உள்ளூர் செய்திகள்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

அக்டோபர் 20 தீபாவளி திருநாள்! தீ பாவளி திருநாளை கொண்டாடி மகிழ புதிய உடை, இனிப்பு, பட்டாசு வகை எல்லாம் தயாராக இருக்கும். இந்த இனிய வேளையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்கான பின்னணியை தெரிந்து கொள்வோம்... பாடங்களை சரியாக படிக்காவிட்டாலோ, எந்த நேரமும் அலைபேசி, 'டிவி' என பார்த்துக் கொண்டிருந்தாலோ பெற்றோர் கண்டிப்பர். நன்மை கருதியே அவ்வாறு செய்கின்றனர். அது போன்ற கதை தான் இது. மகாவிஷ்ணுவும், அன்னை பூமா தேவியும், உலகத்துக்கு தீமை செய்தான் என்பதற்காக மகனுக்கு கடும் தண்டனை வழங்கினர். பெற்ற பிள்ளை என்றும் பாராமல் நீதியை நிலை நாட்டினர். நாம் வாழும் பூமியை பூமாதேவி என்பர். அவள் மிகவும் பொறுமைசாலி. பூமியில்... * குழி தோண்டுகிறோம் * மரங்களை நடுகிறோம் * பெரும் பாரங்களை சுமக்க வைக்கிறோம் * எச்சில் துப்பி அசுத்தம் செய்கிறோம் * கழிவுகளை கொட்டுகிறோம். எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கிக் கொள்கிறாள் பூமாதேவி. நற்குணங்கள் உடைய பொறுமைசாலியான பூமாதேவியை, அசுரன் இரண்யாட்சன் கடத்தி சென்று, பாதாளத்தில் மறைத்து வைத்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு, பன்றி வடிவில் பூமியை அகழ்ந்து பாதாளம் சென்றார்; பூமாதேவியை மீட்டார். அவர்களுக்கு பவுமன் என்ற மகன் பிறந்தான். பவுமன் என்றால் பூமியின் பிள்ளை என பொருள். பிறந்தது முதலே கெட்டவனாக இருந்தான் பவுமன். தவங்கள் செய்தான். பெற்ற தாயைத் தவிர மற்ற யாராலும் தன்னை கொல்ல முடியாது என வரத்தையும் பெற்றான். இதை பயன்படுத்தி உலக மக்களை கொடுமை செய்தான் பவுமன். கோபமடைந்தார் மகாவிஷ்ணு. பூமாதேவியை கொண்டே பவுமனை அழித்தார். மனிதனாக பிறந்த போதிலும் பவுமன் அசுர குணங்களை கொண்டிருந்ததால், அவனை நரகாசுரன் என்றே அழைத்தனர் மக்கள். நரன் என்றால் மனிதன். அசுர குணம் கொண்டிருந்ததால் நரகாசுரன் என பெயர் பெற்றான். பெற்ற பிள்ளை என்றும் பாராமல் மகாவிஷ்ணுவும், பூமாதேவியும் நீதியை நிலைநாட்டியதே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நல்ல குணங்களுடன் வளரவே பெற்றோர் கண்டிப்பை காட்டுகின்றனர். குழந்தையை நல்ல பிள்ளை என்று சொல்வதையே விரும்புவர். எனவே, இந்த தீபாவளி திருநாளில் பெற்றோர் சொல் கேட்டு நடப்பது என உறுதி எடுப்போம். எதிர்காலம் சிறப்பாக அமையும். இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள். - தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !