உள்ளூர் செய்திகள்

தாமதத்தால் வந்த ஒழுங்கு!

திருவாரூர் மாவட்டம், வடமட்டம், உயர்நிலைப் பள்ளியில், 1980ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது...என் ஊருக்கும், பள்ளிக்கும் இடையே, 3 கி.மீ., துாரம். பேருந்தில், 20 பைசா கட்டணம். அதை தர முடியாத ஏழ்மை நிலையில் இருந்தது குடும்பம். தினமும் காலையில் எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து, தாமதமாக தான் பள்ளிக்கு செல்ல நேரிடும். வகுப்பு ஆசிரியர் சக்கரபாணி பாடம் நடத்திக் கொண்டிருப்பார்.வகுப்பறையில் நுழையும் போதே, 'இன்னிக்கும், லேட்டா ரவி...' என்று சிரித்தபடியே அனுமதிப்பார். தாமத வருகையால், 'எல்.ரவி' என்ற என் பெயரை, 'லேட் ரவி' என்றே மாணவர்கள் செல்லமாக அழைப்பர். கவனமாக படித்து, ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எனக்கு, 57 வயதாகிறது. பாடம் நடத்தும் வகுப்புக்கு, ஒருமுறை கூட, தாமதமாக சென்றதில்லை; பள்ளிக்கு தாமதமாக வரும், மாணவ, மாணவியரையும் கடிந்து கொண்டதில்லை.கிராமப்புற சிறுவர்கள், பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்களை புரிந்து, பணியை சிறப்பாக செய்துவருகிறேன்!- எல்.ரவி, தஞ்சாவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !