ஆவிகள் இல்லையடி பாப்பா! (5)
சென்றவாரம்: பெரிய ராஜாவின் படத்தை பார்த்து மயங்கி விழுந்தான் டேவிட். இனி -''ஏய் டேவிட்... என்னடா ஆச்சு... ப்ளீஸ் எழுந்திருடா,'' என்று புலம்பினான் ராமு.தண்ணீர் எடுத்து வந்து, அவன் முகத்தில் தெளித்தான் ஆசாத்; மெல்ல கண் விழித்தான், டேவிட்.''இப்ப நான்... எங்கே இருக்கேன்,'' என்று மிரண்டபடி கேட்டான்.''ஏய் டேவிட் நான் ராமுடா; இவன் உயிர் நண்பன் ஆசாத்; எங்கள பாருடா... இந்த தண்ணிய குடி,'' என்று கொடுத்தான், ராமு.அப்போ, யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. ராமுவும், ஆசாத்தும் பயந்தபடி பார்க்க, மீண்டும் கீழே சாய்ந்து விட்டான் டேவிட்.''ஓ.. மை காட்! வருவது உன் அப்பாடா,'' என்று அச்சத்துடன் கூறினான், ஆசாத்.''கவலைப்படாத! நான் சமாளிக்கிறேன். நீ டேவிட்டை மயக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சி செய்,'' என்றான் ராமு.''என்னடா தம்பிகளா... இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க... ஏன் டேவிட் படுத்திருக்கான். ஏதாச்சும் உடல் நலம் சரியில்லையா...'' என்று சாந்தமான குரலில், அமைதியுடன் எப்போதும் போல் பேசினார் ராமுவின் அப்பா.''என்னன்னு தெரியலேப்பா... திடீர்னு ஒரு மாதிரி இருக்குன்னான். அப்படியே கீழே சாஞ்சுட்டான்,'' என்றான், ராமு.அவரே மெல்ல டேவிட்டின் தலையை துாக்கி தன் மடி மீது வைத்து, ''தம்பி இந்தாப்பா இந்த தண்ணிய குடி,'' என்றார்.மெல்ல கண் விழித்தான் டேவிட்.ராமுவின் அப்பா மீது தன் தலை இருப்பதையும், அவர் தண்ணீர் கொடுப்பதையும் பார்த்தவன், ''ஐயோ ஆவி...'' என்று அலறினான்.''ஆவின்னு எதுவும் கிடையாதுப்பா. நீ ஏதோ ஆவி படம் பார்த்தியா... அதான் இப்படி பயப்படுற. ''நீயே ஒரு டாக்டரின் மகன். உன் உடல் நிலையில் எந்த கோளாறும் இருக்க வாய்ப்பில்ல; அதுக்குத்தான் இந்த தண்ணீரை குடி; எல்லாம் சரியாகி விடும்...''என்று மிக மிக அன்பாகவும், அமைதியாகவும் பேசினார்.இதைக் கேட்டதும், அசந்து விட்டான், டேவிட்.'அவரா இவர்' என்று நினைத்து ஆசாத்தை பார்க்க, அவனும் தலையாட்டி தன் வியப்பை வெளிப்படுத்தினான். கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வர, மெல்ல எழுந்தான் டேவிட்.''டேய் ராமு, இவங்க ரெண்டு பேரும் நம்ம அரண்மனைக்கு புதுசா வந்திருக்காங்க. இவர்களுக்கு அரண்மனையை சுற்றி காட்டு; அப்படியே நம்ம பெரிய ராஜாவின் நந்தவனத்தையும் காட்டு; இதை விட்டுட்டு படிப்பு என்னடா படிப்பு; அதை நாளைக்கு கூட செய்யலாம் இல்லியா. ''அவங்க எப்ப டிபன் சாப்பிட்டு முடிச்சாங்களோ அப்பவே, நீ அரண்மனையை சுத்தி காட்டி இருக்க வேண்டாமா... பெரிய ராஜா நந்தவனத்துக்கு போய் நின்னாலே அடிக்கிற காத்துல டேவிட்டோட பேய், பிசாசு, ஆவி போன்ற கற்பனை பயம் எல்லாம் விலகிடும். உடனே இவர்களை அழைத்து போ,'' என்றார்.இதைக் கேட்டதும், அசந்து விட்டனர் டேவிட்டும், ஆசாத்தும்.ராமுவுக்கு இப்போது தான் மனதில் உற்சாகம் வந்தது. காரணம், இப்படி பேசுபவர் தான் தன் அப்பா. அதுதான் அவர் சுபாவம். முதலில் பேசிய அப்பாவின் பேச்சு அவருடையது அல்ல... மாறாக, பெரிய ராஜா ரகுநாத சிம்மரின் ஆவிதான் அவரை பேச வைத்திருக்கிறது என்று புரிந்து கொண்டான். இப்போது மூவரும் ராமுவின் தந்தை கூறியது போல், அரண்மனையையும், பெரிய ராஜா உருவாக்கிய நந்தவனத்தையும் காண சென்றனர். ''டேய் டேவிட்! இப்ப நான் கேட்க இருப்பது முக்கியமான கேள்வி... நீ சரியா பதில் சொல்லணும்,'' என்றான் ராமு.''ஓ... தாராளமா கேள்,'' என்றான். ''நீ ஏன் பெரிய ராஜா படத்தை பார்த்ததும் மயங்கி, நா குழற பேசி, உடல் நடுங்கி கீழே விழுந்த...'' இதைக் கேட்டதும், மீண்டும் அச்சம் கொண்டான்.''டேய் டேவிட்! வாழ்வோ, சாவோ நம் மூவருக்கும் தான். இப்போ பாரதியின் பாட்டை நினைவில் வை. 'அச்சமில்லை... என்று கூறு. வான் இடிந்து வீழுகின்ற போதிலும் நமக்கு அச்சம் என்பதே வரக்கூடாது...' இதுதானடா தினம் தினம் நம் ஆசிரியர் நமக்கு சொல்வது; மனதில் தைரியத்தை வரவழைத்து சொல்; நாம் எடுத்த காரியம் முடிக்க, உன் பதில் கூட உதவியாக இருக்கலாம்,'' என்றான் ஆசாத்.ஒரு நிதானத்துக்கு வந்தான் டேவிட்.''அச்சமில்லை... அச்சமில்லை அச்சம் என்பதில்லையே...'' உணர்ச்சியுடன் கூற கூற, மீண்டும் பழைய டேவிட் ஆனான்.''டேய் ராமு, ஆசாத், ஒரு உண்மை அப்பதான்டா தெரிஞ்சுது. நானும் என் அப்பாவும் வரப்போ, கார் மரத்துல மோதி விபத்துக்குள்ளாச்சு இல்லியா. அப்ப கூட நான் ஒரு வெண்மை நிறத்தில் பட்டம் ஒன்று பறப்பதையும், அதில் ஒரு படம் இருந்ததையும் கூறினேன் அல்லவா...''அந்த பட்டத்தில் இருந்தது வேறு யாரும் அல்ல; அதே பெரிய ராஜாதான். அப்படி என்றால் அவர்தான் எங்க கார் விபத்துக்குள்ளாகவும், மருத்துவமனையில் சேரவும் காரணமாக இருந்திருக்கிறார் என்று புரிகிறது,'' என்றான். ''எப்படியோ அவர் உன் அப்பாவோடு நிறுத்திக்கொண்டார்; என் அப்பாவிடம் அவர் பருப்பு வேகல,'' என்று ஆசாத் கூறியதும், இருவரும் சிரித்தனர்.''டேய் நாம இப்ப முக்கிய கட்டத்துக்கு வந்திருக்கோம். இதோ பூட்டி இருக்கே; இந்த அறைதான் பெரிய ராஜா உபயோகப்படுத்திய அறை. காளியப்பன்னு ஒரு வேலைக்காரன் மட்டும் வாரா வாரம் புதன் கிழமை வந்து அறையை சுத்தம் செய்வாரு. அவர் கொள்ளு தாத்தா காலத்தில் இருந்து, இந்த அரண்மனையில் கிட்டத்தட்ட, 150 வருஷமா அவங்க வாரிசுகள் வேலை பாக்குறாங்க. ''அதனால காளியப்பன் புதன் கிழமை வேலைக்கு வர்றப்போ, குளிச்சிட்டு, நெற்றியில சந்தனம், குங்குமம் வெச்சு சாப்பிடாம வருவாரு. இடுப்புல துண்டு கட்டி மரியாதையா வேலை செய்துட்டு, பிறகுதான் அம்மா கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடுவாரு!''''ஓ... நல்லதா போச்சே. அவரிடமே நாம பெரிய ராஜா பத்திய விஷயத்தை கேட்டு தெரிஞ்சுக்கலாமே,'' என்றான் ஆசாத்.உதட்டை பிதுக்கினான் ராமு.''ஏண்டா அவர் எதுவும் சொல்ல மாட்டாரா,'' என்றான் ஆசாத்.''ஆமாம். இங்கும் வரும் போது மவுனமாக தான் வருவாரு. அதே போல் சாப்பிடும் போதும் பேச மாட்டாரு; சம்பளம் வாங்கும் போது மட்டும், அப்பாவிடம் பேசுவார். அப்பாவுக்குத்தான், பெரிய ராஜா பத்திய முழு விவரம் தெரியுமே... அதனால, காளியப்பனிடம் எதுவும் கேட்கமாட்டார்,'' என்றான் ராமு.''ஆனால், நமக்கு கிடைத்த காளியப்பனை விட்டு விடக்கூடாது. வரும் புதன் கிழமை எப்படியாவது பேச வைத்து பெரிய ராஜா பற்றிய முழு உண்மையையும் தெரிஞ்சிக்கணும்,'' என்றான் டேவிட்.அப்போது, பெரிய ராஜா அறையை நோக்கி வேகமாக வந்தான் காளியப்பன் மூவரையும் முறைத்து பார்த்தான். உடனே, பெரிய ராஜா அறையை திறந்து, தொங்கவிட்டிருந்த தன் வேட்டியை எடுத்து கட்டி கதவை, 'மடார்' என்று சாத்தி விட்டு சென்று விட்டான்.மூவரும் திகைத்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஆசாத் மிகுந்த அச்சத்துடன் அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.''என்னடா! எனக்கு பாரதி பாட்டை சொல்லி தைரியமூட்டியவன் இப்படி அஞ்சி ஓடுறான்,'' என்றான் டேவிட்.''ஏண்டா, ஒருவேள இவன் ஒடம்புல அந்த ஆவி புகுந்திருக்குமோ,'' என்றான் ராமு.''நோ சான்ஸ். உங்க பெரிய ராஜா ரொம்ப பொல்லாதவரு; அடுத்தவங்களை தான் அச்சுறுத்துவாரே தவிர, அவர் பயந்து ஓட மாட்டார்,'' என்றான் டேவிட்.''ஆமா நீ சொல்வதும் சரிதான். ஆனா, நாம ஆசாத்தை இப்படியே விட்டுடக்கூடாதே. இது சந்திரமுகி பங்களா மாதிரிதான். அவனுக்கு எப்படி வெளியே போறதுன்னே தெரியாதே,'' என்று கவலையோடு கூறினான் ராமு.''ஏன் ராமு அவன் ஓடின இடத்துல இப்ப என்ன வரும்,'' என்று கேட்டான் டேவிட்.''அதுதான் எனக்கு கவலையா இருக்கு டேவிட். இவன் சென்ற இடத்துக்கு கொஞ்ச துாரத்துல இரு வழிபாதை வரும். ஒன்று நந்தவனம் செல்லும் பாதை; மற்றது பெரிய ராஜாவை அடக்கம் செய்யப்பட்ட இடுகாடு. அவன் அங்கே போயிட்டா என்ன செய்யறது...'' என்று பயந்தபடி கூறினான் ராமு.அப்போது, ராஜாவின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது.காளியப்பன் வருகிறான் என்று அச்சம் கலந்த திகிலில் பார்த்தபடி இருந்தனர் இருவரும். அவர்கள் எதிர்பார்த்தபடி காளியப்பன் வரவில்லை. மாறாக, ராமுவின் தந்தை கோவிந்த நாத சிம்மர் வந்தார்.''ஏய் ராமு! போறப்போ காளியப்பனா போனவரு, இப்ப உன் அப்பாவா வருகிறார்... அப்ப இது ஆவி டோய்,'' என்று பீதியுடன் டேவிட் கூற, விழுந்து அடித்து ஓடினர்.- தொடரும்...