திருடனல்ல...
வினு கல்லூரியில் படிக்கிறான். படித்தானா? இல்லை; படிப்பது போல நடித்தான். வினுவுக்கு ஜாலியாக ஊர் சுற்றுவது என்றால் படு ஜாலி. விருப்பம் இருந்தால் கல்லூரிக்கு போவான். இல்லாவிட்டால் நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பது, சினிமாப் பார்த்து ஜாலியாகப் பொழுதைப் போக்குவான். இதைக் கேள்விப்பட்டு கிராமத்தில் வாழும் அவனுடைய தந்தை ராமசாமி பட்டணத்துக்கு வந்தார்.வினுவை வாய்க்கு வந்தபடி திட்டி அவனுடைய அறையைக் காலி செய்ய வைத்தார். பிறகு தன் நெருங்கிய நண்பர் நடராஜனிடம் அழைத்துக் கொண்டு போய், ''நடராஜா! இனி இந்தப் பொறுக்கிப் பயலை கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு. உன் வீட்டு மாடி அறையில் இவன் தங்கி இருந்து கொண்டு படிக்கட்டும். இவனைத் தேடி வரும் இவனுடைய நண்பர்களை உள்ளே விடாதே!'' என்று கூறி குமாரின் கையில் இருநூறு ரூபாயைக் கொடுத்து, ''இந்த இதை மாதச் செலவுக்கு வைத்துக்கொள். நடுவில் பத்துப் பைசா கூட அனுப்ப மாட்டேன்,'' என்றார்.நடராஜா! நீயும் இவன் பணம் கேட்டால் தரக் கூடாது,'' என்று கூறி விட்டு, ஊருக்குப் போய் விட்டார் ராமசாமி.வினுவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அதைத் தவிர அவனால் வேறு என்ன செய்ய முடியும். நடராஜன் வீட்டு மாடி அறையில் சிறைக் கைதியைப் போலச் சிக்கிக் கொண்ட வினு, அன்று மாலை நேரத்தில் அறைக் கதவை பூட்டி விட்டு போய் காபி சாப்பிட்டு விட்டு வந்தான். மிச்சப் பணத்தை வைப்பதற்காக மேஜை டிராயரைத் திறந்தான். திடுக்கிட்டான்.அதில் இருந்த 50 ரூபாய் நோட்டு ஒன்றைக் காணோம்! பூட்டியிருந்த அறைக்குள் எப்படி ரூபாய் மாயமாய் மறைந்தது?வினுக்கு புரியவில்லை. ஆனால் மற்றொன்று புரிந்தது.'அப்பா தந்து விட்டுப் போன 200 ரூபாயில் 50 ரூபாய் குறைந்தது விட்டது. 150 ரூபாயில் மாதம் மூன்று வேளை சாப்பிடுவதே கஷ்டம். அதனால் சினிமாவும் சீட்டாட்டமும் கட். எப்பொழுதாவது சிகரெட் பிடித்து கொள்ளலாம்' என்று தீர்மானித்துக் கொண்டான்.அதன்படி அவன் நடந்து கொண்ட போது, அவன் நண்பர்கள் அவனை விட்டு விலகி போய் விட்டனர்.நண்பர்களுடன் சினிமா எதுவுமே இல்லாமல் போனதும், வினுக்கு நேரம் கிடைத்தது. அதனால் அதுவரை பாட புத்தகங்களையே புரட்டிப் பார்க்காத வினு அவற்றைப் படிக்க ஆரம்பித்தான்.சில சமயங்கில் மட்டும் சிகரெட் குடித்தான். இப்படியாக அந்த மாதம் ஓடியது.அடுத்த மாதம் வினுவின் தந்தை ராமசாமி, அவன் செலவுக்காக 200 ரூபாய் அனுப்பி வைத்தார். அவன் கல்லூரிக்குப் போகும் அவசரத்தில் அந்த ரூபாயை வாங்கி மேஜையில் வைத்து விட்டு கல்லூரிக்குப்போய் விட்டான். மாலையில் திரும்பி வந்து மேஜையைத் திறந்து பார்த்தால், 100 ரூபாயைக் காணோம். இப்போதும் திடுக்கிட்டான்.'பூட்டிய அறைக்குள் வைத்த பணம் எப்படி காணாமல் போகிறது?' என்பது அவனுக்குப் புரியவில்லை. இந்த 100 ரூபாய் வைத்துக்கொண்டு முப்பது நாள் பொழுதை ஓட்ட வேண்டி இருந்தது.சிகரெட்டுக்குச் செலவழிக்கப் பணம் இல்லை. காலையில் பலகாரம் சாப்பிட முடியவில்லை. பசியும், பட்டினியும் பல பண்புகளை அவனுக்கு கற்றுத்தந்தன.அதற்கு அடுத்த மாதம் அப்பா அவனுக்கு 200 ரூபாய் அனுப்பி இருந்தார். இப்போது அவன், திருடனைப் பிடிக்க வேண்டும்! என்று தீர்மானித்தான்.ரூபாயை வாங்கி மேஜைக்குள் வைத்து விட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு போய் ஒரு மறைவில் நின்று கொண்டு கவனித்தான்.சிறிது நேரத்தில் வீட்டுக்காரர் நடராஜன் மாடிக்கு வந்து பூட்டைத் திறந்து, அறைக்குள் நுழைந்து மேஜையில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, அறைக்குள் கோபமாக நுழைந்த வினு, ''மாமா! இது என்ன வேலை?'' என்று படபடத்தான்.நடராஜன் சிரித்துக் கொண்டே ''இதுவா? உன்னைத் திருத்துவதற்காக நானும், உன் அப்பாவும் திட்டம் போட்டு செய்த வேலை! செலவுக்குப் பணம் இல்லாவிட்டால், பண்புகள் தன்னாலே வளர்கின்றன. மாதா மாதம் உனக்கு வந்த பணத்தில் கொஞ்சத்தை நான் திருடி எடுத்துக் கொண்டு போனேன். அதனால் உனக்குக் கெட்ட வழியில் செலவழிக்கப் பணம் இல்லாது போயிற்று. ஆகவே, நீ படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தாய். இதற்காகத்தான் நான் திருடனாக மாறினேன். இது தவறா?'' என்று கேட்டார்.''இல்லை மாமா! என்னைத் திருத்திய நீங்கள் திருடர் அல்ல; திருவள்ளுவர்!'' என்றான் வினு. ***