உள்ளூர் செய்திகள்

நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்!

பூமியும், பிற கோள்களும் சூரியனை சுற்றும் உண்மையை உலகுக்கு எடுத்துரைத்த மேதை, நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ். ஐரோப்பிய நாடான போலந்து, டோருன் நகரில், பிப்., 19, 1473ல் பிறந்தார். பூமியை, சூரியன் சுற்றி வருவதாக நம்பியிருந்த காலம் அது.இளமைப் பருவத்திலே வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஐரோப்பிய நாடான இத்தாலியில், மதச்சட்டவியல் படிப்பில் சேர்ந்தார்; அங்கு விஞ்ஞானிகளுடன் இணைந்து சந்திரன், கோள்களின் இயக்கம் பற்றி ஆய்வு செய்தார். மருத்துவம், கணிதம், மதச்சட்டம் போன்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றார்.கத்தோலிக்க மடாலயத்தில் வேலை கிடைத்தது. அங்கு சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின், பேராயராக பதவி உயர்ந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. பகலில் மடாலய பணி, இரவில் அறிவியல் துறை சார்ந்த ஆய்வு என பணிகளை மேற்கொண்டார்.அப்போது தொலைநோக்கி கண்டு பிடிக்கப்பட்டிருக்கவில்லை. சொந்த முயற்சியில் உருவாக்கிய, சாதாரண கருவிகள் துணை கொண்டு, வானம், கோள்களின் இயக்கத்தை ஆய்வு செய்தார் கோப்பர்னிக்கஸ்.'பூமி, அதன் வெளிப்புறத்தில் உள்ள கோள்களை விட, அதி வேகமாக ஓடுகிறது... அது கடந்து செல்லும் போது, வெளிப்புறக் கோள்கள், பின் வாங்குவது போல தோன்றுகிறது' என, கூறினார். ஆராய்ச்சி தகவல்களை தொகுத்து, 400 பக்கத்தில் நுால் ஒன்றை எழுதினார்.பூமி, கோள உருவத்தில் உள்ளது என்பதை நிரூபித்தார். அது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'பாய்மரக் கப்பல் உச்சியில், விளக்கு ஒன்றை ஏற்றி வையுங்கள்; கப்பல் கரையிலிருந்து, கடலுக்குள் போகும்போது, உச்சியில் இருக்கும் விளக்கு, தாழ்ந்து கொண்டே இருக்கும்; பின், அது பார்வையில் இருந்து மறையும்; இதற்கு காரணம், பூமி உருண்டையாக இருப்பது தான்...' என்ற உண்மையை மிக எளிமையாக விளக்கியிருந்தார்.'சூரியன், நகராமல் ஒரே இடத்தில் நிலை பெற்றுள்ளது; சனி, வியாழன், செவ்வாய், சுக்கிரன், புதன் போன்ற கோள்கள் வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன...' என, அந்த நுாலில் விளக்கியுள்ளார்.அந்த ஆராய்ச்சி நுாலை எழுதி முடிக்க, 30 ஆண்டுகள் தேவைப்பட்டது. தன், 69ம் வயதில் எழுதி முடித்தார். அதை புத்தகமாக வெளியிட முயற்சி மேற்கொண்டார். அப்போது, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுய நினைவை இழந்தார். கோப்பர்னிக்கஸ் வானியல் ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் ஐரோப்பிய நாடுகளில் பரவியது. புதிய ஆய்வுகளுக்கு அடிகோலியது.வானியல், சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தில் புகழ் பெற்று விளங்கிய, விஞ்ஞானி கோப்பர்னிக்கஸ், மே 24, 1543ல், தன், 70ம் வயதில் மரணம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !