக விளங்குகிறது. இங்கு, சிறுவர்களுக்காக கண்காட்சி கூடமும் உள்ளது. காந்திஜியின் வாழ்வை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் இடம் பெற்றுள்ளன. காந்திஜி பிறந்த, வசித்த வீடுகள், இறுதியாக வசித்த சேவா கிராம ஆசிரமம் என மாதிரிகளாக வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன.காந்திஜி பற்றிய உருவாக்கப்பட்ட ஆவணப் படங்கள், திரைப்படங்கள் அனைத்தும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அவரது பிராத்தனை சொற்பொழிவுகள் ஒலி, ஒளியாக இடம் பெற்றுள்ளன. டில்லியில் தவறாது அஞ்சலி செலுத்த வேண்டியது, காந்தி நினைவிடம். அதே நேரம் அவரது வாழ்வின் முழுமையை பின்பற்ற உதவும் இடமாக விளங்குகிறது காந்தி தேசிய அருங்காட்சியகம்.இந்த அருங்காட்சியக செயலர் மற்றும் இயக்குனர் அ.அண்ணாமலை கூறுகையில், 'வாரத்தில் செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 வரை அருங்காட்சியகத்தின் அனைத்து பகுதிகளையும் பார்க்கலாம்... 'மகாத்மா காந்தியின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையை கற்கவும், கடைபிடிக்கவும், வரலாற்றை அறிந்து கொள்ளவும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு வழியாக கற்பிக்க பல்வேறு செயல்முறைகளை இங்கு உருவாக்கி உள்ளோம். காந்திஜி என்றும் வாழும் இடமாக இது உள்ளது...' என்றார்.- நிகி