உள்ளூர் செய்திகள்

கூச்சமும், முடக்கமும்!

தென்காசி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2016ல், 9ம் வகுப்பு படித்த போது, ஒவ்வொரு திங்கள் கிழமையும் வழிப்பாட்டு கூட்டம் நடைபெறும். அது முடிந்த பின், மேடையில் உரையாற்ற, மூன்று மாணவர்களை தேர்வு செய்வார் ஆசிரியர்.அன்று, அதில் ஒருவனாக நின்றிருந்தேன். வரிசைப்படி, ஒலிபெருக்கி கருவியை கையில் கொடுத்தனர். அதைப் பிடித்தபடி, கூட்டத்தை பார்த்தபோது பதற்றம் மேலோங்கியது. பேசும் வார்த்தைகளில், தெளிவு இன்றி திக்கினேன்.கூடியிருந்த மாணவர்களிடம் ஏளன சிரிப்பலை படர்ந்தது. செய்வதறியாது திகைத்து இறங்கினேன். வாய்ப்பை தவற விட்டதால் கவலையுற்றேன்.மறுநாள், 'அடுத்து நடக்கவிருக்கும் வழிப்பாட்டு கூட்டத்தில், நீ தான் பேச வேண்டும். உன் பெயரை முன்மொழிந்து விட்டேன்...' என்றார் தமிழாசிரியை மாரியம்மாள்.தயக்கத்துடன், ஒப்புக் கொண்டேன்.தொடர்ந்து, கடும் பயிற்சிகள் செய்தேன். தைரியத்துடன், 30 நிமிடங்கள் தெளிவாக பேசினேன். பாராட்டி, பரிசளித்தார் தலைமை ஆசிரியர். கிண்டல் செய்தவர்கள் தலை கவிழ்ந்தனர்.எனக்கு தற்போது, 20 வயதாகிறது; பொறியியல் கல்லுாரியில், இளங்கலை படிக்கிறேன். பல மேடைகளில் ஏறி பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளேன். இனியும், வெல்வேன் என்ற நம்பிக்கை நிரம்ப உள்ளது. பள்ளியில் கூச்சத்தால் முடங்கிய என்னை உற்சாகப்படுத்திய ஆசிரியையை நன்றியுடன் போற்றுகிறேன்.- சை.நியந்தர் குற்றாலநாதன், தென்காசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !